அப்புறவே படுத்த முடியாத கூடங்குளம்..?!
அப்புறவே படுத்த முடியாத கூடங்குளம்..?!
28 ஆண்டுகள் ஆனபின்னரும் போபால் விபத்திற்கு நட்டஈடு வாங்கி கொடுக்க வக்கில்லாத மத்திய அரசு , 400 டன் அளவிற்கு இன்னும் உள்ள ரசாயன கழிவுகளை அப்புறப்படுத்த முடியாத மத்திய அரசு கூடங்குளம் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது என்று வாய்கூசாமல் பொய் கூறி வருகிறது. மத்திய அரசிற்கு ஜால்ரா அடித்து கொண்டிருக்கிறார் "நாசா" என்கிற நாராயணசாமி.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவுகளை எங்கே வைத்து பாதுக்காக்கப் போகிறீர்கள்?
இந்திய சாலிசிட்டர் ஜெனரல் திரு. ரோகித் நரிமன் கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள பழையச் சுரங்கங்களில் வைப்போம் என்றார்.
சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1964-ம் ஆண்டு கோலாரில் நியூட்ரினோ திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து, 1992-ம் ஆண்டு அதை மூடிவிட்டார்கள். அந்த சுரங்கத்தில்தான் இப்போது கூடங்குளக் கழிவுகளை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியக் கழிவுகளை வைப்பதாக திட்டமிடுகிறார்கள்.
அணுசக்தித் துறை செய்தித் தொடர்பாளர் திரு. எஸ். கே. மல்கோத்ரா “இப்படி ஒரு திட்டமே கிடையாது” என்று அடித்துச் சொல்கிறார்.
அமைச்சர் நாராயணசாமி இந்தியாவிலே எங்கேயும் புதைக்கமாட்டோம் என்று சத்தியம் செய்கிறார். “நான் இந்திய அணுமின் கழகத் தலைவரிடம் பேசினேன்; அவர் கழிவுகளை எங்கேயும் புதைக்கும் திட்டம் இல்லை என்று சொன்னார்” என்று புளுகுகிறார். அப்படியானால் கழிவுகளை என்ன செய்வதாக உத்தேசம் என்று யாரும் அவரிடம் கேட்கவில்லை.
“அணுக் கழிவுகளை எப்படி பாதுகாப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை” என்று அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் திரு. எம். ஆர். ஸ்ரீநிவாசன்.
மத்திய காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி கோலார் திட்டத்தை வரவிடமாட்டோம் என்கிறார். (வாயே திறக்காமல் தமிழக அமைச்சர்கள் இந்திய ஒருமைப்பாட்டை காக்கிறார்களாம்)
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து, நமது உழைத்து வாழும் மீனவ மக்கள், நாடார் மக்கள் மீது குண்டர் சட்டம் போட்டு, நமது பெண்களை சிறையில் அடைத்து பேயாட்டம் ஆடுகிற அ.தி.மு.க. கோலார் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது, போராடுகிறது.
கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்பதால் தேசத் துரோகிகள் என்று வர்ணித்து, நமது வாகனத்தை அடித்து உடைத்து, நம்மைக் கொல்ல முயன்ற பாசிச பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்வா இயக்கங்கள் கோலார் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.
கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கோலாரில் மட்டுமல்ல கர்நாடகத்தில் எங்கும் அணுக்கழிவை வைக்கவிட மாட்டோம்.
தமிழன எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா...
ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன தோழர்களே?
கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் - காங்கிரஸ் அமைச்சர் வாசன்.
அணுஉலையை எதிர்த்து போராடுபவர்கள் அமெரிக்கக் கைக்கூலி, இந்தியாவின் எதிரி, தேசத் துரோகி - அமைச்சர் ப. சிதம்பரம். அமைச்சர் நாராயணசாமி & இளங்கோவன்.
(வாசனோ, நா.சா.வோ, சிதம்பரமோ, இளங்கோவனோ கோலார்-ல் அணுக்கழிவு கொட்டுவதை எதிர்ப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றோ, எதிர்த்து போராடுபவர்களுக்கு அமெரிக்க தொண்டு நிறுவனம் பணம் கொடுத்து உதவுகிறது என்றோ கர்நாடகாவிற்கு சென்று அண்மை இருந்தால் பேசட்டும்)
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று உரிமை கேட்கும் கர்நாடக அரசு, கழிவை மட்டும் வைத்துக்கொள்ள மறுப்பதேன்?
கூடங்குளம் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கு வாங்கித் தருவோம் என்ற நாராயணசாமி வகையறாக்கள் இப்போது மாற்றிப் பேசித் திரிவதன் நோக்கம் என்ன?
இந்திய அணுமின் கழகம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் ஆவணத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளிப்படும் தீய்ந்த எரிபொருள் ஏழாண்டு காலத்துக்கு அணுமின் நிலையத்திலேயே பாதுகாக்கப்படுமாம். இதற்கு எந்தவிதமான சுற்றுச்சூழல் அனுமதியும் பெறவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து எவ்வளவு தீய்ந்த எரிபொருள் வெளிவரும், அது எங்கே மறுசுழற்சி செய்யப்படும், அதில் எவ்வளவு மீண்டும் உபயோகிக்கப்படும், எஞ்சியிருக்கும் கழிவை எங்கே வைத்து பாதுகாக்கப் போகிறோம்? எந்த கேள்விக்கும் பதில் இல்லை. மறுசுழற்சி செய்வது எங்கே, எப்படி, அந்த வசதி செய்யப்பட்டு விட்டதா? எப்போது செய்வதாக உத்தேசம்? யாரும் யாரிடமும், எதுவும் சொல்லவில்லை. மாய வலையில் சிக்கியிருப்பவர்கள் மடத்தமிழர்கள்தானே என்ற எண்ணமாயிருக்கலாம். எந்த விதமான முறையான, தெளிவான திட்டமும் இல்லாமல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற முறையில் அணுசக்தித் துறையும், மத்திய அரசும் கூடங்குளம் பிரச்சினையை அணுகுகின்றன.
கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், சமூக இயக்கங்களும் ஒரே குரலில் கோலார் திட்டத்தை எதிர்த்துப் போராடும்போது, தமிழகத்தில் உள்ள கட்சிகள் ஒன்று சேராமல், தமிழர்களை காட்டிக் கொடுப்பதிலேயே குறியாய் இருப்பது ஏன்?
இணக்கமான கட்சிகள்கூட பட்டும், படாமலும் தள்ளி நிற்பது ஏன்?
இன்று வரை கூடங்குளம்— கோலார் குழப்பத்தில் மவுனம் காப்பது ஏன்?
முத்தமிழ் வேந்தன்

