பேசும் கருவறை...
ஆணி வேர்களில் ஆணி அறையப்படுகிறது
முதிர் கன்னிகளை சுமந்த கருவறைகள்
இன்னும் சிலுவைகளை
இறக்கி வைக்கவில்லை
அழக்கூட கண்ணீரில்லை
அநாதையாய் பிறந்த
உயிர்களுக்கு...
மதச் சண்டைகள், இனச் சண்டைகளுக்கு நடுவே சிக்கி
பட்டினியால் இறந்து போகும் உயிர்களை சுமந்ததும்
ஒரு தாயின் கருவறைதான்...
இந்த உலகம் உனக்கு வேண்டாம் மகனே
என் கருவறை இருட்டிலேயே கண்ணுறங்கிக் கொள்
அங்கேயே மரித்துப் போ...
உனக்கென விதைக்கப் பட்ட ஒரு துளி விதையில் கூட
மத வெறியும், இன வெறியும்
கலந்திருக்கலாம்..
இல்லை
ஒரு முதிர் கன்னியாய் மூலையில் முடங்கிக் கிடக்கலாம்
இல்லை நீ ஓர் அநாதையாய் ஆக்கப்படலாம்
இல்லை
பட்டினியில் வாடியே நீ இறந்து போகலாம்
இங்கு தாய்ப்பால்கள் கூட நிச்சயமில்லாதவைதான்...
என் மகனே
என் கருவறை சொந்தமே...
நீ பறக்கும் முன்பே சிறகுகளை முறித்து விடுவார்கள்
நீ பிறக்கும் முன்பே ஆணிவேரை
அறுத்துவிடுவார்கள்
வேண்டாம் இவ்வுலகம்
என் கருவறையிலேயே கண்ணுறங்கிக் கொள்
இல்லை
என் கருவறையிலேயே மரித்துப் போ...