முதல்நாள்

காலை மிகவும் இனிமையாகவே அன்று மலர்ந்திருந்தது அவளுக்கு. பறவைகளின் க்ரீச்சல்கள், இயற்கையின் அழகிய அந்த நிசப்தம், எங்கோ மூளையின் ஓரத்தில் குறுகுறுத்துக் கிடக்கும் காதலின் நினைவு உரசல்கள் எல்லாமும் இன்ப ஊற்றாய் ஊறிக்கொண்டிருந்தது. நாளை சொந்த ஊருக்கு, அதாவது சொந்த நாட்டுக்குச் செல்லும் பயணம். அவனொன்றும் கமலைப்போல் ஒரு அழகனல்ல, ஆனாலும் அவனையே மனம் நாடிக் கிடக்கின்றது. இன்றிலிருந்து முப்பதுனாட்கள் விடுமுறை. வருடம் ஒருமுறையான முக்கியத் தேவையான அந்த இன்பனாட்கள். ஒருனொடியினைக்கூட வேண்டாமென தூக்கி எறிந்துவிட முடியாத சொந்தனாட்கள். மிகவும் தேவையான, அடுத்த முழுவருடத்தையும் முழுமையாய் முழுங்கிட உதவும் ஊக்கமேற்றும் முக்கியநாட்கள். சிந்தனைப்பூக்கள் பூக்கத் துவங்கிவிட்டன.
சரி, என்னென்ன எடுத்துச் செல்லவேண்டுமென்ற மனவோட்டம் ஓடத்துவங்கியது படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்தாள். அவளின் சிந்தனையனைத்தையும் அவன் குத்தகைக்கு எடுத்ததுபோல் அவனையே சுற்றிசுற்றி வந்துகொண்டிருந்தது மனம். அவனுக்காக அவள் வாங்கிவைத்த ஒரு பொருளை முதலில் எடுத்து ஒரு முத்தமிட்டு பெட்டியில் எடுத்து வைத்தாள். என்னென்ன கொண்டுசெல்ல வேண்டும் என்று திட்டமிட்டு வேலையை முடிக்க, பசிக்க சரியாக இருந்தது. அவனுக்குப் பிடிக்கும் என்பதால் சில பூரிகளையும், அதற்கு கடலைக்கறியையும் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தாள். அவன் எங்கெங்கு வந்திருந்தபொழுது அமர்ந்தானோ, நின்றானோ, படுத்தானோ அந்தந்த இடங்களுக்கெல்லாம் சென்று அவனின் ஆன்மாவைப் பருகினாள்.
சிந்தனையில் அவனையே முழுவதுமாய் நிரப்பி நிரடினாள். அருகிலுள்ள சொந்தங்களைக்கூட அவளால் கவனிக்கமுடியாமல் சிதறிய எண்ணங்களுடனேயே அந்தநாளின் கதுவுகளை அடைத்தாள். இரவு முழுவதும் கலந்த உயிரால் உறங்கிட முடியவில்லை. ஆனாலும் காலையில் அலுப்போன்றும் இல்லை. மாறாக புத்துணர்வு பொங்கி வழிந்ததை அவளாலும் அவள் புன்னகையாலும் மறைத்திட முடியவில்லை. வீட்டின் வேலைகளனைத்தையும் முடித்து, ஏர்போர்ட் வந்து, செக்கின் முடித்து, விமானம் ஏறி, உறவுகளுடன் அமருவரை எப்படி, எல்லாம் நடந்தேறியது என்ற நினைவுகள் அவளிடம் இல்லை. நடப்பதனைத்தும் உண்மைதானா என்பதற்கு, தன கன்னத்தையே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். கண்களுக்கு உரைகளை மாட்டிக்கொண்டு உறங்குவதுபோல் அவனின் இன்ப நினைவுகளில் கரைந்தாள். பதினெட்டு மணிகளும் கண்மூடித்திறந்ததுபோல் முடிந்து பணிப்பெண் சென்னை வந்ததை அலறிச் சொன்னதும் சிலிர்த்தாள். அவளின் வேகம், உறவுகள் உதவிடவில்லைஎனில் கட்டாயம் நிறைய விஷயங்களை மறந்திருப்பாள்.
அதோ அவன் நின்றுகொண்டிருப்பதைக் கவனித்துவிட்டாள். அவன் எப்படி மறைந்து நின்றாலும் அவளின் கண்களிலிருந்த அவனால் தப்பிவிடமுடியாது. சிரித்தாள். வெட்கமடைந்தாள். குனிந்தாள். ஆனாலும் ஒன்றும் பேசிட முடியவில்லை. பெட்டிகளை ஜீப்பில் எல்லோருமாய் ஏற்றி முடித்ததும், அவன் கதவைப்பூட்டுமுன் ஏதோ பார்க்க வேண்டியதுபோல் அவனருகில் வந்து சோதனை செய்திடுவதுபோல் கைகளோடு அழுந்த உரசினாள். இன்ப மழையில் கொஞ்சம் நனைந்தாள். உள்ளுள் ஆயிரம் மின்னல்கள் மின்னின. அருகில் ஒருவரும் இல்லைஎன்பதை உறுதி செய்தபின் அவனின் கன்னத்து முத்தத்தினை ஏற்றுக்கொண்டாள்.
வீடுவந்தபின்னும் எல்லோரும் வீட்டினுள் சென்றபின் எதையோ தேடுவதுபோல் சட்டென வெளியில் வந்து ஜீப்பினருகில், அவனருகில் வந்து ஒட்டிக்கொண்டு நின்றாள். அவனின் ஒரு அழுத்தமான காதல் முத்தத்தை தன்னைமறந்து பெற்றுப் பருகினாள். முதல்நாள்.

எழுதியவர் : தீ (15-Dec-12, 9:21 am)
பார்வை : 322

மேலே