அன்புடன் அந்தரங்கம்

சூரியன் மறையும் முன்னரே
வானவீதியில் வந்து விட்டது
அந்த பௌர்ணமி நிலவு !

தென்றல் காற்று இதமாய்த்
தலை கோத மெதுவாய் நடந்தேன்
என் தோட்டத்துப் பூக்களைப்
கணக்கெடுப்பத்ற்காக!

பூங்கரங்கள் தாழிடும் முன்னர்
அவசர அவசரமாய்த் தேனைத்
திருடிக் கொண்டிருந்தன
வண்டுகள் ரீங்காரமிட்டபடியே !

ஆனால் – அந்த மஞ்சள் நிற மலரில்
மட்டும் இரு வண்டுகள் ஏதோ
பேசிக்கொண்டிருக்க – அதை மறைமுகமாய்
ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தேன் .

வானமங்கை தன் கருங்கூந்தலை
அவிழ்த்து விட்டது போல் எங்கும்
இருள் பரவிக் கொண்டு இருந்தது !
அந்த மஞ்சள் நிற மலரும்
கதவைத் தாழிட்டுக் கொண்டது.

விடியும் வரை காத்துக்கொண்டிருந்தேன் .

விடிந்தது – இயற்கைக்கு மாறாய்
வண்டுகள் சென்ற மலர் மட்டும்
மொட்டாகவே இருந்தது .

பொறுமையை இழந்து நானே
சென்று இதழ்களைத் திறந்தேன்

உள்ளே –

மகரந்தக் கட்டிலில் வியர்வைப்
பூக்களோடு அந்த இரு வண்டுகள் ….

இப்போது புரிகிறது
இரவெல்லாம் என்ன நடந்ததென்று.

எழுதியவர் : கார்த்திகா கிருஷ்ணன் (18-May-12, 10:17 am)
பார்வை : 481

சிறந்த கவிதைகள்

மேலே