அவசர அநியாயம்
அன்று ஒரு விடுமுறைநாள். அன்றாவது நன்றாகத் தூங்கிவிடவேண்டும் என்று வாரம் முழுவதும் கங்கணம்கட்டி நினைத்திருந்தான். முந்தயவாரம் முழவதுமாய் வேலைபார்த்த களைப்பு. ப்ரொஜெக்ட் வேலை நல்லபடியாக முடிந்துவிட்டிருந்தது. அந்த நிம்மதி. ஆனால் அவன் மனைவிக்கு வெளியே செல்லவும் அவன்தான் காரோட்டி. காரோட்டுதலும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் வேண்டா வெறுப்போடுதான் மனைவியுடன் வெளியில் வந்திருந்தான். ஏழுமாடி சரவணாவுக்கு வந்திருந்தார்கள். அந்த வாரத்திற்கு வேண்டிய சாமான்கள் அனைத்தும் வாங்கவேண்டியதிருந்தது.
அவன் மெதுவாக பட்டுவிற்பனை பிரிவில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு, மனைவியை எல்லாவேலைகளையும் முடித்துவிட்டு செல்லில் மிஸ்ட்கால் செய்யும்படியும் அவன் அங்கேயே காத்திருப்பதாகவும் சொன்னான்.
அழகழகான பெண்களின் அணிவகுப்பு கொஞ்சம் மனதிற்கு தெம்பூட்டியது. நேரம் சென்றது. லேசாகக் கண்ணைக் கட்டியது. அரைத்தூக்க மயக்கத்தில் கண்களைத் திறந்தும் மூடியும் ஆக அமர்ந்து இருந்தான். அப்பொழுதுதான் சட்டென கவனித்தான், எதிரே அவள் நின்றிருந்தாள். அவனின் பழைய காதலி. தனியாகத்தான் வந்திருந்தாள். அவளும் அவனைப் பார்த்துவிட்டாள். சரியாக 18 வருடங்கள் கடந்த சந்திப்பு. தற்பொழுது செங்கல்பட்டில் வசிக்கிறாள் என்று கேள்வி. அவளை அவன் மிகவும் காதலித்திருந்தான். சிறிய ஒரு பிரச்சனை குடும்பத்தில் சரிசெய்யவே முடியாதபடி பெரிய அளவில் பகையாக முடிந்து விட்டிருந்தது. கைமீறிச் சென்று விரோதமாகிவிட்டது. ஆனால் வெளியில் எவருக்குமே தெரியாது.
அவள் இப்பொழுது பயந்து ஒரு கலக்கத்துடன் சிரித்தாள். அவனும் சிரித்தபின் அவளை ஒரு தோழியாய் பாவித்து நலம் விசாரித்தான். அவளுக்கு ஒரே பையன்தான், அவனின் பெயரையே மகனுக்கும் வைத்து காதலுக்கு பெருமை சேர்க்க முயன்றிருக்கிறாள். நண்பர்களாகவே பேசிக்கொண்டனர். பழைய விஷயங்கள் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இடையிடையே அவன் முகத்தினை நேருக்கு நேராய் வைத்தகண் வாங்காமல் பார்த்தாள். பின்னர் நாம் இருவரும் சேர்ந்து நின்றுகொண்டு ஒரு போட்டோ எடுத்துக்கொள்வோமா என்று கேட்டாள். கடைசி தளத்திற்கு வந்து சேர்ந்து மொட்டைமாடி செல்லும் படிகளில் நின்று, அங்கு நின்ற ஒரு இளைஞனிடம் போட்டோ எடுத்துத் தரும்படி கேட்டு செல்போனில் படம்பிடித்துக்கொண்டனர். கொஞ்சம் கைகள் உரசிக்கொண்டன. இன்பமான நினைவுகளுடன் பிரிந்து சென்றனர்.
எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு மனைவியுடன் வீடு திரும்பினான். பழைய காதலியுடனான சந்திப்புப்பற்றி மனைவியிடம் எதுவும் சொல்லவில்லை. மெயில்பாக்சை கம்பியூட்டரில் ஆன் செய்தபொழுது அவனின் முன்னாள் காதலி அந்தப் புகைப்படத்தினை பிரதியெடுத்து அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதை ஒரு காப்பி போட்டு செல்போனில் இறக்கிக் கொண்டான்.
மறுநாள் ஆபீசில் ஒரு முக்கியமான மீட்டிங்கும் அதைத்தொடர்ந்து முக்கிய வேலைகளும் முழுமையாய் அவனுக்கு இருந்தன. இடைவெளி இல்லாமல் வேலை. அவனின் உதவியாளர் வந்து அவனிடம் கம்பெனி மாதாந்திரப் பத்திரிக்கையில் போடுவதற்காக அவனின் போட்டோ ஒன்று தேவையிருப்பதாகக் கேட்டான். கம்பியூட்டரில் இருக்கும் படம் ஒன்றை ஒப்பன்செய்து ஒருகாப்பி எடுத்துக்கொள் என்று அவசரத்தில் கவனமின்றி சொல்லிவிட்டான். உதவியாளன் மிகச் சரியாக அவன் காதலியுடன் முந்தயநாள் எடுத்துக்கொண்ட அதே போட்டோவுக்கு ஒரு காப்பி எடுத்துக்கொண்டான்.
சிலநாட்கள் கழிந்து கேண்டீனில் ஆரவாரமின்றி அமைதியாய் அமர்ந்து காப்பி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளை அவனின் சக பெண் ஊழியர், தோழி அவனிடம் வந்து கம்பெனியின் மேகசினைக்காட்டி அட்டைப்படத்தில் அவனருகினில் இருக்கும் அந்தப்பெண் யார் என்று வினவினாள். அப்பொழுதுதான் அவனின் தவறு அவனுக்குப் புரிந்தது. வியர்த்துக் கொட்டியது அந்தக்குளிரிலும்.

