[277 ] கட்டுரை (10 ) கலைமதி ஆனந்த்தின் சில கவித்துவ வரிகள்..
மீண்டும் கலைமதி ஆனந்த் அவர்களின் புதுக் கவிதைகளிலிருந்து, வித்தியாசமான கற்பனை வித்தியாசமான சொல்லாடல்:
கவிதை : சுதந்திரம்
மஞ்சள் நதியில்
குளிக்கிறது
பூப்பெய்திய
காலை வானம்..
மெய் நசுங்கிய புல்
நிமிர்கிறது..
'கால் சிறை' கடந்தபின்..
வான் நோக்குகிறது
விதைக்கூட்டிலிருந்து
விடுதலை பெற்ற
தளிர்!
அறைகுறையாய்
வளர்ந்த இறக்கைகளை
அடித்துக் கொள்ளுகிறது
பறவைக் குஞ்சு..
காற்றின் நகைச்சுவைக்குச்
சத்தமிட்டுச் சிரிக்கின்றன
தென்னை மரங்கள்..
வயதுக்கு வந்துவிட்ட நான்
சுதந்திரத்தை ரசிக்கிறேன்..
ஜன்னல் கம்பிகளுக்கிடையே!
இயற்கையில் எல்லா இடங்களிலும் கொஞ்சம் அழகு, கொஞ்சம் எழுச்சி, கொஞ்சம் தவிப்பு, கொஞ்சம் மகிழ்ச்சி, ஆனால் ஒரு இளம் பெண்ணிடம் கொஞ்சம் ஏக்கம் எனக் கலந்து காட்டி விட்டுச் செல்கிறது இக்கவிதை.
நானும் விடைபெறுகிறேன் இத்துடன்..
நன்றி வணக்கம்.
எசேக்கியல்