இளைஞர் சமுதாயம் போதைக்கு அடிமையாகும் ஆபத்து! கிழக்கு மாகாணத்தில்...
இளைஞர் சமுதாயம் போதைக்கு அடிமையாகும் ஆபத்து!
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் 'மாவா' எனப்படும் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும், மாணவர்கள் படிப்படியாக போதைக்கு அடிமையாகி வருவதாகவும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் அதிர்ச்சி தரும் தகவலொன்றை வெளியிட்டிருக்கின்றார்.
இதனை நாம் சாதாரண விடயமாகப் பார்க்க முடியாது. போதைப் பொருள் பாவனை நாடளாவிய மட்டத்தில் மோசமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிப்பதற்கான கடும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்ற போதிலும், நாளாந்தம் போதைப்பொருள் பாவனை குறித்த செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன. தென்னிலங்கையைப் போன்று கிழக்கிலும் போதைப் பொருள் பாவனை கூடிக் கொண்டே போகின்றது. அதுவும் இளம் பருவத்தினரே அதிகமாக போதைக்கு அடிமையாக வருகின்றனர்.
இதுஒருபுறமிருக்க, கிழக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பாவனை அதிகரித்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இளைஞர்களில் 30 சதவீதத்துக்கு அதிகமானோர் போதைக்கு அடிமையாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கிழக்கின் கரையோரப் பகுதிகளுக்கு கேரளா கஞ்சா கடத்தப்பட்டு வருவது நாளாந்தம் கண்டுபிடிக்கப்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலத்தில் கரையோரப் பகுதிகளில் பெருந்தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவை தென்னிந்தியாவின் கேரளப் பகுதியிலிருந்து கடத்தப்பட்டவை என அறியவந்துள்ளது.
கிழக்கில் மறைமுகமாக இடம்பெற்று வந்த போதைப் பொருள் பாவனை இன்று வெளிப்படையாகவே இடம்பெற்றுவருவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மாவா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் சில பாடசாலை மாணவிகளும் 'மாவா' என்பதில் சிக்கியுள்ளமையாகும்.
வடக்கிலும் போதைவஸ்துப் பாவனை அதிகரித்து வருகின்றது. வடபுலத்தில் போதைப் பொருட்களை தாராளமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதொரு நிலைமை உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. போதைப் பொருள் பாவனையால் இளம் சந்ததியினரின் எதிர்காலம் பாழாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
தென்னிலங்கையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசமெங்கும் போதைப் பொருள் பாவனை காரணமாக சமூகம் பேரழிவைச் சந்திக்கும் நிலையே காணப்படுகிறது. ஹெரோயின், கொக்கேன் போன்ற சர்வதேச போதைவஸ்துகள் தாராளமாக புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர் தமக்கு அவற்றை வாங்குவதற்கு பணம் கிட்டாத போது திருட்டுச் சம்பவங்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்ளில் அதற்காக கொலை வெறியர்களாக மாறும் நிலை கூட ஏற்படுகின்றது.
கொழும்பு நகரில் அதிகமான போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த வியாபாரிகள் யாரென்பதும் பொலிஸாருக்கு நன்கு தெரிந்திருக்கும் நிலையிலும் அவ்வாறானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொலிஸார் தவறி வருவதாகவும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியில் அதிகமான போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது பகிரங்கமானதொரு விடயமாகும். ஆனால் பொலிஸார் அவர்களை பாதுகாக்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தலைநகரிலும் கிராமப் புறங்களிலும் முக்கியமாக பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கு அண்மித்த இடங்களில் மறைமுகமான விதத்தில் மாணவர்களுக்கு போதை வஸ்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் கொழும்பில் பிரசித்தி பெற்ற இரண்டு பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரை விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்ட போதும் அதில் சம்பந்தப்பட்டோர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பிக் கொண்டனர். இவ்வாறு அவர்களை தப்பவிடுவது தர்மமாகுமா? கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது அமைச்சர் ரவி கருணாநாயக்க பொலிஸாருக்கு கடுமையான பணிப்புரை விடுத்து போதை பொருளுடன் தொடர்புபட்டவர்கள் யாராக இருப்பினும் தகுதி, தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அதில் எவராவது தலையீடு செய்ய வந்தால் தன் கவனத்துக்கு கொண்டு வருமாறும் பணித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. புகைத்தல் பாவனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது போன்று போதைப் பொருள் பாவனையையும், தடுக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
இருக்கும் சட்டத்தை கடுமையாக்குவதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. எமது இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை பாழாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை நாம் துரோகிகளாகவே பார்க்கின்றோம். பள்ளி மாணவரின் வாழ்க்கையோடு விளையாடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படக் கூடாது. எமது நாளைய தலைவர்கள் தேசத்தை நேரான பாதையில் வழிநடத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
நாட்டின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் நகரம், கிராமம், வீதிக்கு வீதியென சகல இடங்களிலும் போல் இன்று போதைப் பொருட்கள் கிடைக்கக் கூடிய நிலையையே காண முடிகிறது. நாம் தான் அதனை கண்டும் காணாதவர்கள் போல் இருக்கின்றோம். அதன் பின்விளைவு எமது சந்ததியினரின் எதிர்காலம் சீர்குலைத்து போவதேயாகும்.
இதற்கு இடமளிக்கப்படக் கூடாது. பொலிஸார், பொது மக்கள் தொடர்பு செயற்பட்டுத் திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாயச் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தவறினால் எமது தேசத்தினதும், சமுதாயத்தினதும் எதிர்காலம் பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவே அமைந்து விடும். எனவே சிந்திப்போம் செயற்படுவோம் இளம் சந்ததியை பாதுகாப்போம்.