இலவசம், இடவொதுக்கீடு, கர்மவீரர்.

என் வயது 13.சடங்காகி ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. என்வீட்டில் நான் ஒருத்திமட்டும்தான். கூடப் பிறந்தவர்கள் எவருமில்லை.
நல்ல படிப்பாளி. பள்ளியில் நானே முதல் ரேன்க், எப்பொழுதும். நன்றாக டான்ஸ் ஆடுவேன். பள்ளியின் ஆண்டுவிழாவில், எப்படியும் என்னுடைய ஆட்டம் ஒவ்வொரு வருடமும் இல்லாமல் இருக்காது. நான், பள்ளியின் கபடி வீராங்களையும்கூட. மொத்த பள்ளியும் என்னைத் தலையில் தூக்கிவைத்து ஆடுமளவுக்கு திறமைசாலி. என்னுடைய குறிக்கோள், நான் நாசாவில் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக வேண்டும். உலக உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும். வானத்தின் உண்மையான உயரம்தான் என்ன என்று கண்டுகொள்ள வேண்டும். முதலில் இறைவன் என்றால் என்ன என்பதை குழப்பமில்லாமல் உணரவேண்டும். வியாழன் கிரகம் இங்கிருந்து பார்த்தால் புள்ளியாய் தெரிகிறது. ஆனால் அது பூமியைவிடவும் இருபது மடங்கு பெரியதாம். அப்படியானால் அதை சூரியனில் இருந்து பார்த்தால் இன்னும் சிறிதாய்த்தான் இருக்கும். ஒரு புள்ளிக்கு சூரியனிலிருந்து அனுப்பப்படும் ஒளி இவ்வளவு வெளிச்சம் என்றால், சூரியனின் ஒளி எப்படியிருக்கும்? அவ்வளவு தூரங்களில் சிதறிக்கிடக்கும் கிரகங்கள் ஏன் சூரியனைச் சுற்றவேண்டும். இப்படி பலப்பல கேள்விகள் எனக்குள். எல்லாவற்றிற்கும் நாசாவில் மட்டும்தான் விடைகிடைக்கும். நன்றாகப் படிக்கவேண்டும்.
என் தாய் கைநாட்டு. மூன்றாம் வகுப்புடன் சித்தாள்வேலைக்குச் செல்லத்துவங்கி, திருமணத்தின்பின் உடல் முடியாமல், இப்பொழுது பெரிய மனிதர்களின் வீடுகளில் வீட்டுவேலைகள் செய்கிறாள். அன்பு செய்தல் தவிர அவளுக்கு வேறெதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரண்டாம்தரக் குடிசை ஒன்றுக்கு சொந்தக்காரி. குக செய்தேயாகவேண்டும் என்று செய்துகொண்டவள். புத்திசாலி.
என் அப்பா, நன்றாகக் குடிப்பார். கையேழுத்துமட்டும் போடத்தெரியும். ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் இறங்குவதுபோல் இருக்கும் அவரின் கையெழுத்து. ரௌடித்தனத்தில் கெட்டிக்காரர். ஊரெல்லாம் கடன், பகை. வட்டிக்கு (மீட்டர் வட்டி, இன்று காலை வாங்கும் பணத்தை மாலைக்குள் இரட்டிப்பாகத் திருப்பிவிட வேண்டும்.) பணம் அப்போதைக்கப்போது வாங்கிக்கொண்டு, ஆட்டோ, நாள் வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பிழைப்பு நடத்திகிறார். அப்பா, அம்மாவின் மொத்த வீட்டு வருமானம் மாதம், குடிபோக 4500 ரூபாய்கள். வீட்டில் ஒரு டியூப்லைட், ஒரு மின்விசிறி உண்டு.
இதுதான் நான், எனக்கு நாசாவில் சென்று வேலைபார்ப்பது லட்சியம்.
படிப்புதான் மனிதனை எந்த அளவுக்கு மாற்றிவிடுகிறது. ப்ளஸ்டூவில் 1275 மார்க் வாங்கி ஊரிலேயே, மாவட்டத்திலேயே முதல்மார்க் வாங்கிய பெண்ணாய் சந்தோசத்தில் மிதக்கிறேன். ஆனாலும் உள்ளில் ஒரு நிலை, பத்து மார்க் எப்படி விடுபட்டது என்று யோசித்துப் பார்த்தேன். பிடிபடவில்லை. விடுமுறையில் பேச்சு ஆங்கிலம் பேசிடப் படிக்க வேண்டும், கம்பியூட்டர் படிக்கவேண்டும். ஹிந்தி படிக்கவேண்டும். சக தோழிகளுடன் அடுத்து என்ன படிக்கலாம் என்று விவாதிக்க வேண்டும். சிந்தனையில் ஓடிக்கொண்டே வீடு சென்றடைந்தாள். வீட்டில் அவளை வாழ்த்திட அப்பா அங்கு இல்லை. தாய் அன்றைய சந்தோஷ நாளினால் உசுப்பப்பட்டு கொஞ்சம் கேசரியும், அவளுக்குப்பிடித்த சப்பாத்தியும் போட்டுத்தந்தாள். தாய்க்கு தன் மார்க்கின் அருமைகளை விளக்கிக்கொண்டு இருந்தாள். அப்பொழுதுதான் அது நடந்தேறியது. அவளின் அப்பாவை பலர் துரத்திக்கொண்டு வந்தனர். அவர் வீட்டினுள் வந்து கதவைப் பூட்டிக்கொண்டு மூலையில் விழுந்தார். அவரின் முதுகில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. வெளியில் கெட்டகெட்ட வார்த்தைகளில் கத்திக்கொண்டு கதவை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்ளயே வந்துவிட்டனர். மொத்தம் எட்டுப்பேர். எல்லோரிடமும் அரிவாள் கையில் இருந்தது. தாய் தடுக்கச் சென்றாள். அவளுக்கும் சேர்த்து வெட்டு. துண்டுதுண்டாக இருவரும் கண்முன்னேயே வெட்டப்பட்டனர். நான் மட்டுமே அதையெல்லாம் வெறித்துப் பார்த்துக்கொண்டு கிடந்தேன். இறந்து கிடந்தார்கள் என் கண் முன்னே. அழுகைஎதுவும் வரவில்லை. இந்தியாவின் சாபக்கேடுதானே இவைகள் எல்லாம். முட்டாள் முன்னோர்கள் ஏற்படுத்தித் தந்த சாதி வெறிதானே இவைகளெல்லாம். நாட்டு மக்கள் எவருக்கும் வேலை தரமுடியாத கேடுகெட்ட அரசியல்தானே இவைகள். மனம் கொஞ்சம் இருண்டதை உணர்ந்தேன். வேறு சொந்தங்களையும் எனக்குத் தெரியவும் தெரியாது. தோழியர் வந்திருந்து உதவினது கொஞ்சம் ஆறுதல்.
சென்னையிலிருந்து சித்தப்பாதான் வந்திருந்து எல்லா சடங்குகளையும் செய்துமுடித்து கையேடு என்னையும் சென்னைக்கே கூட்டிச் சென்றுவிட்டார். எப்பொழுதும் அழவேயில்லை. நடந்த விஷயங்கள் எல்லாம் எதிர்பார்த்தவைகள்தாம். என்றோ நடந்திருக்கும், என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. எனக்கு ஒரே எண்ணம்தான். நாசாவில் வேலை செய்யவேண்டும். அதற்கு படிக்கவேண்டும். ஊருக்குத் திரும்பிவந்து தோழியுடன் பள்ளி முதல்வரைச் சென்று பார்த்தேன். அவர்தான் எனக்கு உதவுவதாய் சொல்லி வழிகாட்டினார். அரசாங்கத்தில் எத்தனை உதவிகள் இருக்கின்றன. அப்பப்பா, நன்றி கர்மவீரருக்கு. கல்விக்காக வாழ்க்கையையே தந்து மறைந்த மாமனிதர் அவர். ஒன்றை நான் இங்கே சொல்லியாக வேண்டும். என்னின் மொத்த படிப்பும் அரசாங்கத்தின் உதவித்தொகையில் படித்ததே. இப்பொழுதும் பேங்க்கில் கடன் வசதி செய்து தந்திருக்கின்றார்கள். எல்லாம் அலைந்து திரிந்து முடிந்து கடைசியில் இறைவன் வழிகாட்டினார். சென்னை IIT இல் aeronautics & astronomy எடுத்து btech இல் படிக்க சேர்ந்துவிட்டேன். தூரத்தில் கொஞ்சம் வெளிச்சம் தெரிவதை உணர்ந்தேன். கல்லூரி துவங்கியது. இப்பொழுது எனக்குக் கண்களில் தெரிவது எல்லாம் படிப்பு,படிப்பு,படிப்பு ஒன்றுதான். வாழ்க்கை ஒருமுறைதான் மலரும். எனக்கு அழகாக இப்பொழுது, இங்கே மலர்ந்துவிட்டிருக்கிறது. ஒரு அம்புக்கு இலக்கை சென்று தாக்குவது ஒன்றுமட்டுமே வேலை. நானும் அம்பாக பயணித்துக்கொண்டு இருக்கிறேன். இலக்கை நெருங்கிக்கொண்டு இருக்கிறேன். ஓடு ஓடு, நின்றுவிடாதே.
எல்லாமும் வெற்றி. என் முயற்சிக்கு வெற்றி. கர்மவீரருக்கு வெற்றி. என் நாட்டுக்கு வெற்றி. எனக்கும் வெற்றி. நான் இப்பொழுது நாசாவில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். காதலன்தான் என் கணவன். ஒரு அன்பு மகன். என்போல் அல்ல அவனின் வாழ்க்கை. அவன் நிச்சயமாக ஒரு விஞ்ஞானிதான். நான் இருக்கிறேன் அவனுக்கு உதவ. யாரும் தேவையில்லை எனக்கு இப்பொழுது. ஆனாலும் உதவிய நெஞ்சங்களை உள்ளுள் வைத்து பூஜிக்கிறேன்.
ஒரு டாக்டரால் எப்பொழுதுமே ஒரு மக்கைக்கூட டாக்டராய் உருவாக்கிட முடியும். முடிகிறது. முடிந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒரு ஏழை ஆட்டோ ஓட்டுனரின் மகளை கர்மவீரர்போன்ற ஒரு உண்மையான அரசியல் தலைவரால் மட்டுமே, வகுத்து ஏற்படுத்தப்பட்ட உதவிகளால் விஞ்ஞானியாகவோ, டாக்டராகவோ வளர்த்துவிட முடியும். இது இட ஒதுக்கீடு மற்றும் அரசின் தூக்கிவிடும் இயல்புகளால் மட்டுமே ஒரு பாமரனை, இந்த ஒரு உயரத்திற்கு உயர்த்திட வழிவகுக்க முடியும்.

எழுதியவர் : jujuma (18-Sep-12, 3:15 pm)
பார்வை : 391

மேலே