பெண்களே எப்போதும் பெப்பர் ஸ்ப்ரே வெச்சுக்கோங்க...

இந்த உலகில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பானது தேவைப்படுகிறது. அதிலும் ஏதேனும் பிரச்சனை என்றால் மற்றவர்களிடம் உதவியை கேட்பதற்கு கூட முடியாத நிலையில் உள்ளது. எனவே பெண்கள் எப்போதும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் சில பயிற்சிகளை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த கட்டாயம் ஏற்படுவதற்கு டெல்லியில் ஏற்பட்ட பாலியல் பலாத்காரம் ஒரு உதாரணம்.

இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் பெண்கள் வெளியே தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்வதில் பயப்படுகின்றனர். ஆகவே அந்த அச்சத்தைப் போக்குவதற்கு ஒரு வழி என்னவென்றால், அது தற்காப்பு கலை அல்லது சில பாதுகாப்பு கருவிகள் தான். இந்த காலத்தில் உள்ள பெண்கள் எவ்வளவு தான் தைரியமானவர்களாக இருந்தாலும், பிரச்சனை ஏற்பட்டால், அந்த நேரத்தில் தப்பிப்பது கடினமாகவே உள்ளது. எனவே அத்தகைய பிரச்சனை வந்தால், அப்போது பெப்பர் ஸ்ப்ரே எனப்படும் மிளகுத்தூள் தூவியை பயன்படுத்துவது மிகச் சிறந்த வழியாக இருக்கும்.

பெப்பர் ஸ்ப்ரே என்றால் என்ன?

பெப்பர் ஸ்ப்ரே என்று சொல்லும் போதே, அது என்னவாக இருக்கும் என்று நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிகிறது. அதில் என்ன மிளகுத்தூள் தான் முக்கியப் பொருள். சாதாரணமாக மிளகுத்தூள் மிகுந்த காரத்துடன் இருக்கும். ஏனெனில் இதில் காப்சிசைன் என்னும் பொருள் இருப்பதால், அவற்றை பயன்படுத்தும் போது, தாக்க வருபவர்களால் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாதவாறு ஆகிவிடும். சொல்லப்போனால், அதை கண்களுக்கு நேராக பயன்படுத்தும் போது, சிறிது நேரம் பார்வையே போய்விடும் நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் எரிச்சலானது நரகத்தை விட மிகவும் கொடுமையானதாக இருக்கும். வேண்டுமெனில் இதில் மிளகிற்கு பதிலாக மிளகாய் தூளையும் பயன்படுத்தலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை...

* பொதுவாக இந்த பெப்பர் ஸ்ப்ரேவை எப்போதுமே தங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக எங்கு சென்றாலும், கூடவே அந்த பையையும் கொண்டு செல்ல வேண்டும். தேடும் வகையில் அதனை வைத்துவிட வேண்டாம்.

* தன்னை தாக்க வரும் போது, அவர்கள் முகத்திற்கு முன்பு அந்த ஸ்ப்ரேவை அடிக்க வேண்டும். அவ்வாறு அடிக்க போகும் போது, அது அவர்களுக்கு தெரியாதவாறு எடுத்து தெளிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் உஷாராகி, பின் அந்த பெப்பர் ஸ்ப்ரே இருப்பதும் வீணாகிவிடும்.

* அருகில் வந்த பின்னர் அதனை எடுத்து தெளிக்க வேண்டும். அதை விட்டு, அவர்கள் சற்று தொலைவில் இருக்கும் போது எடுத்துவிட வேண்டாம். பின்னர் அதை அவர்கள் வாங்கி தூக்கி போட்டுவிடுவர்.

* ஸ்ப்ரே செய்யும் போது ஒரு முறை அடித்தாலே போதுமானது. அது அவர்களுக்கு குறைந்தது 3-4 நிமிடம் கண்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் இந்த நேரத்தில் மற்றவர்களை அழைத்து உதவி கேட்க முடியும்.

* எப்போதும் பெப்பர் ஸ்ப்ரே பயன்படுத்தும் போது, அதனை எதிரிகளின் கண்களை தாக்கும் வகையில் குறி வைத்து தெளிக்க வேண்டும். மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, பெப்பர் ஸ்ப்ரேவை பயன்படுத்தினால், ஆபத்தை எளிதில் தடுக்க முடியும்

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (5-Jan-13, 7:56 pm)
பார்வை : 176

மேலே