நம்மால் முடியும் - வெற்றி கதைகளின் தொகுப்பு...
நம்பிக்’கையால் வெற்றி பெற்ற நிக்:-
அந்த இளைஞருடைய பெயர் நிக். இருபத்தெட்டு வயது. நடக்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார், வாசிக்கிறார், கால்ஃப் விளையாடுகிறார். கீழே விழுகிறார், மீண்டும் அவரே சிரமப்பட்டு எழுந்து நிற்கிறார்…
கொஞ்சம் பொறுங்க சார். 28 வயது ஆள் இதையெல்லாம் செய்யறது ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் மகா அதிசயம் மாதிரி சொல்ல வந்துட்டீங்களே!
அதிசயம்தான் சார். இவ்வளவையும் சர்வசாதாரணமாகச் செய்கிற நிக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை!
1982-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நிக் பிறந்தபோதே அவருக்குக் கைகள், கால்கள் இல்லை. வெறும் உடம்பு மட்டும்தான். இதற்கு என்ன மருத்துவக் காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
காரணம் கிடக்கட்டும், இந்தக் குழந்தையை இப்போது என்ன செய்வது?நிக்கின் பெற்றோர் துடித்துப்போனார்கள். “உடம்பில் ஒரு சின்ன ஊனம் உள்ளவர்கள்கூட இயல்பாக வாழமுடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம், இந்தப் பிள்ளை கையும் காலும் இல்லாமல் எப்படி வளரப்போகிறது?
ஆனால் பெற்றோர் அவனை நல்லவிதமாக வளர்க்க முடிவு செய்தார்கள். ஊனமுற்றோர் பள்ளியில் சேர்க்காமல், வழக்கமான பள்ளியில் சேர்த்தார்கள். அப்படி சேர்ப்பதற்கே நிறைய போராட வேண்டியதாயிருந்தது. ஆனால் பள்ளியில் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளானான் சிறுவன் நிக். இந்த கேலியைப் பார்த்த சிறுவன் நிக் தற்கொலை செய்ய முடிவு செய்தான்.
நல்லவேளையாக, நிக் தற்கொலை செய்துகொள்ளவில்லை. “எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ட எங்க அம்மா, அப்பாவை நினைச்சுப் பார்த்தேன். சாகறதுக்கு மனசு வரலை!’அதன்பிறகு, நிக் நிறையப் படிக்க ஆரம்பித்தார். அவரைப்போலவே உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டவர்கள், அதைத் தைரியமாக எதிர்த்து நின்று ஜெயித்தவர்களைப் பற்றியெல்லாம் வசித்து, கேட்டுத் தெரிந்துகொண்டார். அப்போதும், அவருக்கு ஒரு சந்தேகம் மட்டும் தீரவில்லை. “என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் நான் ஏன் வாழணும்?’
விரைவில், அந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது. நிக் தன்னுடைய ஊனத்தைப்பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதைக் கவனித்த சிலர், “நீங்க இந்த விஷயத்தை மேடையேறிப் பேசணும்’ என்றார்கள். அது நல்ல யோசனையாகப் பட, இப்போது நிக் மேடைப் பேச்சாளராகிவிட்டார். அவரது வாழ்க்கை புத்தகமாகவும் வந்திருக்கிறது. “லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்’ என்ற தலைப்பில்.
கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!:-
இரண்டு கைகள், இரண்டு கால்கள், தீர்க்கமான கண்கள் என, மொத்த உறுப்புகளும் நல்ல நிலையில் இயங்கும் திறன் கொண்ட நாம், ஆடும் ஆட்டம் என்ன… பாடும் பாட்டு என்ன… தேடும் வார்த்தை என்ன… ஆனால், இரண்டு கைகளை இழந்து, வாழ்க்கையின் ஓரத்திற்கே சென்று விடும் நிலையில் உள்ளவர்கள், “ஓரமா… அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்கள் கவனத்தைக் கூர்படுத்தி, காலால் அல்லது வாயால், ஓவியம் வரைவது மட்டுமே’ என்கின்றனர் சிலர். இதில், பெண்களும் அடக்கம். கேரளா, போத்தனிக்காட்டில் பிறந்தவர் ஸ்வப்னா அகஸ்டின். கைகள் இல்லாமல் பிறந்தவர். அதை இவர், குறையாகவே கருதவில்லை. எல்லா வேலைகளையும் காலாலேயே செய்யப் பழகிக் கொண்டார். எழுதுவது, ஓவியம் வரைவது என, கற்றுத் தெளிந்தார். பள்ளிப் படிப்பின் போது, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பிகள் என அனைவரின் உதவியையும் பெற்று, படிப்பை முடித்தார். தன் ஓவியங்களை கண்காட்சிகளில் வைத்தார். லதா மஹிந்த்ரா லங்க்டே என்பவர், விபத்தில் கைகளை இழந்தார். மனம் தளராமல், காலால், வாயால் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு, ஓவியக் கலையில் பட்டப் படிப்பும் முடித்தார்.
சுனிதாவுக்கு, தசைகள் வலுவிழந்து போனதால், கை, கால்கள் முற்றிலும் செயலிழந்தன. தன் வாயை மூலதனமாகக் கொண்டு, ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார். இவர்களைப் போல, இந்தியாவில் இன்னும் சில ஆண், பெண், சிறுவர், சிறுமியர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பாசத்துடன் அரவணைத்து, இவர்கள் ஓவியங்களை சந்தைப்படுத்தி, வாழ்க்கையை சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் நடத்த, மும்பையைச் சேர்ந்த ஓர் அமைப்பு உதவி வருகிறது. ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் என்ற இடத்தில், 1912ல் பிறந்த அர்னுல்ப் எரிக் ஸ்டெக்மேன் என்பவருக்கு, இரண்டு வயதில் முதுகெலும்பில் போலியோ நோய் தாக்கியதால், கைகள் செயல்படும் சக்தியை இழந்தார். ஆனால், சிறு வயதிலேயே அவருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த விருப்பம் இருந்ததால், அவர் அத்திறமையை வளர்த்துக் கொண்டு, கால்களால் ஓவியங்கள் வரை வதில் புகழ்பெற்றார். தன்னைப் போன்ற பிறவி மற்றும் இடையில் மாற்றுத் திறனாளிகளானவர்களை இணைத்து, ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.
கடந்த 1957ல் லிச்டென்ஸ்டீன் நாட்டில், “அசோசியேஷன் ஆப் மவுத் அண்டு பூட் ஆர்ட்டிஸ்ட்ஸ் பெயின்டிங் பீப்பிள்’ (ஏ.எம். எப். பி.ஏ.,) என்ற அமை ப்பை உருவாக்கினார். இன்று அந்த அமைப்பு, 74 நாடுகளில் இயங்கி வருகிறது. இதன் கீழ், 726 மாற்றுத் திறனாளி ஓவியர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தி, கண்ணியமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில், மும்பையில் இந்த அமைப்பு, 2009ல் துவக்கப்பட்டது. இதில் தற்போது, 15 மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஓவியத் திறமையை வெளிப் படுத்தி வருகின்றனர். இவர்கள், தங்களது வாய் மற்றும் கால் விரல்களில் பிரஷ்களைக் கொண்டு வரையும் ஓவியங்கள், வாழ்த்து அட்டைகள், காலண்டர்கள், பரிசுப் பொருட்கள், புத்தக அடையாள அட்டைகள், “டி-ஷர்ட்’கள், பொருட்கள் வாங்கும் பைகள் ஆகிய பல்வேறு வடிவங்களில் பொறிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. கலை ரசனையோடு உருவாக்கப்படும் இந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், நமது மாற்றுத் திறனாளி ஓவியர்கள் தங்களது வாழ்க்கையை கவுரவமான முறையில் வாழ, நாமும் உதவி செய்ய முடியும்.
எட்டாம் வகுப்பு தேர்வை எழுதிய 60 வயது பெண்:-
தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ரத்னாம்பாள், எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகிறார். இவரது ஆர்வத்தை ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர்.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது; இன்று அறிவியல் பாடத்தேர்வு நடக்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சமூக அறிவியல் பாடத்தேர்வை 216 பேர் எழுதினர். இத்தேர்வை, தாராபுரம், என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ரத்னாம்பாள் எழுதினார். இவருக்கு வயது 60.
அவர் கூறுகையில்,”"45 ஆண்டுக்கு முன் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். தொடர்ந்து கல்விபயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களுக்கு பிறகு, தற்போது தனியாக வசித்து வருகிறேன். பலர் கல்வி பயில உதவி செய்து வருகிறேன். “”கடந்த 20 ஆண்டுகளாக யோகா, தியானம் செய்து வருகிறேன். பள்ளி மாணவர்கள் உட்பட மற்றவர்களுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறேன். என் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது தேர்வு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தியானம் செய்வதால், மனப்பாடம் செய்ய சுலபமாக இருக்கிறது. படித்ததும் மனப்பாடம் செய்யவும், மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிகிறது. அடுத்து பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி வெற்றி பெறுவேன்,” என்றார்.
வாய் பேச இயலாத, காது கேளாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கலா(18) என்பவரும் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இதுகுறித்து அவரது தாய் இந்திரா கூறுகையில்,”"தம்பி மகளான கலாவை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். பிறப்பிலேயே பாதிப்பு இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை சாதாரண பள்ளியில் பயின்று வந்தாள். அதன் பின், தற்போது வீட்டில் வைத்து கற்றல் பயிற்சியை அளித்து வருகிறேன். பிற மாணவர்களை போல் நன்றாக படிக்கிறாள். தொடர்ந்து ஊக்கம் அளித்து, இவளது குறைகளை கடந்து சாதிக்க வைப்பேன்,” என்றார். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக மட்டுமே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வாய்ப்பு இருந்தும் தவறாக பயன்படுத்தும் மாணவர்கள் மத்தியில், படிப்பின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தை, தேர்வு எழுத வரும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
பட்டப்படிப்பு படிக்கும் பத்து வயது மாணவி:-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், 10 வயது மாணவி ஒருவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கும் தேஜ் பகதூர்-சாயாதேவியின் மகள் சுஷ்மா. தற்போது 10 வயதாகும் இந்த மாணவிக்கு அபூர்வமான கல்வித் திறமை இருப்பது கண்டு, அப்பெண்ணின் பெற்றோர் வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். இதனால், தனது ஏழாவது வயதில் 10ம் வகுப்பு தேர்வையும், இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வையும் எழுதி பாஸ் செய்துவிட்டார். இதையடுத்து, சுஷ்மா லக்னோ பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு படிக்க அனுமதி கேட்டு, லக்னோ பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக் கழகம், சுஷ்மாவுக்கு தற்காலிக அடிப்படையில், அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது, உ.பி.,யில் உள்ள கல்லூரி ஒன்றில், பி.எஸ்சி., அறிவியல் பாடத்தில் சுஷ்மா சேர்ந்துள்ளார். சுஷ்மாவின் சகோதரன் சைலேந்திரா கடந்த 2007ம் ஆண்டில், தனது 14ம் வயதில் கம்ப்யூட்டர் சயின்சில் பட்டப்படிப்பை முடித்து சாதனை செய்துள்ளான்.சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் தினக்கூலி. தாயார் சாயாதேவி படிக்காதவர். எனினும், தங்களது பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து, சுஷ்மாவின் தந்தை தேஜ் பகதூர் கூறியதாவது: எனது மகளின் திறமையைக் கண்டு, அவளை பட்டப்படிப்பிற்கு அனுமதி அளித்த லக்னோ பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுஷ்மா, கடுமையான உழைப்பாளி. நிச்சயம் அவள், இந்த பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்வாள் என்று நம்புகிறேன். சுஷ்மா போன்ற அபூர்வ திறமை கொண்ட பிள்ளைகளை ஊக்குவிப்பதற்காகவே, அவளுக்கு பட்டப்படிப்பு படிக்க அனுமதி அளித்ததாக, பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது நம்பிக்கையை சுஷ்மா நிச்சயம் காப்பாற்றுவாள். இவ்வாறு தேஜ் பகதூர் கூறினார்.
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.