எட்டாக்கனி என் வெற்றி ..!

குளிரில் உடல் சற்று நடுங்க
ஒரு குவளையில் சூடாக தேநீர்
கொடுத்துவிட்டுப் போகிறான் அந்தப்பையன்…

வாங்கி மேஜையில் வைத்துவிட்டு
வேலையில் தொலைந்து போனதால்
தேநீரும் குளிர்ந்து போனது!

நினைவு வந்தவனாய்
எடுத்துக் குடிக்கிறேன் தேநீரின் குளுமை
உடம்பெல்லாம் பரவியது..

நாவில் குளிர்ந்து நனையும்
இதே தேநீர்தான்,
சற்று முன்பு கொதிக்க கொதிக்க
எனக்காய் கொடுக்கப்பட்டது!!

வாழ்க்கையின் நிறைய விசயங்களும்
இப்படித் தான்,
காலத்தின் நகர்தலில் மாறிப் போகின்றன..
எல்லாம் கடந்துவிடுகிறது!!

இருப்பினும் அதன் சுவைகள் மாறுவதில்லை!!

எனக்குள் தூங்கிய அவன் திடிரென எழுந்துவிட்டான்
நிறைந்த கேள்விகளை ஆச்சரியக் குறிகளுடன்
கேட்க தொடங்கி, கசப்பான உண்மைகள் சிலதையும்
சொல்லிக்கொண்டிருக்கிறான்...

“பிறர் நலம் கருதலில்
தன் லட்சியம்கூட
மறக்கவோ,
மறுக்கவோபடுகிறது” என்றான்..


நான் மௌனம்….


“பிறருக்கு உதவாதது குற்றமன்று...
எனினும்,
சிலருக்கு உதவுதலும் குற்றமாகிறது” என்றான்...!

மறுபடியும் நான் மௌனம் காக்க,

“எத்தனை துன்பம் வரினும்
இன்பம் வரினும் -
எதையும் வாழ்வின் ஒரு கட்டம் என்றே எண்ணி
வாழ்க்கையை வாழ்" என்றான் அவன்..

“இன்பம் வருகையில் சரி...
துன்பம் வருகையில் எப்படி???” என்றேன் நான்

“இன்பம் வருகையில் சிரிப்பை குறைத்துக்கொள்
துன்பம் வருகையில் கண்ணீரும் குறையும்” என்றான் அவன்

சரியென்று சொல்லிவிட்டு -
அவ்வப்பொழுது கண்களை துடைத்துக் கொள்கிறேன் நான்!!!!!!!!!!

எனக்கான சிரிப்பு, வெகுதூரத்தில் தெரிந்தது…

வெற்றிக்கான நிறைய இடங்கள்
வெற்றிடங்களாகவே கிடக்கின்றன இன்னும்…

“நிரப்பும் வாய்ப்பு யார் கையிலும் இருக்கலாம்,
நானாகவும், ஏன் அவர்களாகவும் கூட இருக்கலாம்" என்றான்
எனக்குள்ளிருக்கும் அவன்

"ஒவ்வொருவருக்கான வெற்றியும்
அவருக்காக காத்தே இருக்கின்றன,
பிறப்பவர் அத்தனை பேரும் ஒவ்வொன்றில் ஜெயிப்பவரே"
என்றேன் நான் ...

"அப்படி என்றால் நீ…..??!!” என்றான் அவன்,
எனக்கு அவள் மட்டுமே நினைவிற்கு வருகிறாள்...

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (31-Dec-12, 6:17 pm)
பார்வை : 177

மேலே