ஒரு அழகிய கனவு...!

விலை பேசி முடித்து விட்டேன்.... நாம் குடியிருந்த வீட்டினை....! கடைசியாய் ஒரு முறை நான் கண்ட கனவுகளை கண்டு செல்லலாம் என்று காம்பவுண்ட் கேட்டினை தள்ளும் போதே... முகப்பு ஓரமாய் இருக்கும் அறைக்குள் இருக்கும் நமது படுக்கையறை வழியே ஒட்டிக் கொண்டிருக்கும் முகம் இன்னும் மாயையாய் என் புத்திக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறது...

காதலையும், கனவுகளையும் ஒன்றாக்கி நாம் குடியேறிய அந்த முதல் தினத்தை எப்படி மறக்க...? சிறகு முளைத்த பட்டாம் பூச்சியாய் வீட்டிற்குள் பரவசமாய் அங்கும் இங்கும் நாம் சுற்றித் திரிந்த நாட்கள் எவ்வளவு அருமையானவை....! காதலின் தொடர் பாதையில் திருமணம் என்பது ஒரு சடங்காகிப் போக நீ என் மனைவியாகிப் போனாய்...

காலையில் நீ எப்போதும் கொடுக்கும் காஃபியில் காதல் நிறைந்திருக்கும் சர்க்கரையாய் காமம் கலந்திருக்கும். நீர் சொட்டும் தலைக்கு நீ சுற்றியிருக்கும் அந்த டவலையும் தாண்டி நீர் சொட்டும் காட்சியை ஒரு வேளை நான் ஓவியனாயிருந்தால் அதை ஒப்பற்ற சித்திரமாக்கியிருப்பேன்..

கவிஞனானதால்.. வார்த்தைகளுக்குள் அதைக் கொண்டு வரப் போராடிப் போராடி.... முழுமையாய் அதை வார்த்தைப் படுத்த முடியாமல் பேனாவை நான் உடைத்தெறிந்த போது நீ... ஒரு குழந்தையை போல நீ சிரித்தது கண்டு நானும் ஒரு குழந்தையாகிப் போனேன் உன்னிடம்...!

ஒரு காவியமாய்
துண்டுக்குள்
சுற்றிக் கிடந்த
உன் கேசத்தின்
ஒற்றை முடி கொடேன்
என் கவிதைப் புத்தகத்தின்
ஏதேனும் ஒரு பக்கத்திற்கு
உயிர் கொடுக்கட்டும்!

***

ஒரு சிலையோடு
எப்படி குடும்பம் நடத்த
கலவரமாய் குழப்புகிறதடி
உன் அழகு!

***

உதடுகளால்
என் உதடு தொட்டு
என் உயிருக்குத் தானே
நீ ஒத்தடம்
கொடுக்கிறாய் எப்போதும்!

***

காதலை சொல்ல
வழியற்றுப் போய்
காமம் கொள்ளும்
என் காதலை
நீ அறிவாயா?


தினசரிகளில் நீ காதலை கண்களிலும் நான் காலண்டர் காகிதத்திலும் கொடுத்து பரிமாறிக் கொண்டிருந்த பொழுதுகள் அவை...! நான் கூட உன்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறேன்.....சுவர்க்கம் ஒன்று என்று ஏன் மனிதன் எங்கேயோ கற்பிதம் கொள்கிறான், நான் வேண்டுமானால் பகிரங்கப்படுத்தி விடவா? நான் வசிப்பது சுவர்க்கத்திலென்று! உன் மடியில் படுத்துக் கொண்டு நான் கேட்ட நாட்கள் எல்லாம் வானவில்லைப் போல அழகான நிறம் கொண்ட நாட்கள்தானே....!

மெளனமாய் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.. உன் நினைவுகள் நிரம்பிக் கிடக்கும் உன்னோடு வசித்த இந்த வீட்டின் மூலைகளுக்குள்...! வெறிச்சோடி கிடக்கும் வீட்டுக்குள் வெளிச்சமில்லை நான் விளக்கிட்ட பின்னரும்...! 'வெளிச்சம் நீ' என்றுதானே அடிக்கடி சொல்வேன் நான் இன்று மட்டும் மாற்றுவேனா என்ன?

இதோ.. இந்தக் குளியலறை என்னை கண் சிமிட்டிக் கூப்பிடுகிறது...! மெல்ல திரும்பிப் பார்க்கிறேன். வெட்கத்தில் அது என்னைப் பார்த்து மெளனமாய் ஏதேதோ கதைகள் கூறி மெலிதாய் ஏதோ நினைவுகளை மனதினில் பதிக்க.... ஒரு பெருமூச்சாய் எல்லா விளையாட்டுக்களும் வெளிச் செல்கிறது.

இதோ..பார்க்கக் கூடாது என்று நான் முடிவு செய்து வைத்திருந்த நமது படுக்கையறையை வேறு வழியற்று வெறித்துப் பார்க்கிறேன். பிரபஞ்ச சூட்சுமத்தின் இத்தியாதிகளை தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் காமமென்னும் கடலை நாம் கடந்த இடம்.

மோகத்தில் மேகங்கள் உரசி பெருமழை பெய்விப்பது போல தாகத்தில் நாம் உரசி...சாந்தியடைந்து தட்சிணாமூர்த்தி தத்துவத்தை கற்று தேர்ந்து கலவி செய்த இடம். இருந்ததனை இருந்ததுபோல இருந்து காட்டி வாய் பேசாமல் பிரபஞ்ச ரகசியத்தின் நிழல்தனை தொட்ட இடம்...!

நானற்று, நீயுமற்று வெறுமனே இருந்து மூல இருப்பினை உணரவைத்த காமத்தின் உச்சத்தில் கடவுளைக் கண்டோம் என்று மானசீகமாய் எழுதி கையெழுத்திட்ட ஒரு மடம்.

இன்னும்
சிதறிக் கிடக்கிறது
நமது சிணுங்கல்களோடு
கூடிய உன் கொலுசொலியும்
வளையோசையும்...!

மெலிதாய் பரவிக்
கிடக்கும் மல்லிகை வாசத்தை
பிறப்பிப்பது இந்த
அறையா? அல்லது
என் மூளையா?

ஆச்சர்யமாய் என் பின்னந்தலையைத் தட்டிக் கொண்டு...என்னை கட்டாயமாய் நகர்த்திக் கொண்டு கடைக்கண் கண்ணீரோடு வெளியே வருகிறேன்..! அடுப்பங்கறைப் பக்கமாய் கடக்கையில் உனக்காக நான் வார்த்த தோசைகள் எல்லாம்..என் நினைவுக்கு வந்துதான் விட்டது...! என் ஆசைகளைப் போல எல்லாம் கருகிப் போய் விட்டன....உணவோடு சேர்த்து எனக்கு உயிரையும் ஊட்டிய இடம் இன்று மயானக் காடாய்....!

பூஜையறைக்கு பள்ளியறை என்றும் படுக்கையறைக்கு பூஜை அறை என்றும் நாம் பெயரிட்டு விளையாடியது என் நினைவுகளுக்குள் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. ஆமாம் இரண்டின் மூலம் முக்தி நோக்கிய பயணம் தானே செய்தோம்...!

வாசல், கொல்லை, தோட்டம், நம் குட்டி பிரபஞ்சமான மொட்டை மாடி, நிஜ பிரபஞ்சமாம வெற்று வானம் என்று எல்லாமே என்னை குத்திக் கிழிக்கும் நினைவுகளோடு மிரட்ட இன்று நீயில்லை...

காதல் என்ற வார்த்தையை திருமணம் என்ற வாழ்க்கை நியதியால் வென்றோம். திருமணம் காதலைத் தின்று ஏதேதோ புரிதலின்மைகளை மெதுவாய் நம்மில் கரைத்து கடைசியில் கோபமாய் மாறி நீயும் நானும் ஒரு ஒருவர் எரித்து விடுவது போல மோதிக் கொண்ட நமது கடைசி நேர காட்சிகளை நான் மறக்கவே விரும்புகிறேன்.

அடிக்கடி நமக்குள் சண்டையைக் கொண்டு வந்த காரணங்கள் வெற்று என்று கூறியிருக்கிறேன். நீ என்னை வார்த்தைகளால் குதறியிருக்கிறாய், பதிலுக்கு நானும் ஒரு தெரு நாயாய் சீறியிருக்கிறேன். காரணங்களை வகைப்படுத்திப் பார்க்க மனது இப்போதும் நடுங்குகிறது.

காதலை எப்போதும் மனித மனக் கோளாறுகள் வென்று விடுகின்றன. நமது தன்முனைப்பு என்னும் ஈகோ காதலாய் இருந்த போது விட்டுக் கொடுத்து அனுபவித்தது ஆனால் கணவன் மனைவி என்று ஆன பின்பு...உனக்கு ஏற்றார் போல நான் இருக்க வேண்டும் என்று நீயும், என்னுடைய கட்டளையை நீ ஏற்க வேண்டும் என்று நானும்

அதிகாரத்தையும் அடக்கு முறையையும் மாறி மாறி நாம் பிரயோகம் செய்ததில் காதலென்னும் குழந்தையும், காமம் என்ற கடவுளும் மரித்தே போனார்கள்....!

ஏகாந்த வானின்
பறவைகள் நாம்...!
யார் யாரை
கூண்டுக்குள் அடைக்க.....?

இதோ விவகாரத்து கிடைத்து ஒரு வாரம் ஆகி விட்டது. சட்டம் ஒரு வெள்ளைப் பேப்பரில் கட்டளையாய் நம்மைப் பிரித்துப் போட்டது....!

இனி...
உனக்கு நீ....!
எனக்கு நான்...!

நினைவுகளுக்குள் நீந்தி முடித்து விட்டேன் பெண்ணே...! உனக்காக நான் எழுப்பிய வீடென்னும் கட்டிடத்தையும் விற்று விட்டேன்....! எண்ணங்கள் என்னை முறுக்கியெடுக்க மீண்டும் உன்னோடு வாழ்ந்த வீட்டினை ஏக்கமாய் பார்த்து விட்டு காம்பவுண்டின் இரும்புக் கதவினை அடைக்கிறேன்....

மீண்டும் உன் முகம்......முகப்போர அறையினுள் இருந்து எட்டிப் பார்க்கிறது...!

மெல்ல என்னுள் சிரித்துக் கொண்டு.. அண்ணாந்து வானம் பார்க்கிறேன்...

அலையும் மேகங்கள்
கலையும் கனவுகள் போல
இருக்கும் இல்லாமைகள்...
என் வாழ்க்கையைப் போல...!

ஆமாம் கனவுகள் எல்லாம் கலைவதற்குதானே...! நான் கண்டதும் ஒரு அழகிய கனவுதான்...!

நான் நடந்து கொண்டிருந்தேன்!

எழுதியவர் : Dheva.S (15-Dec-12, 10:19 am)
பார்வை : 610

மேலே