வலை வீசிப் பிடித்த வேலை
ஒரு மன்னரின் அமைச்சரவையிலிருந்த அறிவாளி சாகும் தருவாயில்,''எனக்குப் பதில் அடக்கமுடைய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன். அடக்கம்தான் ஞானத்தின் அறிகுறி.''என்றார்.
அரசனும் தன் ஆட்களை அனுப்பி அடக்கமான ஒருவரைத் தேடிக் கொண்டு வரச் சொன்னான்.
இதைக் கேட்ட பணக்காரரான முல்லா, தீர்க்கமாக யோசித்து முடிவு செய்து, மன்னரின் ஆட்கள் வரும் போது மீன் பிடிக்கும் வலையைச் சுமந்து கொண்டு ஆற்றிலிருந்து வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் கேட்டார்கள், “நீ பணக்காரனாய் இருந்தும் ஏன் இந்த மீன் வலையைச் சுமக்கிறாய்?”
முல்லா, ”மீன் பிடித்துத்தான் நான் பணக்காரன் ஆனேன். எனக்குப் பல வசதிகளைக் கொடுத்த மூலத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நான் எப்போதும் இந்த வலையைத் தோளில் சுமந்து செல்வது வழக்கம்.'' என்றார்.
”பொதுவாக ஏழை பணக்காரன் ஆகி விட்டால், அவன் தன் முந்தைய காலத்தை மறந்து விடுவான். ஏதோ பெரிய பிரபு குலத்தில் பிறந்தது போல் ஒரு புதிய முந்தைய காலத்தை உருவாக்கி விடுவான். ஆனால் இந்த முல்லா மிகவும் அடக்கமாக இருக்கிறான்.” என்று மன்னரின் ஆட்கள் அரசனிடம் கூறினர்.
முல்லா ஞானியாகக் கருதப்பட்டு அந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்.
ஆனால் முல்லா வேலையில் அமர்ந்த அன்றே வலையைத் தூக்கி எறிந்து விட்டார்.
அவருக்காகப் பரிந்து பேசிய ஒருவன், ”முல்லா, இப்போது உன் வலை எங்கே?” என்று கேட்டான்.
உடனே முல்லா , ''மீனைப் பிடித்த பின் வலையைத் தூக்கி எறிய வேண்டியது தானே?'' என்றார்.