கற்பைத் தொலைக்காதீர்-கே.எஸ்.கலை

மென்மையின் உருவாய் பிறந்து
மேன்மையின் கருவாய் மிளிரும்
பெண்மையே கொஞ்சம் வாரீர் – இந்த
உண்மையைக் கொஞ்சம் கேளீர் !

வன்மையின் உச்சியில் நின்று
இன்மையைக் கொட்டித் தீர்க்கும்
கயமையைக் கொன்றொழித்திட – இந்த
உண்மையைக் கொஞ்சம் கேளீர் !
❉•══•❉•══•❉•══•❉
கற்பென்றுச் சொன்னால் - வெறும்
கன்னித் தசை மட்டும் அல்ல
கர நக நுனியிலும் உண்டு – அதைக்
கற்றுக் கொள்ளடிப் பெண்ணே !
❉•══•❉•══•❉•══•❉
பயில நீ பள்ளிச் சென்றால்
பள்ளியில் கல்வியைக் கவனி
பருவத்து மோகம் தாக்கும் – அதற்குப்
பதிலுக்குச் செல்லாதே கலவிப் பவனி !

வாலிபக் கூட்டம் நெருங்கும்
வனப்பாய் ஆசைகள் காட்டும்
வயதுக்கு வந்த நீயும் – உன்னை
வார்த்திட இடத்தினைக் கொடுக்காதே !

காதலில் இல்லை தப்பு – அதை
கணித்திட வேண்டும் அறிவு மூப்பு !
காதலன் வடிவில் கூடக் – கொடும்
காலனும் நெருங்கலாம் உன்னை !

காதலெனும் போர்வைப் போர்த்தி
களிப்பினில் உன்னை மயக்கி
காமுகனுன் கற்பினைத் தின்றிட
காரிகை நீயும் இசையாதே !

காரியம் முடிந்த பின்னர்
காணாமல் போனால் அவன்...
கற்பினை இழந்த நீயும்
கதறியே அழுதென்ன பயன் ?
❉•══•❉•══•❉•══•❉
வேலைக்குச் செல்லும் பெண்ணே - காம
வேட்கையைக் கூட்டும் வகையில் - ஆடை
வேஷம் நீ போட்டுச் சென்றால்
வேதனைத் தான் உனக்கு மிஞ்சும் !

தொப்புளும் மார்பும் காட்டி
தொடையையும் இடையையும் திறந்து
தொழிலுக்கு அணியும் ஆடை – அது
தெருவிலே போவோனுக்கு விருந்து !

பாதையில் செல்லும் போதே - ஆபாச
போதையில் தாக்கிச் சென்று
வாதையில் வீழ்ந்த பின்னே – நீ
பேதையாய் புலம்பி யாது பயன் ?
❉•══•❉•══•❉•══•❉
தூரத்தே நடக்கும் இரும்பை
துரத்தியே பிடிக்கும் காந்தம்
துணிவின்றி போனாலே தப்பு – நீ
துணியின்றி போவதும் முறையோ ?

தூண்டிலை நீயே போட்டு
துஷ்டனை மோகத்தில்வீழ்த்தி – கொடும்
துன்பத்தை விலைக்கு வாங்கி
துடித்து நீ கெடுவதேனோ?
❉•══•❉•══•❉•══•❉
விடுமுறை நாட்கள் வந்தால்
விடுதியில் ஒதுங்கும் பழக்கம்
விடலைப் பருவ மாந்தர்
விடிவழிக்கும் விடமாய் மாறும் !

விரசத்தை விஷமாய் குடித்து
விடிய விடிய ஆடும் ஆட்டம் – இரவு
விடுதியில் முடிந்துப் போகும் ! – கடைசில்
வீதியில் வாழ்க்கை என்றாகும் !

திணவிற்கு வெறிபிடித்த நாய்கள் -அதற்கு
திமிரோடு உணவளிக்கும் நீங்கள்...
திடமான கனவெல்லாம் முடமாக்கி
திருந்தாமல் வாழ்ந்தென்ன பயனுண்டு ?
❉•══•❉•══•❉•══•❉
பெற்றெடுத்த பெற்றோரே கொஞ்சம் வாரீர்
பெற்ற பிள்ளை வளர்பதற்கு நீரும் பயில்வீர்
கற்ற கல்வி மட்டும் கரைச் சேர்க்காது
கற்பைக் காத்திடப் பாடம் புகட்ட வேண்டும் !

கல்வியென்று சொல்லிப் போகும் பிள்ளை
கற்கச் சென்று செய்வதென்ன தேடிப் பாரும் !
கட்டிளம் வயதுடையாள் அவளும் – தன்
கணவனுக்கு ஒத்திகை பார்க்கக் கூடும் !

உடுத்திடும் ஆடை கவனி – அவள்
உரைத்திடும் வார்த்தையும் கவனி !
உமக்கவள் கிடைத்த பரிசன்றோ- நல்
உறவோடு நெருங்கிடு தினம் நீ !

நாகரீகம் என்று சொல்லி - நீ
நரகத்தை அவளுக்குக் காட்டாதே
நடந்தேறும் இழிச் செயல்கள் பெரும்பாலும்
நகரத்தின் கலாச்சாரப் பிழைதானே ?
❉•══•❉•══•❉•══•❉
யாருக்கும் தெரியாமல் அழிந்தாலும்
ஊருக்கே தெரிந்தது அழிந்தாலும்
பாருக்கு வீழ்ந்திட்ட நல் வித்தொன்றின்
வேருக்கு ஊற்றிய விஷமாகும் !

காமுகன் ஆடும் வேட்டை – அதை
கண்டித்து தண்டித்து ஏது பயன் ?
களங்கத்தை தடுக்க அணைக்கட்டு – வரும்
கஷ்டத்தை தடுக்க முடிவெடு !

இன்னாமை நிறைந்த பூமி-இது
இழி பிறப்போர் மலிந்த பூமி
இதை உணர்ந்து வாழ்ந்தாலே
இடர் கொஞ்சம் தவிர்த்திடலாம் !

கண்ணியமாய் வாழ்ந்திங்கு
கற்பை நீ காத்துக் கொள் !
கருத்தில் நீ கொள்ளாது - உன்
கற்பைத் தொலைக்காதே ..!
❉•══•❉•══•❉•══•❉

எழுதியவர் : கே.எஸ்.கலை (31-Dec-12, 10:48 am)
பார்வை : 1338

மேலே