இன்றைய தமிழ் நிலைமை

தமிழ் எனக்கு பிடித்த மொழிகளில் அழகிய மொழி. செம்மொழியான தமிழ் மொழி தமிழகத்தில் இன்று மொழி கலப்புடன் தான் புழக்கத்தில் உள்ளது என்பது நான் கூறும் அதிசய உண்மை கிடையாது, இது உங்கள் அனைவருக்குமே அறிந்த நன்கு தெரிந்த யதார்த்த உண்மை. பொதுவாக தமிழுக்கு குரல் கொடுக்கும் பல நபர்கள் தமிழை வெளியிடங்களில் வாழவைத்தும் வீட்டினில் தமிழை கலப்படம் செய்து தங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்கின்றனர்.

அப்பா, அம்மா என்ற உணர்வு பூர்வமான தமிழ் சொல்லை பல பெற்றோர்கள் டாடி, மம்மி அல்லது டாட், மம் என்று தேனிசை பாய குழந்தைகள் கூறுவதையே விரும்புகின்றனர். இந்த நவீன மோகத்தில் குழந்தைகள் தமிழை பேசுவது கூட சில தம்பதிகள் கௌரவ குறைச்சலாக கருதுவதும் உண்டு. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்பதற்காக புத்தக கடைக்கு சென்று ஆங்கில அறிவு வளர்க்கும் வண்ணம் உள்ள புத்தகங்களை குழந்தைகளுக்கு படிக்க வாங்கி தருகிறார்கள். இதில் எத்தனை பேர் தமிழ் இலக்கிய, கவிதை புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளனர், அப்படி கொடுத்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே பெற்றோர்கள் இருப்பர். என்னுடைய தாய்மொழி மலையாளம் ஆனாலும் தமிழ் மேல் பற்று காரணமாக நான் இந்த தமிழை எழுதும் அளவிற்கு ஒரு சராசரி தமிழன் எழுதுவது கூட இல்லை என்று சில நேரம் வருத்தபட்டும் இருக்கிறேன். எனக்கு தமிழின் ஆழமான விழுதுகள் தெரியாமல் இருக்கலாம் ஆனாலும் தமிழை என் மனதினில் விழுதாக விதைத்து நான் தமிழை மதிக்கிறேன், நேசிக்கிறேன்.

தமிழ் என் உயிர் மூச்சு, தமிழ் என் பேச்சு என்று முழங்கிடம் சில ஆசாமிகள் கூட தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனால் வெளியே உள்ள பிள்ளைகளுக்கு மட்டும் அறிவுரையாக தமிழ் மட்டும் படி, தமிழை மட்டும் பேசு என்று அறிவுரை கூறி தங்கள் குழந்தைகளை அயல்நாடுகளில் படிக்க அனுப்பிய சில தமிழ் மேதைகளும் நான் கண்டதுண்டு. ஏன் இந்த வேஷம், யாரை ஏமாற்ற என்று புரியவில்லை.

இன்றைய காலச்சூழலில் ஆங்கிலம் நமக்கு தேவை. தமிழ்நாட்டில் சாராசரியாக வேலைக்கு செல்லும் இடத்தில் ஆங்கில அறிவு கொண்ட நபரையே முதன்மை படுத்தி வேலைக்கு அமர்த்துகின்றனர். அயல்நாட்டு வேலைக்கு கண்டிப்பாக ஆங்கில அறிவு வேண்டும். என்னை பொறுத்தவரை தன் தாயை மறந்தவனும் தாய் மொழியை மறந்தவனும் ஒன்று. தமிழை நாம் என்றும் சிறப்பித்து காக்க வேண்டும் நம் தாயை போல. பிற மொழிகளை நம்முடைய தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி பின்பு அதை சுழற்றிவிட வேண்டும். ஆனால் இன்றைய தமிழர்கள் சிலர் நவீன நாகரீகம் என்கிற மட்டமான போதையில் தமிழை துச்சமாகவும் பிற மொழிகளை உச்சமாகவும் கருதுவது தமிழுக்கு வந்த காலக்கொடுமை என்றே சொல்லாம்.

எழுதியவர் : ஆயிஷாபாரூக் (10-Dec-12, 11:11 am)
பார்வை : 1271

சிறந்த கட்டுரைகள்

மேலே