திரும்பிப் பார்க்கிறேன் – சிந்தனை

சிந்தனை என்பது என்ன? அது எப்படி தோன்றுகிறது? எங்கு தோன்றுகிறது?

துடிப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைதான் சிந்தனை. ஆம். உயிர் வந்தபின்பே சிந்தனை பிறக்கிறது. உயிர் இல்லாத பொருள் எதுவும் சிந்திப்பது இல்லை. எனவே சிந்தனை என்பது உயிரின் அடுத்த கட்ட நடவடிக்கை. அது துடிப்பின் வெளிப்பாடு.

உதாரணம்: குழந்தைக்கு ஒரு தின்பண்டம் வேண்டும்.
அந்த தின்பண்டத்தில் அதன் துடிப்பு தொடங்கி விட்டது. அந்த தின்பண்டத்தை பற்றி அதன் சிந்தனை தொடங்குகிறது.
அதன் சுவை, அதை கொள்வதால் வரும் மகிழ்வு, அதை அடையும் வழிமுறை, அதை அடையும் வேட்கை, போன்ற சிந்தனை அந்த குழந்தையிடம் பிறக்கிறது.

சிந்தனை தோன்றும் இடம் மனது என்று வரையறுக்கப்பட்டு உள்ளது தமிழ் மொழியில். (விஞ்ஞான விளக்கத்திற்கு நான் செல்லவில்லை)

சிந்தனையில் தேவையானது, தேவையற்றது என்று எப்படி வரையறுக்கப்படுகிறது. இதற்கு சிந்தனையின் தொடக்கத்தை ஆழமாக பதிவு செய்யவேண்டியது அவசியமாகிறது.

சிந்தனையின் தொடக்கம் உயிர்த் துடிப்பில் உள்ளது. உயிர்த்துடிப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தேவைப்பாடு. அதாவது வளர்ச்சியின் வேட்கை.

வளரும்போது வரும் தேவைகள்தான் சிந்தனையின் பிறப்பிடம். தேவைப்பாடு என்பது இல்லையெனின் சிந்தனை பிறப்பதில்லை. தேவையின் பொருட்டு பிறக்கும் சிந்தனையால் துடிப்பு இயக்கம் பெறுகிறது. அதாவது துடிப்பின் அடுத்த நிலையான தேவைப்பாட்டிற்கும், இயக்க நிலைக்கும் இடைப்பட்ட நிலைதான் சிந்தனை என்பது . சிந்தனையின் அடுத்தகட்ட நிலை என்பது இயக்கம் ஆகும்.

விலங்கு ஒரு உயிர். அதனிடம் துடிப்பு உண்டு. துடிப்பில் (உயிரில்) பசி வரும்போதோ, ஆபத்து வரும்போதோ (பசி உணரப்படும்போதோ, ஆபத்து உணரப்படும்போதோ) தேவை பிறக்கிறது. அதனால் அதனிடம் சிந்தனை பிறக்கிறது. அதன் மூலம் இயக்கம் பிறக்கிறது. வேட்டையாடுகிறது அல்லது பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்கிறது.

எனவே சிந்தனைக்கு பிறப்பிடமாக இருப்பது, உயிர்த்துடிப்பால் வரும் வளர்ச்சியால் எழும் தேவைப்பாடு. சிந்தனை என்பது வெளிப்பாட்டின் முதற்படி. செய்கையின் (இயக்கத்தின்) முன்னோடி.

சிந்தனை என்பதை எப்படி வரையறுப்பது? அதற்கு எப்படி விளக்கம் அளிப்பது? அதன் பரிணாமம் என்ன?

சிந்தனை என்பது வெற்றுக்களிமண் நிலை. அது வளரும்போது நோக்கம் என்று பெயர் பெறுகிறது. நோக்கம் என்பது நீருடன் கலந்த களிமண் நிலை, பொருள்கள் செய்வதற்கு தயாராய் இருக்கும் களிமண் நிலை. நோக்கம் என்பது குறிக்கோளின் முன்னோடி. குறிக்கோள் என்பது இயக்கத்தின் முதற்படி. எனவே நோக்கம் மற்றும் குறிக்கோள் என்பவை சிந்தனையின் பரிணாம வளர்ச்சி நிலை.

இந்த சிந்தனைதான் ஆங்கிலத்தில் “அட்டிட்யூட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த சிந்தனையில்தான் நோக்கம் உருவாகிறது. அதனால்தான் தொடர்ந்து தவறு செய்யும் மனிதரின் அட்டிட்யூட் சரியில்லை என்று முத்திரை குத்தப்படுகிறது.

சிந்தனை என்பது ஒரு திசையின்றி கிடக்கும் ஒரு தேக்க நிலை. அதில் நோக்கம் இருப்பது அவசியமில்லை. இயல்பாய் வரும் ஊற்றுதான் சிந்தனை எனப்படுகிறது.

சிந்தனை ஒரு திசையில் முகம் பெறும்போது தமிழில் நோக்கம் என்று பெயரிடப்படுகிறது. ஏனெனில் நோக்கம் என்பதில் சிந்தனை ஒரு வடிவம் பெறுகிறது. அதன் பிறகு வளர்ந்து நோக்கம் குறிக்கோள் ஆக மாறும்போது மட்டுமே அது முதிர்ச்சி அடைகிறது. செயலுக்கு -- இயக்கத்திற்கு தயாராகிறது இந்த சிந்தனை.

அதை எப்படி வெளிப்படுத்துவது? அதை எப்படி புரிய வைப்பது?

சிந்தனை நோக்கமாக வளர்ந்து, குறிக்கோளாக பரிணாம வளர்ச்சி அடைந்த பிறகே செயலுக்கு, இயக்கத்திற்கு தயாராகிறது. எனவே சிந்தனை பரிணாம வளர்ச்சி அடைந்த பிறகு அதை வெளிப்படுத்த ஊடகம் தேவைப்படுகிறது. அந்த ஊடகம்தான் உணர்ச்சிகள். உணர்ச்சிகளின் ஊடகம் மொழிகள் (சப்தங்கள்).

ஊடகமின்றி சிந்தனையை வெளிப்படுத்த முடியாது.

தொடரும்…..
சந்திரன் சேகர்

எழுதியவர் : சந்திரன் சேகர் (8-Dec-12, 10:30 pm)
பார்வை : 199

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே