5.ஆதலினால் காதலித்தேன்.பொள்ளாச்சி அபி

-அலையாய் அலையும்
மனது
மலையாய் ஓரிடம்
நிற்கும்
உன் முகம் பார்க்கும்போது- “முத்துநாடன்”.
எனது உயர்நிலைப் பள்ளிப்பருவம் முடிந்து மேல்நிலைப்பள்ளிப்படிப்புக்காக,எங்கள் ஊருக்கு மிகவும் பக்கமாக,சுமார் 4.கி.மீ தொலைவில் இருந்த மாணவர்களுக்காக மட்டுமே இருந்த அந்தப்பள்ளியில் இணைந்து படித்த நேரம்.என்போல இன்னும் நிறைய மாணவர்கள் காலை எட்டுமணிக்கே புத்தகப்பை மற்றும் உணவுக்கான ஒரு ஒற்றை டிபனுடன்,பள்ளியை நோக்கி நடக்கத்துவங்கி விடுவோம்.
அப்போதுதான் ஒன்பது மணியளவிலாவது சென்று சேர முடியும்.இதேபோல,எங்கள் பள்ளியிலிருந்து வடக்கே சற்று தொலைவில் மாணவிகளுக்கென தனியாக ஒரு மகளிர் பள்ளியும் இருந்தது.
சிறு சிறு கூட்டமாய் மாணவர், மாணவிகள் அந்த சாலைநெடுக காலையில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால்,ஏதோ அன்றாடமும் செல்லும் ஊர்வலம்போல அப்போதெல்லாம் எனக்குத் தோன்றும்.
காலம் ஓடியதில் அதனுடன் போட்டியிட்டுக் கொண்டு நானும் ஓடிவந்திருந்தேன் என்று அப்போது எனக்கு புரிந்திருந்தது.உதடுகளின் மீது மெதுவாய் அரும்பியிருந்த முடித்துணுக்குகள், வாலிபம் மெல்ல அரும்பிக் கொண்டிருந்ததை உணர்த்திக் கொண்டிருந்தது. பள்ளிக்குச் செல்லும்போது,தெருவோர சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்களில் இணைந்து நின்று கொண்டிருந்த அல்லது மிக நெருக்கம் காட்டிக்கொண்டிருந்த நாயக நாயகியரின்
படங்கள் அதுவரை எனக்குள் எவ்வித கிளர்ச்சியையும் ஏற்படுத்தியதில்லை.
ஆனால் இப்போதெல்லாம் ஏனோ அந்தப்படங்கள் வேகமாய் கவனத்தை ஈர்த்தன.விடை தெரியாத நிறைய கேள்விகளை அந்தப்படங்கள் தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டிருப்பதைப் போலத்தான் தோன்றியது.
அதே சயமத்தில் என்னுடன் பயின்ற,என்னுடன் பள்ளிக்கு இணைந்து நாள்தோறும் வருகிற என் சமவயது நண்பர்களும் இதே போன்ற மாற்றங்களுக்குள்ளாகி இருப்பதும் அவர்கள் அவ்வப்போது பேசும் விஷயங்களில் இருந்து அறிந்துகொண்டேன்.இதற்குப் பின் நடிகர் நடிகைகள் குறித்து தனக்குத் தோன்றியதை, பத்திரிகைளில் படித்ததை பெருமையாகப் பேசிக் கொள்வதும் சக மாணவர்களுக்கு பொழுது போவதற்காக மட்டுமல்ல,அது ஒரு முக்கிய காரியமாய் பரிமாறிக் கொள்வதும் ஒரு வழக்கமாகவே இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியவந்தது.நானும் அவர்களோடு அதுகுறித்துப் பேச வேண்டும் என்பதற்காகவே,சினிமா தொடர்பான செய்திகளைப் படிக்க ஆவல் கொண்டேன்.படித்ததைப் பகிர்ந்தும் கொண்டேன்.
முதல்வருடம் இவ்வாறு போயக்கொண்டிருந்த எங்கள் அன்றாட நடைபயணம்,அதற்கு அடுத்தவருடம் நடிகர்கள் நடிகைகளைக் கடந்து,ஆங்காங்கே சிறுசிறு கூட்டமாய் எங்களுக்கு முன்போ,பின்போ நடந்து கொண்டிருக்கும் சமவயதுள்ள மாணவிகள் குறித்து அதிகமாகப் பேசுவதும்,ஒவ்வொரு மாணவியைக் குறித்தும் தனித்தனியாக தனக்குத் தெரிந்த விபரங்களைப் பெருமையாகப் பகிர்ந்து கொள்ளும் போக்கும் மிக அதிகரித்திருந்தது.
இந்த சமயத்தில்தான் காதலை மையப்படுத்தி வரும் படங்களும் எனது கவனத்தை ஈர்த்தன. விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்து சக நண்பர்களுடன் இதுபோன்ற திரைப்படங்களுக்கு செல்வது குதிரைக் கொம்பாக இருந்த நேரம்.எனது வகுப்பில் ஏற்கனவே கடந்த ஆண்டில் தேர்ச்சி பெறாத என்னைக் காட்டிலும் அதிக வயதுள்ள சில மாணவர்கள் அவ்வப்போது மதியநேரத்தில் வகுப்பிலிருந்து காணாமல் போவதும் அதிகரித்திருந்தது.
இது குறித்து ஒருநாள் கேட்டபோது,கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு சென்று வந்தோம் என்று மிகச்சாதாரணமாய் வந்த பதில் எனக்கு அதிர்ச்சியளித்தது.ஆனால் அவ்வாறு சென்று வருவதில் இருந்த குதூகலமும்,சௌகரியமும் என்னைக் கவர்ந்தன.அதன்பின் நானும் அவ்வப்போது கட் அடிக்கத் துவங்கினேன்.
வீட்டையும்,பள்ளியையும் ஏமாற்றுவதன் மூலம் என்னை நான் ஏமாற்றிக் கொண்டுவருகிறேன் என்ற குற்றவுணர்ச்சியும் அப்போது ஏற்படவில்லை.அதுவொரு சாகசம் என்ற அளவில்தான் நான் நினைத்திருந்தேன். அதுவரை பாடங்கள் குறித்தோ,ஆசிரியர் திட்டுவாரே என்பது குறித்தோ எவ்வித அச்சமும் எனக்கு இருந்ததில்லை.
ஏனெனில் படிப்பைப் பொருத்தவரை புரிந்து படிப்பதும்,ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்றுவந்ததும் என்னைக் காப்பாற்றி வந்தது.இதனால் ஆசிரியரோ,வீட்டிலுள்ளவர்களோ திட்டுவதற்கும், கண்டிப்பதற்கும் இடம் கொடுக்காமல் இருந்துவந்தேன்.
இந்த நாட்களில்தான் குறிப்பிட்ட ஒரு மாணவியின் மீது எனது கவனம் பதிந்தது.அவளோடு நடந்துவரும் சக மாணவிகளுடன் அளவாகப் பேசுவதும்,அதிர்ந்து சிரிக்காததும்,மற்றவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்பதுமாக அவளது பொதுவான அமைதி என்னை எப்படி ஆகர்ஷித்ததெனத் தெரியவில்லை.
ஆனால்,அவள் மீது நாளடைவில் எனக்கு ஈர்ப்பு அதிகரித்தது.இந்த ஈர்ப்பின் அளவைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில்,பள்ளிநாட்களில் எக்காரணத்தைக் கொண்டும் சொந்த விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து செல்வது என்ற அளவில் என்னை மாற்றியிருந்தது.ஒரு வகையில் எனக்கே அது அதிசயமாகத்தான் இருந்தது.
பின்னர் அவள் வீடு இருந்த குடியிருப்புப் பகுதி,எனக்கான தினசரி நடைபாதையாகவும் மாறிப்போனது.
அந்த சமயத்தில் கமலஹாசன் மற்றும் சரிதா நடித்த “மரி ஓ சரித்ரா” என்ற தெலுங்கு படம் வெளிவந்து அபாரமான கூட்டத்துடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.அது குறித்த விமர்சனங்கள் தகவல்கள் எல்லாமே என்னைக் கவர்ந்திருந்தன. அது குறித்து வகுப்பில் என் நண்பர்களிடம் சிலாகித்துக் கொண்டேன்.தெலுங்குப் படமாயிற்றே என்று நண்பர்கள் தயங்கினாலும் பாதிக்குப்பாதி தமிழாமே.., போய்ப்பார்க்கலாம். பிடிக்கவில்லை புரியவில்லை எனில் திரும்பிவிடலாம் என்று சொன்னவுடன்,நண்பர்கள் சம்மதித்தனர். சென்றோம் பார்த்தோம்.இறுதிவரை நண்பர்கள் யாரும் வெளியேறும் வாய்ப்புகள் குறித்துப் பேசவேயில்லை. ஒன்றிவிட்டார்கள்.பாடல்களின் முழுமையான பொருள் புரியாவிட்டாலும் அதில் வெளிப்பட்ட உணர்ச்சிகள் எங்களைக் கட்டிப் போட்டிருந்தது. படம்முடிந்து வெளியே வரும்போது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத அளவில் எங்களைச்சுற்றி ஒரு இறுக்கமான மௌனம் பின்னிக்கிடந்தது.இந்த உணர்விலிருந்து ஒவ்வொருவரும் வெகுநேரத்திற்குப் பிறகே மீளமுடிந்தது.அன்று இரவெல்லாம் உறக்கம் பிடிக்கவேயில்லை.
இந்த விழிப்பின் நீட்சி அவளில்தான் போய் முடிந்தது.மறுநாளிலிருந்து அவளோடு எப்படியாவது பேசிவிடவேண்டும் என்ற துடிப்பு நாள்தோறும் அதிகரித்தது.பேச சந்தர்ப்பம் ஏற்பட்டால் என்னவெல்லாம் பேசுவது என்ற கற்பனை விரிந்தது.
எதார்த்தத்திற்கு ஒத்துவராத வகையில் விரிந்த எனது கற்பனைப் பேச்சுக்கள்,சிலசமயம் மிகுந்த அழகான,கோர்வையுடன்,கேட்டால் பிறரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தருவதாகவும் இருந்தது.அவ்வப்போது தோன்றுவதை எழுதிவைத்துக் கொண்டால் என்ன.? எனது சிந்தனையில் இப்படியொரு எண்ணப்போக்கு விரிந்தவுடன்,மனசு பரபரத்தது.
விடிந்தவுடன்,கையில் கிடைத்த ஒரு பழையநோட்டின் எழுதப்படாத பக்கங்களில் நானும் அவளும் பேசுவதான உரையாடல்களைப் பதிவு செய்தேன்.அதைப்படிக்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.இதனை உடனடியாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் கட்டுமீறியது.
பள்ளிக்கு சென்றவுடன் எனது அத்யந்த நண்பனிடம்,நான் எழுதியது என்னவென்றே சொல்லாமல் அதைக்காட்டினேன்.அவனும் பொறுமையாகப் படித்தான்.இடையிடையே சிரித்துக் கொண்டான்.அதில் கேலி இல்லையென்பதால் நான் எழுதியதை அவன் ரசிப்பது புரிந்தது.இரண்டு முழுப்பக்கங்களில் நிறைந்திருந்த அந்த எழுத்துக்களை முழுவதுமாய் வாசித்து முடித்தவுடன்,அதனைத் திருப்பித் தரும்போது அவன்,“கவிதையை இப்படி உரைநடைபோல தொடர்ந்த வரிகளால் எழுதக்கூடாது.இன்னும் வார்த்தைகளை சுருக்கி,வரிகளைச்சுருக்கி எழுதினால் படிப்பவருக்கு இன்னும் ரசிக்கமுடியும்.”என்றான்.
எனக்கு திக்கென்றது.'நான் கவிதையா எழுதியிருக்கிறேன்.கவிதையை இப்படித்தான் எழுதுவார்களா..?'
என் நண்பன் ஒரு நல்லபாடகன்,அவன் எப்போதும் ஆவலாய் வைத்துப் பாடிக்கொண்டிருக்கும் சில சினிமாப் பாடல்புத்தகங்களை,பாடபுத்தகங்களுக்கு இடையே இருந்து உருவி எடுத்து எனக்குக் கொடுத்தான்.இவற்றில் இருப்பதெல்லாமே கவிதைகள்தான்.இவற்றை மெட்டுக்காக எழுதியதால் பாடல்கள் என்கிறோம்.இன்னும் சுலபமாகச் சொன்னால் ராகத்தில் பாடமுடிவது பாடல்,ராகம் இல்லாமல் படிக்கப்படுவது கவிதை...,
‘மூத்தவர்களிடம் பழகுவது எவ்வளவு விஷயங்களைக் கற்றுத்தருகிறது.அதுவரை எனக்குத் தெரியாத புதியவிஷயங்களை தங்கள் அனுபவம் மூலம் அவர்கள் கற்றுத் தருவது மிகுந்த பயனளிப்பதாக உள்ளதே..!, ’நான் இருந்ததைவிட இரண்டு அடி உயரமாகிவிட்டதாய் எனக்குத் தோன்றியது.
அந்தப் பாடல்புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பிரித்து படிக்கத்துவங்கினேன்.என் மனவோட்டத்தை அப்படியே அந்தப்பாடல்கள் புட்டுவைப்பதாகவும்,அதனையும் கடந்து புதிய விஷயங்களைச் சொல்லித்தருவதாகவும் இருந்தது.
“தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ..
செவ்வானத்தின் வண்ணநிலாவும்
சின்னவள் தானன்றோ..”
என்பதைப்போல நீண்டு கொண்டே சென்ற வரிகளை வாசிக்கும்போது ஏற்பட்ட சுகம் மீண்டும்,மீண்டும் அதுபோன்ற பாடல்களைத் தேடிப்படிக்கவும் ,அந்த வரிகள் சொல்லும் அர்த்தங்களின் மீது ஏற்பட்ட ஈடுபாடும்,மகிழ்ச்சியும் தொடர்ந்து அதனை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்ச்சியும் எனக்குள் ஏற்பட்டது.
இதன் விளைவு எந்நேரமும் பாடிக்கொண்டே இருக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தியது. “பவளக் கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகையென்றே பேராகும்...” யப்பா..கவிஞர்களின் பாடல்களில் தெரித்த கற்பனையும்,வர்ணிப்பும் என்னை மயக்கியது.அதே சமயத்தில் பெண்களைக்குறித்த உடலழகைப் பாடியபோதுகூட,கவிஞர்கள் பயன்படுத்திய நாகரீகமான சொற்கள்,பெண்கள் மீதான மரியாதையையே ஏற்படுத்தியது.
இந்தகாலகட்டங்களில் நான் படித்துவந்த சினிமாப்பாடலின் ராகம் மட்டும் நன்றாகத் தெரியும்.ஆனால் ஒரு சிலமுறை அந்த ராகத்தினபடி வரும் வார்த்தைகள் மறந்துபோகும்.அந்த வார்த்தைக்காக திணறித்திணறி சிந்தித்தாலும் மறந்துபோன வார்த்தைகள் நினைவுக்கு வரவேவராது. அப்போதுதான் ஒருமுறை ராகத்திற்கு பொருத்தமான வகையில் வேறு வார்த்தைகளைப் போட்டுப் பாடத்துவங்கினேன்.இந்தமுறை,மிக கவனமாக நான் மாற்றிப் பாடிய வார்த்தைகளை கவனமாக அந்தப்பாடலின் போக்கிலேயே எழுதியும் வைத்துக் கொண்டேன்.எனது சொந்த வார்த்தைகள் என்பதால் மிகுந்த அக்கறையும் செலுத்தினேன்.
இவ்வாறு துவங்கிய பழக்கம் பின்னர் சினிமாப் பாடல் மெட்டுக்கென தனியாகப் பாடல்கள் எழுதத் துவங்கினேன்.மெட்டுக்குள் அடங்காத வார்த்தைகளையிட்டு எழுதியதெல்லாம் கவிதையென்று ஆயிற்று.!.
எப்படியோ தொடர்ந்து இதுபோன்ற பயிற்சிக்கு தூண்டுதலாக நான் நாள்தோறும் ரசித்துவந்த‘அவள்’இருந்தாள்.காதல் பாட்டுக்கள்,அதன்பின் இயற்கை, மனிதனின் செயற்கை,செயற்கைக்கான காரணம்,அதிலிருந்து மீட்சிக்கான வழி,போராட்டம் என பின்னாளில் மாறிப்போன எனது வாழ்க்கையின் மிகமுக்கிய காரணியாக அவளே இருந்தாள்.
ஆதலினால் நான் காதலித்தேன் அவளை...!.
இப்போதும் காதலிக்கிறேன்.!.அவள் பெயர் தாகீரா..!.