இலவு காத்த கிளி - சின்ன கதை -
பச்சை நிறம் கொண்ட இலவம் பஞ்சின் பழத்தைப் பார்த்த ஒரு கிளி இந்தப் பழம் உண்ண இது சரியான நேரம் இல்லை; தற்போது பச்சைக் காயாக இருக்கிறது; இது விரைவில் பழுக்கும்; அப்போது இதனைச் சுவைத்து உண்ணலாம் என்றெண்ணிக் காத்திருந்தது. காலமும் சென்றது. பழமும் பழுக்கவில்லை. திடீரென்று ஒரு நாள் அந்த இலவங்காய் வெடித்து வெண்ணிறப் பஞ்சு எங்கும் சிதறிப் பறந்தது. கிளியும் ஏமாந்தது.
இறைவனை வணங்க இது காலமில்லை; நான் தற்போது இளைய வயதுடன் இருக்கிறேன். சற்று முதிர்ந்த பிறகு இறைவனை வணங்கி இன்புறலாம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொள்கிறான். காலமும் செல்கிறது. வயது ஏறினாலும் இறைவனை வணங்கும் வயது வந்துவிட்டதாக யாரும் நினைப்பதில்லை. காலன் வந்து உயிரைக் கவர்ந்து சென்ற பின் காலத்தை எல்லாம் வீணே கழித்து ஏமாந்தோமே என்று அந்த ஜீவன் வருந்துகிறது.
இளமையில் அனுபவித்து முடிக்க வேண்டியவற்றிற்கு முடிவே இல்லை. இலவங்காயும் பழுக்கப் போவதில்லை. அதனால் கிளியைப் போல் ஏமாறாமல் இன்றே இறைவனை வணங்கி அவன் புகழ் பாடி 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்றெண்ணி அவன் தொண்டினைச் செய்து அவன் அடியாராய் வாழ்வோம்.
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.