குடும்ப சச்சரவு ( இது தேவையா?)
என்னங்க வீட்டுல சண்டை பிடிக்கிறதில்லயா.நானும்தான். வர்ற கோபத்துக்கு
ரெம்பத்தான் திட்டி தீர்த்துவிட்டேன் எப்படியா?? இப்படி!!
சச்சரவு
நிலவைப் பிடித்திடையே நீள்விழிகள் வைத்ததென
நேசமுறும் பெண்ணழகை நினைத்தேன்
கலகம் பிறக்கவெனக் காட்டினிடை இருளள்ளி
காரிகை படைத்தென்ன இறைவா?
மலரை எடுத்தழகு மல்லிகையின் வாசமிட்டு
மகளைப் படைத்தை யென்று மறந்தேன்
மகிழ்வை உடைக்கவென மாங்காய் முறித்தொழுகு
மாம்பாலும் உதடு பட்ட மகிழ்வேன்?
அழகைப் படைத்தவனே அழகுக்கு அழகெடுத்து
அசைந்துவரும் சிலை படைத்தாயென்றே
பழகக் கிடைத்தவளைப் பாயிட்டுப் பார்த்து மனம்
பாதிக்கு மேலிழந்த னிறைவா
குழவிக்கூ டென்றறியா கொண்டசுவைத் தேனள்ளிக்
கொள்ளவெனப் பற்றினனே பிழையா
அழவைத்துப் பார்த்திடவோ அசைந்துவரும் நிழலீந்து
அதற்கெனவோர் பேச்சளித்தாய் இறைவா
தழலைச் சிவந்திருக்கத் தந்தாய்மா ணிக்கமெனத்
தாவிக்கை பற்றவைத்த தலைவா
சுளகைப் பிடித்தவர்க்கு சொல்லிவைத்து விட்டனையோ
சொல்லால் அடிக்குவிதம் முறையா
குழலையென் கைகொடுத்துக் கூடியெழும் கீதமெனக்
கொள்ளென்று பரிசளித்தை மகிழ்வாய்
அழுகை பிறக்குமது ஆனந்தகீதமெனில்
அடுத்துவரு பிறவியென மறைத்தாய்
விழக் கையை நீகொடுத்து வேண்டுமொரு வாழ்வீந்து
வெற்றியினைத் தருவையென்று நினைக்க
நிழலைக் கொள் தருவைத்து நில்லென்று சொல்லிச்சிரம்
நேரெதைநீ நெளியவைத்து நின்றாய்?
மழலைப் பூங்கொத்தினையான் மடியிட்டுப் பாசமழை
மகிழென்று மாதர் வரமீந்தாய்
குழலை முடிப்பவளின் குணம் சினந்து கொஞ்சலெனக்
குளிர்ச்சுனையில் கொதிநீரேன் இறைத்தாய்?