ஊனமுற்ற பெண்ணை பெண் பார்க்க வந்தார்கள்

மூவாறு வயது தொட்டு
யாராரோ பெண் கேட்டார்கள்
பெண்ணை மட்டுமல்ல....
பொன்னும் பொருளும் கூட

ஊனமுள்ள பெண்ணென்று
உயர்ந்து கொண்டே போகிறது
வீடு வாசல் சொத்தென்றும்
காரும் கூட வேணுமாம் கைக்கூலியாய்

அழகில் ஓர் குறையில்லை
அறிவிலும் ஓர் குறையில்லை
அன்பில் கூட குறையில்லை
அப்புறம் என்ன குறையோ?

ஊனம் கேட்டுப் பெற்ற வரமா?
கடவுள் கொடுத்த சாபமா?
பெற்றோரின் பாவமா?-அது
அனுபவிப்போரின் பலனா?

இயற்கை தந்த பரிசை
இழிந்துரைக்கும் இனமே
இதயம் தொட்டுச் சொல்லுங்கள்
உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்.....!!??

ஊனமென்று படைத்தவனே
உணர்ச்சியைக் கொன்று படைத்திருந்தால்
உங்கள் முன் நிற்கத் தேவையில்லை
உயிரும் நோகத் தேவையில்லை

வரன் பேச வந்தவரெல்லாம்
முரண் படாமல் முறையாய்
வரன் பேசி சென்றிருந்தால்
நான் பேச இங்கொன்றுமில்லை

ஊனம் பார்த்துச் சென்றவர்கள்
ஊனமாய் பேசிச் சென்றார்கள்
ஊனத்துக்கு பகரமாய் பணமாம்
ஊனம் எனக்கா? உங்களுக்கா?

உள்ளத்தில் ஊனம் வைத்து
உதட்டில் பொய் மறைத்து
பணத்தில் குறி வைக்கும்
குணம் கொண்ட கூட்டமே

இந்த ஊனத்தோடும் உறவாட
இவள் உள்ளத்தோடும் உரையாட
இவள் மனதோடும் மணம் பேச
உள்ளத்தில் ஊனமில்லாதவன் வருவானே.!



(இது நண்பர் கே.எஸ்.கலை தந்த தலைப்பு. நன்றி திரு.கலை)

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (26-Sep-12, 8:59 am)
பார்வை : 5590

மேலே