அப்பா ...

" அப்பா " ...
இதுவெறும் வார்த்தையல்ல
உயிருக்கு
உயிர்கொடுத்த உதிரம்...!
வாழ்பவர்களைவிட
வாழ்ந்து மறைந்தவர்களுக்கே
மதிப்பு அதிகம் - இவ்வுலகில்
வாழ்ந்த பொழுது
கொடுக்கத்தவறிய மரியாதையை
இப்பொழுது
கொடுக்கத்துடிக்கிறது மனசு...
விழிகளை இழந்த பிறகு
அன்போடு பார்க்க
ஆசைப்படுகிறது கண்கள்
கண்கெட்ட பிறகு
சூரிய நமஸ்க்காரம்...
உங்கள்
எண்ணங்களின் பிரதிபலிப்பு நான் ...
கண்ணாடி முன் நான்
கண்ணாடியில் பிம்பமாய் நீங்கள்...!
உங்களது எண்ணத்தில்
என்னை சுமந்தீர்கள்
தாயின் கருவறையில்
உயிர் கொடுத்து
வாழ்க்கை என்னும் கடலில்
நீந்தவிட்டீர்கள் ...
அப்பா ...
உயிருக்கு
உயிர்கொடுத்த உதிரம் நீங்கள்...
நாட்களின் நகர்வுகளின்
உங்கள் பெருமையை
அறியும் .... முன்
காலனின் கரங்கள்
உங்களை கவர்ந்துசென்றது ஏனோ ...?
ஆயிரம் தோல்விகள்
வந்தாலும் - நீ
நன்றாக இருப்பாய்
என்ற வார்த்தை தான்
என் நம்பிக்கையின் மூச்சு ...!
தோல்விகளை வெற்றிகளாக்கி
புன்னகையை - உங்களுக்கு
சமர்ப்பிக்க - ஒவ்வொரு நாட்களும்
உங்கள் படம் முன் என் காத்திருப்பு ...!
வானமே எல்லை
வாழ்ந்து பார்....
சமுத்திரத்தில் தவறி
விழுந்து விட்டால்
கால்போனால் என்ன ...?
தலைபோனால் என்ன ...?
முடியும் என்ற நம்பிக்கையோடு
கைகளை துடுப்பாக்கினால்
வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான்
நாளைய நாட்கள்
உனக்காக விடியும்
என்ற உங்கள் வாழ்த்துக்கள்
தோற்றதில்லை - அப்பா ...!
வாழ்க்கை என்னும் கடலில்
ஜெயிப்பதற்காக - நீங்கள்
உயிர் கொடுத்தீர்கள்...!
உங்கள் நினைவுகளில்
நான் நீந்துவதால்
வெற்றிகள் ஒரு நாள்
எனக்கு சந்தன மாலைகளாகும்...!
சந்தனத்தின் மனத்தில்
உங்கள் புகழ் பரவும்
வாழும் வாழ்க்கையே
தந்தைக்கு சமர்ப்பணம்...!