அழகி சார் அவள்

ஒரு ஊரில் ஒரு தேவதை இருந்தாள் என தொடங்கலாமென இருந்தேன்...

எல்லோரும் தன் காதலியை தேவதை என்கிறார்கள்...
தேவதையை காதலிப்பவர்களுக்கு பூமியில் என்ன வேலை என்ற ஒரு ஸ்டேட்டஸை எங்கேயோ எப்போதோ படித்ததாக ஞாபகம்...

அதனால் அவளை இங்கே அழகியென குறிப்பிடுகிறேன்...

நான் படித்த பள்ளி மைதானத்தில்
ஒரு மரமிருக்கிறது...
மஞ்சளாய் பூ உதிரும் அந்த பெயர் தெரியாத மரம் தான் எனக்கு மிகவும் பிடித்த மரம்...
வட்டமாய் நிழல் பரப்பும் ஒரு பச்சை குடை போலிருக்கும்
அந்த மரத்தின் பெயரை நான் தெரிந்து கொள்ள மெனக்கெடவில்லை...
பிடித்துப் போன பிறகு பெயர் அவசியமா என்ன?

அதனடியில் அமர்ந்து தான் அவளை பற்றி ஒரு கவிதை எழுதினேன்...
அந்த வகையில் எனக்கது போதி மரம்...
காதல் போதி மரம்...
(அது என்ன கவிதைனு சொன்னா கல்லடி கிடைக்க நெறய வாய்ப்பிருக்கு. அதனால வேண்டாம்...)

அவளை பற்றி நான் நினைக்க ஆரம்பிக்கையில்
ஒரு மழை மாதத்து காலையில் அவள் வெள்ளையான ஒரு உடையில் குடைபிடித்தபடி வருவதான காட்சி மனதில் ஓடும்...
நிஜத்தில் அவளை நான் அப்படியான மழைக்கால காலையில் பார்த்ததேயில்லை...
ஆனால் அவளை பற்றியான பேச்சுக்களை தொடங்கும் முன் அவளை நான் என் எண்ணங்களில் அப்படித்தான் பார்க்கிறேன் இன்றுவரை...
கூடவே காற்றில் மஞ்சளாய் பூக்களை உதிர்த்துக் கொண்டு அரைநூற்றாண்டு மௌனத்தோடு அந்த மரமும் ஞாபகங்களில் வந்து போகும்...

அவளிடம் நிறைய பேசியிருக்கிறேன்...
இதை இதையெல்லாம் பேசலாமென ஒத்திகை பார்த்து
அத்தனையும் பேசாமல் 'அப்புறம்' என்ற வார்த்தை மட்டும் தொக்கி நின்றபடியாக உரையாடல்கள் எத்தனையோ முடிந்திருக்கின்றன...

திரும்ப திரும்ப
என் காதலை நினைவூட்டி ஓய்ந்து போன நிலையில்
இடையில் ஒரு நாளின் குறுந்தகவல் உரையாடல் இங்கே...
கற்பனைகளை சொற்களில் சொல்லும் போது அது மிகையாக தோன்றும்...
எழுத்து வடிமாய் பேசாமல் பேசிவிடும் ஒரு கடிதமோ...
அல்லது
ஒரு குறுந்தகவலோ தான் காதலுக்கு அழகென நினைப்பவன்.
ஏதோ நினைத்து அவள் சொன்னதை தான் எத்தனை விதமாய் யோசிக்கவும் வாசிக்கவும் முடிகிறது ஒற்றை குறுந்தகவலில்...
அலைப்பேசி எடுத்தேன்...
ஒரு நிமிடம் கண் மூடிக் கொண்டேன்.
குடை பிடித்து அவள் வரத் தொடங்கியிருந்தாள் ஒரு மழைமாத காலையில்...
கூடவே அந்த பச்சை குடை மரமும்...

ஒரு கவிதையை குறுந்தகவல் அனுப்பினேன்...

"nice" என பதில் அளித்தாள்...

ஐந்து நிமிடம் அந்த ஒற்றை வார்த்தையை ரசித்து விட்டு ஒரு குறுந்தகவலை அனுப்பினேன்.

நான் : நேத்து உன் பேர் சொல்லி தூக்கத்தில் புலம்பினேனாம்.
வீட்ல யாருன்னு கேட்டாங்க...

அவள் : நீ புலம்புறத்துக்காக எல்லாம் நான் உன்ன லவ் பண்ண முடியாது...

நான் : வேற என்ன பண்ணினா உனக்கு என்ன பிடிக்கும்?

அவள் : உன்ன பிடிக்காதுன்னு நான் சொல்லவேயில்லையே... ஆனா லவ் வேண்டாம்...

நான் : நீ தான் என் கவிதைக்கு ரா-மெட்டீரியல் தெரியுமா?

அவள் : உனக்கு ஏன் என்ன பிடிச்சிருக்கு?
உன்ன ஏன் நான் காதலிக்கணும்? காரணம் சொல்லு...

நான் : பிடிச்ச விஷயத்துக்கு காரணம் தேடணுமா என்ன? நீ எது செய்தாலுமே பிடிக்கும்.
என்னால உன்ன காரணம் இல்லாமலேயே காதலிக்க முடியும். அது தான் காரணம்.
அவ்ளோ தான்...

அவள் : காரணம் இல்லாம எந்த விஷயமும் இந்த உலகத்தில் நடக்காது.
ஸோ... ரீஸன் சொல்லு அவ்ளோ தான்...

நான் : நீ குழந்தை மாதிரி ஊஞ்சல் ஆடிட்டு இருந்த ஒரு காரணம் மட்டும் கூட போதும் உன்ன காதலிக்க...

அவள் : சரி நீ கவிதையும், காரணமும் நல்லா தான் சொல்ற... நாம ஏன் நல்ல ப்ரண்டஸா இருக்க கூடாது?

நான் : ஓ... இருக்கலாமே...
ஒரு மூணு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்..
அதுக்கு அப்புறம் வாழ்க்கை முழுதுமே ப்ரண்ட்ஸா இருக்கலாம்.
அனா அது வரைக்கும் என்ன காதலிக்க கொஞசம் முயற்சி செய்யேன்...

அவள் : நீ மாறவே மாட்ட...

நான் : நான் ஏன் மாறணும். உன்ன காதலிக்கிறது ஒண்ணும் எனக்கு தப்பா தெரியலையே...

அவள் : நீ ஸ்டேட்டிக்ஸ் மாதிரி இருக்கிற... உன்னை எல்லா நேரத்திலும் புரிஞ்சுக்கிறதே கஷ்டமா இருக்கு...
போதும் இதுவரைக்கும் மெஸேஜ் பண்ணிது.
நீ மாற கொஞ்சம் ட்ரை பண்ணு. கஷ்டமா இருக்கு. நீ இப்படி இருக்கறது...

அந்த நாள் அதற்கு பின் நான் அவளுக்கு குறுந்தகவல் அனுப்பவில்லை...

அடுத்த நாள்...
அலைப்பேசி எடுத்தேன்.
கண்களை மூடிக் கொண்டேன்.
மழைக்கால காலை...
வெள்ளை உடையில் குடை பிடித்தபடி வருகிறாள் அவள்...
கூடவே மஞ்சள் பூ உதிர்த்தபடி அந்த மரம்...

ஒரு கவிதையை குறுந்தகவல் அனுப்பினேன்...

nice pa.. என்றாள்.

அழகி சார் அவள்...

எழுதியவர் : சிவா பிரம்மநாயகம். (7-Jun-12, 11:57 pm)
Tanglish : azhagi saar aval
பார்வை : 981

மேலே