ஜாதிகள் இல்லையடி பாப்பா !

இனிப்பாக இருந்தது
என் ஜாதியை எனக்குள்
எண்ணிப் பார்த்துப்
பெருமைப் படும்போது !

இறுமாப்பாய் இருந்தது
என் ஜாதிப் பெருமையை
என் மகனோடு
பகிர்ந்து கொள்ளும்போது !

இதமாக இருந்தது
என் ஜாதிக்காரர்கள்
எங்கள் ஊரில்
இவ்வளவு நெருக்கமாக
என் உறவாய்
இருப்பதைப் பார்க்கும்போது !

இன்னும் கொஞ்சம்
கர்வமாய்க் கூட இருந்தது
இந்த மாநிலத்தின்
மக்கள் தொகையில்
என் ஜாதிக்காரர்கள்
கோடிக் கணக்கில் இருப்பதாய்ச்
சொல்லும் புள்ளி விவரங்களைத்
தெரிந்து கொண்ட போது !

விபத்தொன்று
நடந்த பின்னே
வேண்டிய இரத்தம்
எனக்கு வேண்டிய போது
எவனோ இன்னொரு ஜாதிக்காரன்
தந்த பிறகுதான்
எனக்குள் முகிழ்த்தது
அட மானிடா!
எண்ணத்தில்
நீ
வெறும் மலடென்று !

எழுதியவர் : முத்து நாடன் (6-Nov-12, 11:00 pm)
பார்வை : 184

மேலே