கும்மிப்பாடல் கும்மியடிப் பெண்ணே கும்மியடி! - நல்லா குலுங்கி...
கும்மிப்பாடல்
கும்மியடிப் பெண்ணே கும்மியடி! - நல்லா
குலுங்கி சிரிச்சு கும்மியடி!
கும்மியடிப் பெண்ணே கும்மியடி! - நாட்டு
நடப்பச் சொல்லி கும்மியடி!
தண்ணீரை முழுசா உறிஞ்சிப்புட்டோம் - பச்சை
மரங்களை எல்லாம் வெட்டிப்புட்டோம்...
காத்துல அசுத்தத்தை கலந்துவிட்டோம் - நம்ம
பேச்சுல மட்டும்தான் முன்னேறிட்டோம்...
சோறு போடுற விவசாயத்தை விட்டு
விளை நிலங்களை வீணடித்தோம்...
ஆறு ஓடுற வழியெல்லாம் குறுக்கி
வீட்டக் கட்டி வாழ்ந்திருக்கோம்...
தப்பான ஆட்களைத் தேர்ந்தெடுத்து - நாம
அரசாங்க பதவி கொடுத்திருக்கோம்...
ஓட்டு போடற தேர்தல் நேரத்தில்
பழைய கதைகளை மறந்திருக்கோம்...
விண்ணைத் தாண்டி விண்வெளிய - நம்ம
விஞ்ஞானம் அளந்து வச்சிருக்கு...
தன்னைத் தானே சோதித்துப் பார்த்து
நானிலம் உயர வழிவகுப்போம்...
கும்மியடிப் பெண்ணே கும்மியடி - பல
மாற்றங்கள் வருதுன்னு கும்மியடி
பலமாகக் கைகளைத் தட்டுக்கடி - நம்ம
பூலோகம் எல்லாம் அதிரும்படி