அழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....
அழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....
மொழி எனப்படுவது என்ன?
எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்கணமா? காதல் – வீரம் என்பதைக் கற்பனை நயத்துடன் விளக்கும் இலக்கியமா? அல்லது எண்ணங்களையும் ஏடல்களையும் பரிமாறிக்கொள்ள பயன்படும் தொடர்புக் கருவியா? இவற்றில் எதுவுமே இல்லை!
மொழி எனப்படுவது ஓர் இனத்தின் அடையாளம் – பண்பாடு – வாழ்வியல் – வரலாறு எல்லாமே! மொத்தத்தில் ஓர் இனத்தின் உயிரும் – உயிர்ப்பும் மொழியே ஆகும்.
ஓர் இனம் அழியாமல் இருக்க அந்த இனத்தின் மொழி உயிரோடும் - உயிர்ப்போடும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து தமிழ் இன்றளவும் உயிரோடு இருப்பதே நமக்குப் பெருமைதரக்கூடிய வரலாறாகும். காலத்தால் தொன்மையும் தெய்வத்தன்மையும் பெற்று இருப்பதால்தான், நாடோ - அரசோ - ஆட்சியாளரோ இல்லாத நிலையிலும் தமிழும் தமிழினமும் இன்றும் நிலைத்திருக்கின்றன.
உலகில் தோன்றிய பல பழம்பெரும் மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் மட்டுமே இன்றளவும் வளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது வரலாற்று உண்மை.
4500 ஆண்டுகளுக்கு முன் பிரமிடுகளைக் கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்து மொழி இன்று உலக வழக்கில் இல்லை.
3000 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் எழுதப்பட்ட வட இந்திய மொழியாகிய சமஸ்கிருதம் இன்று வழக்கில் இல்லை. தேவ மொழியாகப் போற்றப்பட்டாலும் சம்ம்ஸ்கிருதம் மக்கள் வழக்கிலிருந்து செத்தமொழியாகவே ஆகிவிட்டது. இம்மொழியைப் பேசவோ எழுதவோ அல்லது புரிந்துகொள்ளவோ அது தோன்றிய இந்திய மண்ணிலேயே எவரும் இலர் என்றே சொல்லலாம்.
2800 ஆண்டுகளுக்கு முன் உரோமாபுரி மன்னர்கள் வளர்த்த தாய்மொழியும் ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழியுமாகிய இலத்தீன் மொழி இன்று இல்லை. மேலைநாட்டு அகராதிகளில் மட்டுமே இம்மொழியைக் காணலாம்.
2600 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பெருமான் பேசிய பாலி மொழி இன்று இல்லை. புத்த நெறி உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தாலும்கூட அந்தத் திருநெறி தோன்றிய பாலிமொழி உலக வழக்கிலிருந்து அழிந்துவிட்டது.
2300 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் எழுச்சியோடு உலகை ஆட்டிப்படைத்த மகா அலெக்சாந்தர் பேசிய மொழி; சாக்கிரட்டீசு, பிளாட்டோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் தாய்மொழியான கிரேக்க மொழி கிட்டதட்ட அழிந்துபோய், தற்போது கிரேக்க அரசினால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பெற்று வளர்க்கப்படுகிறது.
2006 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி அன்புவழி காட்டிய ஏசுபிரான் பேசிய அரமிக்–ஈபுரு மொழியும் கிட்டதட்ட அழிந்து போய்விட்டது. இசுரேல் என்றவொரு நாடு உருவானதும் யூதர்களின் எழுச்சி உணர்வு; மொழி உணர்வின் விளைவாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டும் வாழ்விக்கப்பட்டும் வருகின்றது.
மேற்குறிப்பிட்ட மொழிகளுக்கு முற்பட்ட மொழியாகக் கருதப்படும் சீன மொழி காலத்தால் பல்வேறு மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையில் சீன மக்களின் பேச்சு மொழிகள் வேறு வேறாகவும் எழுத்து மொழி மாண்டரின் மொழியாகவும் ஆகிவிட்டது. பழஞ்சீனம் இன்று எவருக்கும் புரிவதில்லை.
ஆனால்... இந்தப் பழம் பெரும் மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமாக வாழ்ந்து... இன்றும் இளமையோடு வாழும் ஒரே மொழி... நம் தமிழ் மொழிதான். இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக தமிழ் மக்கள் பெருமையடையலாம்.
தமிழ் மொழியின் சிறப்புகள்...
தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும் உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான்.
தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும்.
தமிழில் பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப்பார்க்க வேண்டியவை, பிரித்துப்பார்க்க கூடாதவையாகும்.
உதாரணமாக கடவுள் (கட+ உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல. நீ ஆசைகளை , பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும்.
எண்கள் என்றால் அரேபியர்களை தான் கூறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்று தெரியவில்லை. கேட்டால் இந்தியர்களிடம் இருந்து வந்தது என்கின்றனர். வட இந்தியனை கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது. இந்திய அரேபிய குழப்பத்தில் இருக்கும் எண்களை தமிழ் கல்வெட்டுகளில் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
இது சிறிய அளவின் பிரிவுகள் .
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்
இந்த இம்மியளவும் அசையாது என்று நம் பேச்சு வழக்கில் பேசும் சொல்.
தமிழை அழகு தமிழ் ,இசைத்தமிழ் ,அமுதத்தமிழ் என மேலும் பல பெயர்கள் உண்டு . (இணைப்பு கீழே உள்ளது)
தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதொடு மட்டும்மல்லாது அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது .இது மொழியியலார்களின் ஆராய்ச்சி முடிவு .
உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம் .ஆனால் தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும் முடியாது .
ஏன் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை கூட சரியாக மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த தமிழால் மட்டுமே முடியும் .
உதாரணமாக ஆங்கிலம் மற்ற மொழிகளை கடன் வாங்கி வளர்ந்ததால் அதன் சொல் உச்சரிப்புக்கும் எழுத்து உச்சரிப்புக்கும் சம்மந்தமே இருக்காது .
தமிழில் அன்பை இப்படி பிரிக்கலாம் . அ + ன்+ பு (ப்+உ) இந்த எழுத்துக்களை தனித்தனியே எப்படி உச்சரித்தாலும் அதே சொல் தான். LOVE உச்சரித்தால் எல்ஒவிஇ என்று தான் வரும்.
ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள் எனலாம் . அதிலும் ழ உலகமொழிகளில் பிரெஞ்சில் மட்டும் தான் காணப்படுகிறது . (நற்றமிழ் இலக்கணம்:டாக்டர் சொ.பரமசிவம்). தமிழுக்கே சிறப்பான ழகரம் உச்சரிப்புக்கள் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறார்கள் என்பது தான் கவலை. உச்சரித்து பாருங்கள். அல்லது பாடி பாருங்கள் அதன் இனிமை உணர்வீர்கள்.
டாக்டர் கால்ர்டு வேல் போப் என்பவர்கள் தமிழை கற்று திருக்குறள், திருவாசகத்தை மொழிபெயர்த்தவர்கள் ஆவார்கள். கலப்பில்லாத தூய தமிழ் என போப் தான் இறந்த பிறகு கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என பொறிக்க சொன்னார். முக்கியமாக இந்த “கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக “எனும் குரல் கிட்டத்தட்ட 3000 வருடங்கள் முன் எழுதியது. இது இப்போது படித்தாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கும். 3000 வருடங்களுக்கு முன்னர் இப்படி தமிழில் எழுதும் அளவுக்கு (இரண்டு வரியில் இவ்வவளவு அர்த்தம் ) மொழி அப்போதே வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அது எவ்வளவு காலத்திற்கு முதல் தோன்றியிருக்க வேண்டும் என சிந்தித்து பாருங்கள். சீனன் சீன மொழியில் பேசினான் சீனா வளர்ந்தது , பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்சு மொழியில் பேசினான் பிரான்ஸ் வளர்ந்தது. தமிழன் ஆங்கிலத்தில் பேசினான் அமெரிக்கா வளர்ந்தது.
1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்
2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்
3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்
4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்
5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்
6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்
7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)
8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது
9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)
10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.
11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)
12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்
13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)
14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்
15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்
16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்
17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்
18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்
19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது
20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)
21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்
22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்
23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது
24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்
25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்
26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது
27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்
28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்
29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)
30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்
31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது
32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது
33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது
34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது
35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)
36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்
37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)
38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்.
தாய் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
தாலாட்டுப் பாடிய எங்கள் தாய் மொழியே
வாய்மொழி பேசியே வளர்த்தவள் தாய்
வாழ்வெல்லாம் தமிழ் உணர்த்தியவள் தாய்!
வள்ளுவர் இளங்கோ கம்பரென
வாழ்ந்தவர் காவியம் படைத்த மொழி
துள்ளிடும் இசை நயம் நிறைந்த மொழி
தூய நல் இலக்கணம் அமைந்த மொழி!
ஆண்டாள் ஒளவையார் பெண்புலவர்
அன்புடன் பேணிய எம்மொழியே
அணையா விளக்காய் அகிலமெல்லாம்
அலங்கரிக்கும் தமிழே செம்மொழியே!
நாவையே அசைத்துப் பேச வைக்கும்
நம் தமிழ் மொழியே செந்தமிழே
பாவையே எங்கள் தென்மொழியே
பாடுவோம் வாழிய செம்மொழியே!...
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.