விண் வெளிக் காதல்.

நிலவும் வானும் சந்தித்த வேளையில்
நீலக் கடற்தாய் காற்றினை அனுப்பி
சீலையைப் போலே சிறுகருப்பு மேகத்தை
சீதனமாய் அவளுக்குப் போர்த்தக் கொடுத்தாள்.

புத்தகம் சென்ற அவ்வித்தாரக் கள்ளி
சத்தமின்றி அதனை நாற்புறம் போர்த்து
எத்திசையும் தெரியும் பொன் ஒளிதன்னை
மொத்தமாய் கொஞ்சம் மறைத்து விட்டாள்.

நிலவும் வானும் குலவிடும் நேரத்தில்
கொஞ்சமும் இங்கிதம் இல்லாத காற்றான்
போர்த்திய போர்வையை கிழித்து இழுத்திட
வேர்த்து நிர்வாணமாய் வெட்கிப் புழுங்கினாள்.

சித்திரச் சிறுக்கி சிணுங்கிச் சிரித்தாள்
நித்திரை அறுத்து மயங்கி நின்றாள்
புத்தனே ஆயினும் புரிந்திடும் காதலை
நித்தமும் பாரெனும் பெளர்ணமிப் பெண்ணவள்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (29-Nov-12, 11:32 am)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 117

மேலே