சோமுவின் திருக்குற்றாலம் ------------------------------------------- வானை அளந்துநின்ற மலைகளுண் டு...
சோமுவின் திருக்குற்றாலம்
-------------------------------------------
வானை அளந்துநின்ற மலைகளுண் டு -- நல்ல
வாசமொடு தென் றல்உலா வருவ துண் டு
தேனைச் சொரிந்திடும்பூஞ் சோலைகளுண் டு --வாகாய்த்
தெள்ளியநீர் துள்ளிவரும் ஓடைகளுண் டு
தெள்ளத் தெளிந்தவண்ணச் செக்கருமுண் டு--வானில்
தேடரிய சித்திரங்கள் தீட்டலுமுண் டு
உள்ளம் தளிர்க்கவரும் முகில்களுமுண் டு -- பன்னீர்
தெள்ளித் தெளித்துவரும் பாங்குமங்குண் டு
நின்று குளித்திடவெள் அருவியுண்டு -- வந்தோர்
நெஞ்சங் குளிருமட்டும் நிற்பதுமுண் டு
சென்று குளிப்பதற்க்குச் செண்பகாடரு வி --உயர்
தேனருவி ஐந்தருவி தொலைவி லுண் டு
கோலக் குரங்கினங்கள் கோடியங்குண் டு --தாயின்
கும்பியிலே தொங்கிவரும் குட்டிகளுண் டு
ஆலம் விழுதினூசல் ஆடுவதுண் டு -- மந்தி
அத்தனையும் அந்தரடித் தொடுவதுண் டு
கோடுமதி சூடுபிரான் கோவிலுமுண் டு --கலைக்
கோலமிகு சிற்பஎழில் தானுமங்குண் டு
ஆடுமயில் பாடுகுயில் அனந்தமுண் டு --மன
அமைதியும் ஆனந்தமும் விளைவதுண் டு
பன்னும் இலக்கியங்கள் பயில்வதுண் டு --பல
பண்டிதரும் அங்குவந்து கூடுவதுண் டு
கன்னித் தமிழுமுண்டு கம்பனுமுண் டே --இன்பக்
களிமிகு வாழ்விதுமோர் காவியமன் றோ !