தமிழ்நாடு அரசு விளம்பரத்துறையின் அறிவிப்பு

அன்பார்ந்த “குடிமகன்”களே,
தங்களுக்கு வாழ்வாங்கு வசதி செய்து தரும் தமிழ்நாடு அரசின் அனைத்து பெருமுயற்சிகளும் தாங்கள் அறிந்ததே!
தங்களின் பேராதரவால் இன்றைய நிலையில் தமிழ்நாடு அரசின் கருவூலம் நிரம்பி வழியும் இவ்வேளையில், சில கயமை படைத்த, கேடு எண்ணம் கொண்ட தமிழனின் எதிரிகள். உங்களின் நலனுக்கு எதிராக செயல்பட களத்தில் இறங்கி, உங்களின் இதயக்கனியாம் டாஸமாக் கடைகளுக்கு பூட்டு போடும் வெறுப்பான இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.
“குடிமகன்” களின் நலனுக்கு எதிரான இந்த செயலை தமிழ்நாடு அரசு வன்மையாக கண்டிப்பதோடு, இப்படி இடையூறு செய்பவர்கள், அரசாட்சி செய்யும் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் அவர்களை மன்னித்து விட்டு தங்களின் வழமையான செயலை தொடர்ந்து செய்யும்படி இந்த அரசு தங்கள் அனைவரையும் கருணையுடன் கேட்டுக் கொ(ல்)ள்கிறது.
இந்த கயவர்களின் இடைப்பட்ட இடையூறுகளுக்கு பரிகாரமாக, அனைத்து “குடிமகன்” களுக்கும் “குடி”யுரிமை அட்டை வழங்க ஏற்பாடு செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்ள இந்த அரசு கடமைப்பட்டு உள்ளது.
இந்த “குடி”யுரிமை அட்டை, குடிப்பழக்கத்தில் இடைவெளி யின்றி ஒழுங்கு முறையைக் கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இது சீரான குடிப்பழக்கத்தின் தரச்சான்றாக கருதப்படும் என்பதையும் இதன் மூலம் இந்த அரசு பெருமையுடன் தெரியப்படுத்திக் கொ(ல்)ள்கிறது.

இனி குடிப்பழக்கத்தால் விளைந்த / விளையும் நற்பயன்களை பட்டியலிடலாம்.
1. “குடிமகன்” களின் வெறுப்பேற்றும் தன்மையால், தமிழ் பெண்கள் சுயஉதவிக் குழுவில் அதிகமாய் இணைவதால், சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கை பெருகி, தமிழ்நாட்டின் வளம் பெருகுகிறது. இதனால் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வது கண்கூடு. பெண்ணின் பெருமை இதனால் உலகிற்கு பறைசாற்றப் படுகிறது.
2. குடிப்பழக்கத்தால் விதவைகள் அதிகமாகி, அதனால் விதவைத் திருமணம் ஊக்குவிக்கப் படுகிறது.
3. தகப்பன் சிறந்த “குடி” மகன் என்பதால், குழந்தைகள் தாயின் பெயரை தங்கள் பெயரின் முன் குறிப்பாக இடும் பழக்கத்திற்கு தயாராவதால், பெண்ணின் தனிச்சிறப்பு போற்றப் படுகிறது. இது சமூகப் புரட்சி அல்லவா?
4. பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் இந்த குடிப் பழக்கத்தை மாற்ற வழி செய்வது மடமையன்றோ?
5. பாடுபட்டு படித்து பட்டம் வாங்கி, மருத்துவம் பழகும் அன்பர்களுக்கு தங்களின் உடல் நிலையை சீர்திருத்த வாய்ப்புகள் கிடைக்கிறது அல்லவா? இதனால் தமிழ்நாட்டின் மருத்துவத் துறை தழைக்கிறதே!.
குடி கெடுக்கும் குடி, அது கெடுக்கும் குடல். இந்த அறிவிப்பு சட்டத்தின் கட்டாயம் என்பதால் அதை சட்டை செய்யாதீர்கள். இதை சட்டை செய்யும் எந்த சட்டையும் நீங்கள் அணிய வேண்டாம் என்று இந்த அரசு தங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொ(ல்)ள்கிறது.
எனவே வழக்கம்போல் தங்களின் பேராதரவால், தமிழ்நாடு அரசின் கருவூலத்தை நிரப்பும் கடமையை அயராது தொடரும்படி இந்த அரசு தங்களை கேட்டுக் கொ(ல்)ள்கிறது.

(குறிப்பு: தமிழ்நாடு அரசின் விளம்பரத்துறை மங்காத்தாவை நாடி, கருவூலம் வறட்சி அடைவதில் இருந்து காப்பாற்றும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டதால், அதற்கு உதவுவதாக வாக்குக் கொடுத்த மங்காத்தா அதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த அறிவுரையை பதிவேற்றியுள்ளாள். இதனால் மங்காத்தாவிற்கு “கருவூலம் காத்த காத்தாயீ” எனும் மகுடம் சூட்ட தமிழ்நாடு அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது)

எழுதியவர் : மங்காத்தா (17-Dec-12, 12:39 am)
பார்வை : 420

சிறந்த நகைச்சுவைகள்

மேலே