இப்படிக்கு குற்றுயிர்கள்

சேவல்கள் கூவ முன்னரே
சேல் சத்தம் கேட்டு
விழிக்கின்றன எம் கண்கள்
காபி குடிக்கும் முன்னரே
கண்டிப்பாக கிடைக்கும்
சில மரண அறிவித்தல்கள்
மனித உயிர்கள் இங்கு
ஈசல்களின் இறக்கைள் ஆகின
மைதானங்கள் இப்போது
மயானங்கள் ஆகின
ஒரு நாள் மரணிக்க தான்
பிறந்தோம் நாங்கள்
ஒவ்வொரு நாளும்
மரணிக்க அல்ல
குட்டி சண்டை போடும் அண்ணன்
குண்டு வெடிப்பில் பலியான பரிதாபம்
கொலை செய்ய படுவோமா என
கேட்கும் குழந்தையின் கண்கள்
இறுதி ஆசையை கூட
சொல்ல முடியாமல்
மண்ணை முத்தம் இடும்
அன்னையின் பிணம்
உயிரை மாய்க்க
தைரியம் இல்லாமலும்
உயிரோடு வாழ
உரிமை இல்லாமலும்
உருண்டோடும் எம் காலம்
எங்கள் பூமியில் பிளாஸ்டிக்
பூக்களை கூட பார்ப்பது அரிது
வெண் புறாக்களும் ஒலிவ் இலைகளும்
சில பதாதைகளில் மட்டும் கம்பீரமாக
சிரிப்பும் உறக்கமும்
எங்கள் நினைவுகளில்
மாத்திரமே உள்ளது
நிஜங்களில் அல்ல
ஏன் போரளிகளே!
உங்களிடம் ஒரு கேள்வி
உங்கள் மௌனத்தால்
அழிவது ஜனநாயகமாக இருக்கலாம்
உங்கள் யுத்தத்தால்
அழிவது அப்பாவி ஜனங்கள் அல்லவா
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும்
ஒரு நிரபராதி தண்டிக்க படுவது
நியாயமாகுமா?