திரும்பிப் பார்க்கிறேன்….. வெளிப்பாடுகள் (செயல்கள்)

உணர்ச்சிகள், உணர்வுகள் இவற்றின் வெளிப்பாடுகள் தேவையின் பொருட்டே வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிந்தனையை எந்த கோணத்தில் வெளிப்படுத்த வேண்டுமோ அதற்கேற்றாற்போல தரம் பிரிக்கப்பட்டு உள்ளன. அனிச்சை, அடிப்படை, இயல்பு, தேவை, அவசியம், மற்றும் ஆடம்பரம் போன்ற நிலைகளுக்கு ஏற்ப படிநிலைகளாய் கட்டமைக்கப் பட்டுள்ளன.

சரி இனி வெளிப்பாடுகளின் படி நிலைகளை பார்ப்போம்.
(வெளிப்பாடுகள்=செயல்கள்)

அனிச்சை, அடிப்படை, இயல்பு, தேவை, அவசியம், மற்றும் ஆடம்பரம்

அனிச்சை நிலை என்பது ..….
நம் இயல்பையும் மீறி வெளிப்படுபவை. அதாவது யோசனையில், சிந்தனையில் பதிவே இன்றி வெளிப்படும் நிலை. பசிக்கிறது… ஒரு பிறந்த குழந்தை என்ன செய்யும்? நிச்சயமாக சிரிக்காது, விளையாடாது, அமைதியாய் இருக்காது. இயல்பாகவே அழும். உடல் கழிவு வந்தால் என்ன செய்யும், யாரையும் அனுமதி கேட்காது. காத்திராது. கட்டுப்படுத்தாது. அழாது. இயல்பாகவே படுத்தபடியே வெளியிடும்.

அதாவது இயற்கையோடு ஒன்றிப் போய் எந்தவொரு பிரஞையும் இன்றி தானாகவே வெளிப்படுவதுதான் அனிச்சையான வெளிப்பாடுகள்.

சிந்தனைக்கு எப்படி உருவம் இல்லையோ அது போன்ற நிலையில் உள்ளது இது. இதை பாகுபடுத்தவே முடியாது. ஒப்புக்கொள்வது, மறுத்து ஒதுக்குவது எனும் விருப்பு வெறுப்புக்கு இதில் இடமேயில்லை. அதுதான் அனிச்சையான நிலை. இந்நிலையில் வரும் வெளிப்பாடுகள் யாவும் அனிச்சை செயல்கள் என்று வகைப்படுத்தலாம். இது உயிர்களின் தகுதி நிலையைப் பொறுத்து மாறுபடும். அனிச்சை நிலை வெளிப்பாடுகள் முதல் கட்ட வெளிப்பாடுகளாகும். அவை சிந்தனையில் பதிவுகள் இன்றியே வருபவை.

அடிப்படை நிலை என்பது…..
திடீரென வரும் நிகழ்வுகளுக்கு ஒரு வடிகால்தான் அடிப்படை நிலை வெளிப்பாடுகள். காலில் முள் திடீரென குத்தினால் “ஆ” வென கத்துவது போல. இந்த வெளிப்பாடுக்கு என்ன பெயர் கொடுப்பீர்கள்? (கத்தாமல் அமைதியாகவும் அதை நோக்கலாம்)

தவழும் ஆரோக்கியமான குழந்தை தேவைகள் இல்லாத போது தாயின் முகம் பார்த்தால் என்ன செய்யும்? இயல்பாய் சிரிக்கும். தேவைகள் இருக்கும்போது அழும். தூக்குவதற்கு வற்புறுத்தும். அரவணைப்பு கேட்கும். இதில் இயல்பாய் சிரிக்கும் வெளிப்பாடு அனிச்சை வெளிப்பாடு. அழுவதும், தூக்குவதற்கு வற்புறுத்துவதும், அரவணைப்பு கேட்பதும் அடிப்படை நிலை வெளிப்பாடு.

அடிப்படை வெளிப்பாடுகள் மறுக்கப்படக் கூடாது. மறுக்கப்படும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. மறுக்கப்படும் வெளிப்பாடுகள் பக்குவப்பட்டால் சிந்தனை முதிர்வடைகிறது. இல்லையென்றால் முரண்டு, பிடிவாதம், உரிமைக்குரல், போராட்டம் தொடங்குகின்றன. இது (உயிர்கள், வயது, பருவம்) எல்லா நிலைக்கும் பொருந்தும்.

இயல்பு நிலை என்பது…..
இயற்கையோடு ஒட்டி வாழ (துடிப்பை வெளிப்படுத்த) அவசியமான ஒன்றுதான் இயல்பு நிலை வெளிப்பாடு ஆகும். இவை அடிப்படை நிலையில் இருந்து சற்றே வளர்ச்சி அடைந்த நிலை வெளிப்பாடுகள்.

நடக்கும் குழந்தை உடல் கழிவை அதற்குரிய இடத்தில் சென்று வெளிப்படுத்துவது போல. பருவம் அடைந்தவர்களின் கவர்ச்சி ஈர்ப்பின் வெளிப்பாடு போல.
சற்றே மூக்கை அழுத்தி பிடித்தால் ஒருவர் முதலில் என்ன செய்வார்? உடனடியாக வாயைத் திறப்பார். பிறகுதான் அழுத்திய கையை விடுவிக்க முயற்சி செய்வார். அதற்கு அடுத்த கட்டமாகத்தான் கேள்வி எழுப்புவார் “ஏன் அவ்வாறு செய்தாய்?” என்று.
சரி இதற்கும் அனிச்சை மற்றும் இயல்பு நிலை வெளிப்பாடுகளுக்கும் என்ன வேறுபாடு?
சற்றே பொறுமை அவசியம். இதில் எந்த வெளிப்பாடு இயல்பு நிலை வெளிப்பாடு என்பதை நான் இன்னும் கூறவே இல்லை.
இதில் சட்டென்று “ஆ” வென வாயைத் திறப்பது அனிச்சை வெளிப்பாடு. அழுத்திய கையை விடுவிக்க முயல்வது அடிப்படை நிலை வெளிப்பாடு.
“ஏன் அழுத்தினாய்?” என்று கேட்பதுதான் இயல்பு நிலை வெளிப்பாடு. “வாழத்துடிக்கும் என் மூக்கை ஏன் அழுத்தினாய்?” என்பது இயல்பான வெளிப்பாடு.
அப்படி கேட்கத் தோன்றவில்லை எனில் அதைத்தான் இயல்பு நிலைக்கு முரணான சிந்தனையின் வெளிப்பாடு என்கிறோம். பருவம் அடைந்த பின்பும் பருவ ஈர்ப்பு வரவில்லை என்றால்தான் கவலை கொள்ளவேண்டும். ஆனால் இங்கோ பருவ நிலை கவர்ச்சி வந்தால்தான் பலர் கவலை கொள்கின்றனர். (என்ன ஒரு முரண்பாடு)

ரத்த சொந்தம் நபர் ஒருவரின் மரணத்தில் எவரேனும் ஒருவர் அழவில்லையெனில் அது இயல்பு நிலை வெளிப்பாடு என்று ஒப்புக்கொள்ள முடியுமா? அப்படி அழாத மனிதரை அழ வைத்துவிட வேண்டும் என்று முயல்வதில்லையா? (அரசியல் மரணத்தை நான் இங்கு குறிப்பிட வில்லை, தனிநபர் வெளிப்பாடுகளைத் தான் விவரித்துக் கொண்டிருக்கிறேன்).
ஏன்? மரணம் என்பது துக்கம் என்பதும், துக்கத்தில் அழவேண்டும் (வருத்தம் வேண்டும்) என்பதும் எந்த உயிர்க்கும் உள்ள இயல்பு நிலை வெளிப்பாடுதானே. அதற்கு முரணான வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமும், புறக்கணிக்கும் உரிமையின்மையும் இதில் அடங்கி உள்ளது.

தேவை நிலை என்பது….
இயல்பு நிலைக்கு சற்றே ஒருபடி முதிர்ந்தது இந்த தேவை நிலை வெளிப்பாடுகள். எல்லோரும் சிரிக்கிறார்கள், நானும் சிரிக்கிறேன். எல்லோரும் அமைதியாய் இருக்கிறார்கள், நானும் அமைதியாய் இருக்கிறேன். எல்லோருக்கும் வருத்தம் நானும் வருத்தப்படுகிறேன்.
அதாவது சூழலின் தேவை சிந்தனையில் இருந்து வெளிப்படுகிறது. எல்லோரும் அழும்போது என்னால் எப்படி சிரிக்கும் சிந்தனையை வெளிப்படுத்த முடியும்?. எனது சூழல் எதுவாயிருந்தாலும், இப்போது இந்த சூழலில் இருக்கும்போது இந்த வெளிப்பாடுகள் தானே வரும். இதில் சொந்த விருப்பு வெறுப்புகள் உள்ளடங்கி இருந்த போதும், எனது வெளிப்பாடுகள் சூழலின் தேவைக்கேற்ப வெளிப்படும். (மனதில் அந்த சூழல் பிடிக்காத போதும்) இயல்பு நிலைக்கு முரணாக, அனைவரும் வருத்தத்தில் இருக்கும்போது நான் சிரித்தால் யாரும் என்னை அசாதாரணமாக எண்ணப்போவதில்லை என்று இருப்பினும் நான் சூழலுக்கேற்றபடி எனது வெளிப்பாட்டை செய்கிறேன்.

தேவை நிலை வெளிப்பாடுகளில் கட்டாயமும் இல்லை அதே நேரத்தில் புறக்கணிக்கும் உரிமையும் உண்டு. இருப்பினும் பெரும்ப்பான்மையுடன் என் வெளிப்பாடு ஒத்துப்போகும்.

அவசிய நிலை வெளிப்பாடுகள் என்பது…
கடமைக்கு ஒப்பானது. விருப்பு வெறுப்புகளை புறக்கணிப்பது. சிந்தனையில் முதிர்ச்சி வந்து இருந்தபோதிலும், சிந்தனை பக்குவப்பட்டு இருந்த போதிலும், வரும் வெளிப்பாடுகள் அவசிய நிலை வெளிப்பாடுகள் ஆகும். இந்த வெளிப்பாடுகள் வந்து போன பின்தான் சிந்தனையில் ஒரு தடுமாற்றம் வரும் ஏன் அந்த வெளிப்பாடு வந்தது என்று. அதற்கு மாற்று இருந்து இருப்பதாக மனதில் தோன்றும் மற்றும் அதை செய்லப்டுத்தாமல் இருந்ததாக எண்ணத்தோன்றும்.
மகன் காதலித்துவிட்டான் என்றால், உறவினரின் அவச்சொல்லுக்கு பயந்து ஆத்திரம் கொள்வது போல, கௌரவம் பார்ப்பது என்பது இதுதான்… அவசிய நிலை வெளிப்பாடு. அதற்கு மாற்று இருந்தும் செய்யத்தோணாது இருக்கும் சூழ்நிலை வந்து, காலத்தின் கட்டாயத்தால் வெளிப்பாடு செய்வது பின் யோசிக்கும் நிலைக்கு தள்ளப்படுவது.

ஆடம்பர நிலை வெளிப்பாடு என்பது….
இயல்புக்கும், சூழலுக்கும் சற்றே அப்பாற்பட்ட ஒரு செயல். இருந்தாலும் செய்வது. ஆடம்பரம் என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக் கொண்டது மட்டும் அல்ல. அறிஞர்கள் கூடி இருக்கும் கூட்த்தில் சற்றே முயன்று தனது சிந்தனை தெளிவைக் காட்ட முயல்வதும் ஆடம்பர நிலை வெளிப்பாடுதான். (அதிகப் ப்ரசங்கித்தனம், மேதாவித்தனம், அலட்டல் பேர்வழி போன்ற பெயர் எடுக்க உதவுவதும் இந்த வெளிப்பாடுகளே) அதாவது அடிப்படையில் பதம் இன்றி, மேல் வாரியாக காட்டுவதற்கு மட்டுமே தன் உணர்ச்சிகளையோ உணர்வுகளையோ வெளிப்படுத்துவது.
தொடரும்…..
சந்திரன் சேகர்

எழுதியவர் : சந்திரன் சேகர் (8-Dec-12, 10:41 pm)
சேர்த்தது : chandran sekar
பார்வை : 173

சிறந்த கட்டுரைகள்

மேலே