மாற்றங்கள்
'காலம்' நம் வாழ்கையின் ஓர் மிகப் பெரிய 'பாலம்'. ஆம். அதைக்கடக்கும்போது அது நம் வாழ்க்கையில் தோற்றுவிக்கும் மாற்றங்களை இரண்டு உண்மைகளை நமக்கு தெளிவாக உணர்த்தும். ஒன்று: நமக்கு வயதாகிக்கொண்டு வருகிறது. இரண்டு: மாற்றங்களே ஒரு சமுதாயத்தின் நிரந்தரம்.
நான் பார்த்து, கவனித்த இந்த விஷயங்கள் உங்கள் பார்வையில் இருந்தும் தப்பி இருக்காது. இருந்தாலும், அவற்றை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காரணத்தை கடைசியில் சொல்கிறேன்.
பெண்கள் தலை முடியை விரித்து போட்டுக்கொண்டு இருப்பது தவறு என்ற நிலை போய் இன்று பின்னல் போடும் மகளிரை பார்ப்பதே அரிதாக உள்ளது. பெண்ணின் முடி கத்தரிக்கப்படக்கூடாது என்ற மரபு மாறி நீள கூந்தல் உள்ளவர்கள் தங்கள் சௌகர்யத்திற்கு ஏற்ப ஆண்களைபோல் திருத்திகொள்வது முதல், அரை முதுகில் இருந்து இடை வரை விரித்து போட்டுக்கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. ஆண்களுக்கான சலூன்களை போல் அவர்களுக்கும் முடி அலங்காரம் செய்யும் நிலையங்கள் பல உருவாகிவிட்டன.
ஆண்கள் அந்த காலத்து வழக்கம் போல் குடுமி வைத்திருந்தால் அது பழமை. ஆனால், இன்று பலர் தங்கள் தலையை (இதில் பிரபலங்களும் அடக்கம்) பரட்டையாகவோ, நீளமாகவோ, குச்சிகுச்சியாகவோ, சரியாக வாராமலோ வைத்துக்கொள்கின்றனர். சிலர் அதை பின்னால் ரப்பர் பேண்ட் போட்டு முடிந்து கொள்வதையும் பார்க்கலாம். இளைஞர்கள் தங்கள் தலை முடியை எந்த அளவு கலைத்து, வண்ணம் பூசி, அலங்கோலமாக வைத்து கொள்கின்றனரோ அந்த அளவு அவர்களை 'மாடர்ன்' எனலாம்.
தினசரி முகத்தை திருத்துவது என்பது இன்றைய இளைஞர்களிடையே காண முடியாத ஒன்று. அரைகுறை தாடி மீசை, மீசை அற்ற தாடி, நறுக்கு தாடி, கோணல் மாணல் தாடி இவைகளே இன்று முக அழகு.
பதினெட்டு வயதான ஆண்கள் கால்களில் முடி தெரிய செல்லக்கூடாது என்ற காலம் மலை ஏறி விட்டது. இன்று கிழவர் முதல் குமரன் வரை முக்கால், கால், அல்லது அரைக்கால் ஷார்ட்ஸ் அணிந்து எல்லா இடங்களுக்கும் செல்வது தான் நாகரிகம்.
பேச்சு வழக்கிலும் ஏக மாற்றங்கள். பெண் குழந்தைகளையும், பெண்களையும் 'என்னடா' என்று அழைப்பது மிகுந்த அன்பை வெளிப்படுத்தும் பாணி. ஆனால், 'என்னடி' என்றால் அவமரியாதை. நல்லவேளை, ஆண்கள் ஒருவரை மற்றவர் 'டி' போட்டு பேசுவதில்லை. ஆனால், 'மச்சான்', 'மாமு' என்ற புதிய உறவு முறைகளில் பேசுவது சகஜம். இவை, பிரபல விளம்பரகளில் கூட தாரளமாக உபயோகப்படுத்த படுகிறது.
இன்னொரு அதிசயம்; சின்ன குழந்தைகளை 'என்ன பண்றீங்க?' 'என்ன சொல்லறீங்க?' என்று பன்மையில் பேசுவது இன்றைய நடைமுறை. ஆனால், வளர்ந்து பெரியவனான பின் குறிப்பாக பெண்கள் அவர்கள் நண்பர்கள், மற்றும் புருஷனாக இருந்தாலும் கூட 'என்னடா' என்று பேசலாம். அது பாசம் அல்லது செல்லம். ஆனால், பெண்களை, மனைவி உள்பட 'டி' என்று பேசினால் அது அசிங்கம். பெண்ணுரிமை அங்கு பறிக்கப்பட்டு விடுகிறது.
உடையில், ஆண் பெண் இருபாலரின் ‘பான்டு’கள் இடைக்கு கீழே இரண்டு அங்குலம் இறங்கி விட்டது. அதே போல், மேல் சட்டை இரண்டு அங்குலம் மேலே ஏறி சென்று விட்டது. ஆண்களின் உள்ளாடை பேண்டுக்கு வெளியே தெரிந்தால் தான் பேஷன்.
தேவையோ, தேவை இல்லையோ ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதம் இல்லாமல் எல்லோர் முதுகிலும் 'ட்ரெக்கிங்' செல்லும் வீரர்கள் போல் ஓர் மூட்டை (rucksack). அதில் என்னதான் தூக்கி கொண்டு போவார்களோ தெரியவில்லை; அந்தக்காலத்தில் கல்லுரி மாணவ மாணவியர் ஸ்டைலாக ஒரு புத்தகம் அல்லது ஒரு நோட்புக் என்பது இன்று ஒரு மூட்டையாகவே மாறி விட்டது.
'ஷிட்' என்ற ஆங்கில சொல்லும், ஏனைய நான்கு சொல் ஆங்கில கெட்ட வார்த்தைகளும் சரளமாக எல்லோராலும் பேச்சில் உபயோகப்படுத்த படுகிறது. இதிலும் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை.
ஓராண்டுக்கு முன் ஒரு பிரபல வாரப்பத்திரிகையில் இன்றைய இளைய தலை முறை காதல் பற்றிய தொடர் ஒன்று பல சிறுகதைகளாக வெளி வந்தது. அதை படித்த போது அதில் வந்த பல சொல் வழக்குகள், அதன் அர்த்தங்கள் எனக்கு விளங்கவில்லை. அவைகள், நம் தமிழ் அகராதிகளில் சேர்க்கப்பட வேண்டிய சொற்கள்.
இவைகளை நான் சரி, அல்லது தவறு என்று மதிப்பீடு செய்ய எழுதவில்லை. காலம் எப்படி நடை, உடை, பேச்சு, வழக்கம் என்று பல வகைகளில் நாகரிகத்தை, அநாகரிகமாகவும், அநாகரீகமாக கருத பட்டவற்றை நாகரிகமாகவும் மாற்றி விடுகிறது என்பதை வியப்புடன் பகிர்ந்து கொள்ளவே.