என் தந்தை!
எனை கொஞ்சி பார்த்ததும் இல்லை -
திட்டி தீர்த்ததும் இல்லை!
கோபத்தில் வார்த்தைகளால் தடித்தவர் - என்றும்
தேகத்தால் சிறுத்தவர்!
பகட்டாய் அவர் திரிந்ததும் இல்லை -
பண்பாடின்றி நடந்ததும் இல்லை!
வகுப்பு கணக்குகளை அடித்து கற்று கொடுத்தவர் -
வாழ்க்கை கணக்குகளை வாழ்ந்து காட்டினார்!
வேலை இல்லை - ஆனால்
வெட்டியாய் இருந்ததும் இல்லை!
கல்நெஞ்சக்காரர் - பாசத்தை அடக்கிக்கொள்வதில்!
சொத்தொன்றும் சேர்க்கவில்லை - சொந்தங்களைத் தவிர!
தானே செய்துகொள்ளும் சிகைச் சவரம் -
எளிமையான அலங்காரம்!
ரப்பர் செருப்பு அவர் காலனி-
வெள்ளை வேட்டி சட்டை அவர் பாணி!
அவர் கைவண்ணம்!கலை வண்ணம்!
ஓவியமும், காவியமும் அவர்க்கு எளிது!
அவருடைய எளிமை அனைவர்க்கும் கடிது!
அங்கீகாரம் கிட்டவில்லை - அது கொடிது!
நடந்தே கடந்து இருப்பார் நிலவின் தூரத்தை!
சாதா பேருந்துக்காய் -
கால்கடுக்க நிற்க வைத்தார் -
வாழ்வில் காலணாவின் மதிப்பை புரியவைத்தார்!
பிறந்தது, வளர்ந்தது, விளையாடியது - பசுமலை சொந்தமனையில் -
வாழ்வது வாடகை மனையில்!
உடன்பிறப்புகளுக்கு விட்டு கொடுப்பர்! இவர் - தான்
வாழ்ந்த வீட்டை விற்றுக் கொடுத்தார்!
வீடு இழந்தார்!
வேலை இழந்தார்!
நம்பிக்கையும், சுயகௌரவமும் இழக்கவில்லை!
தாயை போற்றியவர் - அவள் நாமத்தை
தன் முதல் சேய்க்கு சூட்டியவர்! அவர்
தந்தை மற்றும் தாயின் தந்தை நாமத்தை - சேர்த்தே
எனக்கும் சூட்டினார்!
அவர் வாழ்ந்த வாழ்க்கை சிறப்பு -
பலருக்கு இன்றைய அவர் வாழ்க்கை நிலை சிரிப்பு!
மரநாற்காலி அவர் ஆசனம் -
சிறுவயதில் எனக்கு ஊட்டி விடுவதில்- அவர்
வற்றாத காவிரி நீர் பாசனம்!
அவர் அன்னை அழைத்த பெயர் மாது -
அவர் உள்ளத்தால் என்றும் சாது!
எனை பாசமாய் பாராட்டி நான் உணர்ந்தது இல்லை-
செல்வச் செழிப்பில் எனை சீராட்டியதும் இல்லை!
கசாயமும் - ஆவி பிடித்தலும்
அவர் மருத்துவம் - அதுவே
அவர் புரியவைக்கும் - மனதைரியத்தின் மகத்துவம்!
வீட்டில் உணவில்லை - ஆனாலும்
எங்கள் படிப்புக்கு தடையில்லை!
தந்தையே தானாய் வடிகிறது கண்ணீர்!
உன் தியாகமும்-வீரமும்-சாமர்த்தியமும்!
இது வரையிலும் ஏதும் கேட்டதில்லை - இப்போது கேட்கிறேன்!
மனம் விட்டு பேசிடுங்கள் - உங்கள் பாரத்தை!
இன்னும் கொஞ்சம் மதித்திடுங்கள் - உங்கள் தாரத்தை!
கொஞ்சமேனும் வெளிபடுத்திடுங்கள் - உங்கள் பாசத்தை! நீங்கள்
எங்கள் மேல் வைத்திருக்கும் நேசத்தை!
___________________________________________________________________________________
என் தந்தை! மாதவன் நம்பியாபிள்ளை, ஒய்வு பெற்ற கணக்காளர்! எளிமையானவர்! எனது முதல் முன் மாதிரி! இதுவரையில் நான் அவரிடத்தில் உட்கார்ந்து பொறுப்பாய், பாசமாய் பேசியதில்லை! இணையத்தில் பேசுகின்றேன், பதிவின் மூலமாய்!
தாய், தந்தை நம்மை ஏழ்மையில் வளர்த்திருக்கலாம், ஆனால் பாசத்திற்கு குறைவிருந்திருக்காது! நாம் அதை உணராமல் இருந்திருக்கலாம்! சிறு வயதில் அவர் எனக்கு ஊட்டி விட்டது, உப்புமாவில் மீன்,பொம்மைகள் செய்து கொடுத்தது- பெரிதாய் தோன்றவில்லை! ஆனால் இப்போது தானாய் சொரிகிறது தண்ணீர்-கண்ணீராய்!
இப்போது வெகு தூரம் தள்ளி இருக்கிறேன், இவையனைத்திற்கும் ஏங்குகிறேன்!
அருகில் இருக்கும் போது கடினமாய் பேசியிருக்கிறேன், இப்போது வடிக்கிறேன் கண்ணீரை எப்படி நொந்திருப்பார்கள் என நினைத்து!
ஏதோ எழுத நினைத்து, ஏதோ எழுதியிருக்கிறேன்!
அனால் மன பாரம் இறக்கிய உணர்வு!
என் தந்தை, என் சிறப்பு!
கர்வத்துடன் சத்தமாய் அழைத்துக் கொள்கிறேன் என் பெயரை
- நம்பி கிருஷ்ணன் மாதவன் என்று!!!
***
எப்போதாவது என் தந்தை இந்த பதிவை, படித்தால் மகிழ்வார் இல்லையா?