தமிழ் நாட்டில் பஞ்சம் 1876-1888
தமிழ் நாட்டில் 1876 - 1888 ல் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி ச.வேதநாயகம் பிள்ளை (1826 - 1889)அவர்கள் பாடிய பாடல். பஞ்சம் எவ்வளவு கொடுமையாய் இருந்திருக்குமென்று பாருங்கள்.
இராகம்:உசேனி
பல்லவி
பஞ்சம்தீர் ஐயா – உனையன்றித்
தஞ்சம் யார் ஐயா (பஞ்சம்)
அநுபல்லவி
வஞ்சக மேகம் உலோபர்கள் போலே
மண்ணில் மழை பொழியாமையினாலே
சஞ்சலமாகித் தளர்ந்தோம் மென்மேலே
சாமிகதி உந்தன் தாமரைக் காலே (பஞ்சம்)
சரணங்கள்:
எட்டுநாள் பத்துநாள்.............பட்டினியோடே
இடையிலே கந்தை.......இருகையில் ஓடே
ஒட்டி உலர்ந்த உடல்...............என்புக்கூடே
ஒரு கோடி பேர்கள்.............வசிப்பது காடே
ஊரும் இல்லாமல் குடிக்கத் தண்
ணீரும் இல்லாமல் அன்னமெனும்
பேரும் இல்லாமல் பசி தீர்க்க
பாரில் அனேகர் பரதேசி ஆனாரே
ஊரில் அனேகர் உயிர் மாண்டு போனாரே (பஞ்சம்)
தாரங்களையே..............புருஷர் கைவிட்டார்
தந்தைதாய்...பிள்ளைகளை விலையிட்டார்
வேரும் இலையுங்கிழங்கும்......சாப்பிட்டார்
வெறுங்கையராய் வெளியே......புறப்பட்டார்
வேலியும் அற்றார், பெண்சாதிகள்
தாலியும் விற்றார், வேலைசெய்து
கூலியும் பற்றார், பலபல
சோலிகள் உற்றார்,
தோலும் எலும்புமாய்த் தோன்றியே சோம்பினார்,
பலரும் தாய் முலைப்பால் அற்றுத் தேம்பினார் (பஞ்சம்)
பஞ்சம் இதுபோலக்...............கண்டதிலையே
பலபேர் அடுப்பில்.....வையார்கள் உலையே
நஞ்சம்போல் நாட்கு...நாள் ஏறும்விலையே
நாங்கள் படுந்துன்பம்.......நானூறு மலையே
நரர்கள் மெய்வாடி மனமிக
உருகித் தள்ளாடிக் கண்ணீர் ஆறாய்ப்
பெருகியே ஓடிப் பிக்ஷை கேட்க
வருபவர் கோடி
இரவு பகல் எங்கும் ஏழைகள் சத்தமே
பரனே கலியொடு பண்ணினார் யுத்தமே (பஞ்சம்)
ஏரி குளம் நதியாவும் ....................நீர்கண்ட
ஏகமாக்கோடைக்கனல்.............எங்குமண்ட
சேரிமாடுஆடுகள் .....செத்துப்போய்வெண்ட
ஜெகமுழுதும் ..............உதராக்கினி அண்ட
தீனர்கள் நாட அவர்களை
ஈனர்கள்ஜாட தங்கள் கத
வானதை மூட அதுகண்டு
மானிகள் வாட
மேனிகுலைந்து மெலிந்தாரே இப்படி
கோனுனையன்றிக் குடியாவதெப்படி (பஞ்சம்)
மண்ணில் அநேகர் .....என் கண்ணின்முன் மாய்ந்தார்
மரஞ்செடி புல்லையும் ..............மாடுபோல் மேய்ந்தார்
எண்ணிலாப் பேர்கள் ...............சருகுபோற் காய்ந்தார்
இளைத்துக் களைத்துத் ............தவித்துடல் ஓய்ந்தார்
ஏங்கிடுவாரும் களைகொண்டு
தூங்கிடுவாரும் அன்னம் உண்ண
வாங்கிடுவாரும் உடன்உயிர்
நீங்கிடுவாரும்
ஈங்கித்த வண்ணம் இருண்டது மேதினி
தாங்கும் வேதநாயகா தஞ்சம் ஏதினி (பஞ்சம்)
கடுமையான உணவுப் பற்றாக்குறை அல்லது உணவு கிடைக்காத நிலையே பஞ்சம் ஆகும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். கடும் பஞ்சம் ஏற்படும் போது ஊட்டக்குறைவு ஏற்படும். பட்டினி, பட்டினிச் சாவு அதிகரிக்கும். ஐ.நா கணிப்பின்படி ஒவ்வொரு 10,000 பேருக்கும் இருவர் ஒவ்வொரு நாளும் பசியால் இறக்கும் நிலையை பஞ்சம் என்று அறிவிக்கிறது.