சந்தப் பாடல்கள் -1

சந்தப் பாடல்கள் -1
(23-5-2004 ல் இலண்டன் தமிழ் வானொலி ஓடி விளையாடு பாப்பா வில் ஒலிபரப்பானது)

சந்தப் பாடல்கள் திறமைக்கு ஊக்குவிப்பு.

தொட்டிற் பாடல், தாலாட்டுப்பாடல்கள் இனிய ஓசை நயம், அழகியலும் கொண்டது. இது நல்ல தாள லயத்தோடு பாடப் படும் போது, செவிக்கு இதமாகிக் காதின் இயக்க சக்தியைக் கூர்மையாக்குகிறது.

தால் என்றால் நாக்கு.
ஆட்டுதல்- நாவை அசைத்தல், ஆட்டுதல், தால் ஆட்டுதல்.
ஆராட்டுதல், தாலாட்டுதல் ஒரே கருத்துடைத்து.
ஆதி காலத்தில் (பழங்குடியினர்) நாவை அசைத்து ஆட்டித் தானே முதலில் ஒலி எழுப்பினர்.

எனது அம்மம்மா ஆராட்டுதல் என்றே கூறினார்கள். குழந்தை அழுதால் கொஞ்சம் ஆராட்டுங்களேன் என்பார்.

”…ராராரோ…ராராரோ…
ஆராரோ ஆரிவரோ…
அடித்தாரைச் சொல்லி..அழு!”…

என்று…அந்த அந்த நிலைமைகளை வைத்து இட்டுக் கட்டி, ஆனால் சந்தமுடன் பாடப் படுவதுமாகிறது தாலாட்டு.


இப்படிக் கேட்டுப் பழகும் அனுபவம் பிற்காலத்தில் இசை பயில்வதில் குழந்தைகளின் திறமையையும், பாடல் இயற்றும் திறனையும் மிக எளிதாகப் பெறும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.

சிரமப் பட்டு மனதில் பதிக்காது, தானாகக் காது வழி புகுந்து, இதயத்தில் இறங்கும் இப் பாடல்களால் பிள்ளைகளின் பிற்காலம் மிகச் செழிப்பாகும் என்று மனவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மூன்று வயது முதல் ஏழு வயதுக்குரிய பிள்ளைகளிற்கு ஓசை நயம் செறிந்த பாடல்கள் மிகச் சுலபமாக மனதுள் இறங்குகின்றன. இந்த எளிய ஓசை நயத்தால், சொற்களுடன் மனம் இலயித்து ஈடுபடுகிறது. சொல்லின் தொடர்பால் கருத்தோடு மனம் இணைகிறது. அறிந்த பொருட்களின் கருத்துடன், தான் அறியாத பொருளின் கருத்தையும் அறியும் வாய்ப்பைப் பிள்ளைகளிற்குத் தருகிறது.

உதாரணமாக:-
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சந்தனச் சிலையே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கண்ணின் மணியே சாய்ந்தாடு.

குண்டு மணியே சாய்தாடு
குயிலே மயிலே சாய்ந்தாடு
அன்னக் குஞ்சே சாய்தாடு
அம்மா மடியில் சாய்ந்தாடு

இது எளிய நடைச் சந்தப் பாடல். குழந்தை இலக்கியமாகும். பல தடைவை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அலுப்புத் தராதவை. இது குழந்தைகளின் பிற்கால பாடசாலை இலக்கிய அனுபவத்திற்கு அடிப்படையாகிறது.

(இரண்டாவது அங்கம் அடுத்த முறை தொடரும்.)


ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2004.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (14-Feb-12, 12:05 am)
பார்வை : 473

மேலே