அபாயம் - இன்றைய இளைய தலைமுறை - கட்டுரை
*************** அபாயம் *********************************
“ஏய்.. என்னாச்சுடா இவ்னுக்கு, மூஞ்சி இப்டிகீது”
“ஒண்ணும் இல்ல மச்சி, அந்த பிகராண்ட பேசியிருக்கான் அது இவனுக்கு அல்வா குடுத்துடுச்சு”
“அதல்லாம் இல்லை மாமா, பிரியா இப்பல்லாம் என்னாண்ட பேசுரதில்ல, அதான் மாமா”
“டேய்.. அதத்தான் ரவி கரிக்ட் பண்ணிட்டு இருக்கானே... மாமா அது ஆள் இல்லை மாமா ஐட்டம்.. நீ வேணா பாரேன், உனக்காண்டி அத நான் கரிக்ட் பண்ணி காட்டுறேன்”
எதேச்சையாய் காதில் விழுந்த இவ்வார்த்தைகள் கேட்டு ஸ்தம்பித்து நின்றேன்.
இவ்வார்த்தைகளை, கையில் சிகரெட்டோடு முழுவதும் சிராய்ப்புகள் கொண்ட RX100 இல் வந்த நால்வரோ, கிரிக்கெட் மட்டையுடன் தலையில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு கையில் வயரைச் சுற்றி வந்த குழுவோ பேசிச் சென்றிருந்தால் ஒருவேளை நான் அலட்சியப் படுத்தியிருந்திருப்பேன். பேசிச்சென்றவர்கள் முதுகில் புத்தக மூட்டையோடு அரும்பு மீசைகூட முளைத்திரா பள்ளி மாணவர்கள். அதிகமாய்ப் போனால் பத்தாம் வகுப்பு மாணவர்களாய் இருந்திருக்கூடும். “கனவு காணுங்கள்” என்று சொல்லிச்சென்ற முன்னாள் ஜனாதிபதியின் வார்த்தைகளே பிரதானமாய் இருந்தது என் நண்பர்கள் வட்டத்தினுள் எங்கள் பள்ளிக் காலத்தில். அப்போதெல்லாம் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கவில்லை நாங்கள். இப்போதும் மாணவர் சமூகம் அப்படித்தான் இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்தவள் முகத்திலறைந்தாற்போல் வார்த்தைகள் கேட்டு அன்றைய நாள் சூன்யமாய்ப் போனது.
அன்றிரவு வந்தவள் நார்மலாக என்னை உணரவில்லை. கடும் அசூயை தோன்றிற்று. சமூகம் இப்படிப் பாழாகிறதே என்று ஏக்கமா, பயமா என்று சொல்ல முடியாத ஒரு உணர்வுநிலை. “ எவன் என்ன செஞ்சா உனக்கு என்ன?, உனக்கு ஏதும் ஆகல இல்ல, அப்புறம் ஏன் இதையெல்லாம் யோசிக்கிற”” என்று மனசாட்சி கேவலமாய்த் திட்டியது. இருந்தாலும் ஒரு உள்ளுணர்வு இதற்கான காரணங்களை அடுக்கியது.
முழு முதற்காரணமாய் மூளைக்கெட்டியது சினிமா. அந்தக் காலத்திலிருந்து எப்படியெல்லாம் காதலித்தார்கள் என்று சொல்லி போரடிக்க விரும்பவில்லை. ஆனால் இப்போதைய நிலைமை படுமோசம். சமீபத்திய படங்களில் உதட்டு முத்தம் தான் காதலை உறுதிப்படுத்தும் என்று ஒரு மாயை உருவாகியிருப்பது கண்டு அச்சமுற்றேன். இன்னும் சில படங்கள் காதலிப்பவர்களுக்குள் எதுவும் தப்பில்லை ரேஞ்சுக்கு, காதலை சித்தரிக்கின்றன. காதலித்தால் ஜாலியாக இருக்கலாம், தொலைபேசி உரையாடல்கள் கிளுகிளுப்பை(கிலுகிலுப்பை அல்ல!) ஏற்படுத்தும், நண்பர்கள் மத்தியில் பெருமை பீத்திக் கொள்ளலாம் என்று தவறான புரிதல்களால், இளம் சமூகம் காதல், காமம் வேறுபாடறியாமல் இதைப் பரீட்சித்து பார்க்கிறது. மேலும் இச்சமூகம் தவற விடாத ஊடகங்களுள் சினிமாவே பிரதானம். இதற்காக முத்தக் காட்சிகள் இல்லாத சினிமாவைத் தான் எடுக்கவேண்டும் என்று ரஜினி சாரை வைத்து சொல்ல வைக்க முடியாதே. காமம் மட்டுமின்றி வன்மத்தையும் சேர்த்தே இளம் தலைமுறை மீது திணிக்கிறது தற்கால சினிமா. தொலைக்காட்சிகளும் பெருகிவரும் இணைய பயன்பாடும் இதிலடக்கம்.
இரண்டாவதாக செல்போன்கள். பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரிடமும் செல்போன்கள். புகைப்படம் எடுக்கும் வசதிகொண்ட, வீடியோ பார்க்கும் வசதிகொண்ட செல்போன்களை பெரும்பாலும் இளைய தலைமுறை தவறாகவே உபயோகிக்கிறது. இதைப் பற்றி தினந்தோறும் செய்திகள், இணையத்தில் வீடியோக்கள் என்று பல வந்தாலும் அவற்றை யாரும் சட்டை செய்வதில்லை. ஒரு மாணவனிடம் இருக்கும் தவறான வீடியோ அடுத்தவனுக்கு, அதற்கடுத்தவனுக்கு என்று பரவி சமூகத்தை அழிக்கும் விஷக்கிருமியாய் பரப்பப்பட்டுக் கொண்டே வருகிறது.
இதனால், டெக்னாலஜி வளர்ச்சியினால்தான் குற்றங்கள் பெருகிப் போயின என்றும் சொல்லிவிடமுடியாது. தொழில்நுட்பம் என்பது வரம். இப்போதுதான் குற்றங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. எத்துணையோ செய்திகள், ஸ்கேண்டல் வீடியோக்கள் என்று வந்தப் பிறகும் இன்னும் மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாக எந்த ஒரு முயற்சியும் எடுத்த பாடில்லை. இன்னும் சொல்லப் போனால் பல பள்ளிக்கூடங்களில் பாலியல் கலவியே நடந்துகொண்டிருக்கிறது. பாலியல் கல்வி மட்டுமல்லாது பெருகிவரும் ஊடக உபயோகம், இணைய உபயோகம் காரணம் சைபர்கிரைம் பற்றிய விழிப்புணர்வையும் மாணவர்களிடையே, இளம் சமூகத்தினிடையே ஏற்படுத்துவது கட்டாயம். மேலும் சைபர் கிரைம் விதிமுறைகளும் இங்கே மாற்றியமைக்கப்பட வேண்டும். விதிகள் இன்னும் கொஞ்சம் வலுப்பெற்றவைகளாக இருத்தல் வேண்டும். சமச்சீர் கல்வி போய் சமச்சீர் கலவி வராதநிலை காக்க, அரசின் கூடுதல் கவனமும் இதில் தேவைப்படுகிறது. இலவசங்களை விடுங்கள், இவையாவும் உடனடியாக செய்யப்படவேண்டிய அத்தியாவசியங்கள். உலகில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதியற்ற நாடுகளில் இந்தியாவுக்கு நான்காமிடமாம். இந்த விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் இந்தியாவை முதலாமிடத்திற்கு கொண்டு சென்றாலும் வியப்பதற்கில்லை.
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.