எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவு சந்தை புனித ரமழானை அடைந்து கடந்த சில...

இரவு சந்தை

புனித ரமழானை அடைந்து கடந்த சில நாட்களாக சிறுவர்கள் முதல் பெண்கள், வயோதிபர்கள் என அனைவரும் நோன்பினை நோற்றவண்ணம் கடைசிப் பகுதியை அண்மித்தாயிற்று.

தராவிஹ் தொழுகை, கியாமுல் லைல், தஸ்பீஹ் தொழுகை, விதர் தொழுகை, தஹஜ்ஜத் என பள்ளிகளில் இரவு நேர வணக்க வழிப்பாடு களைக் கட்டுகின்றது. மக்கள் அனைவரும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் தங்களது கருமங்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருகின்றனர். முகங்கள் எல்லாம் பிரகாசமாக தெரிகின்றது. ஆம், இன்னும் ஓரிரு நாட்களில் பெருநாள் வரவிருக்கின்றது.

வீதிகள் எங்குப் பார்த்தாலும் சனத்திரளாகவே காணப்படுகின்றது. ஓட்டமும் நடையுமாக ஆண்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, பெண்கள் மறுப்புறம் பெருநாள் சிற்றூண்டிகளில் தமது திறமைகளை வெளிகாட்டிய வண்ணம், ஒரு சிலர் ஆடைகளை தைப்பதிலும் மற்றும் சிலர் ஆடைகள், இதர பொருட்கள் கொள்வனவிலும் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதோ பெருநாள் அண்மிக்க, கடைத்தெருக்கள் அங்கே ஒன்று இங்கே ஒன்றுமாய் காளான்களைப் போல முளைக்கத் தொடங்கிவிட்டன. அது சந்தை பகுதிக்கென ஒதுக்கப்பட்ட இடங்களை எல்லாம் தாண்டி சிறு சிறு கடைகள் என சிங்காரமாய் ஜொலிக்கின்றன.

பெருநாளைக்காக வேண்டி ஒன்று ஒன்றாக பார்த்து பார்த்து தமது தேவைகளை நிறைவேற்றுகின்றோம். இருந்தபோதும் பெருநாள் இரவு வரை தேவைகள் நிறைவு பெற்றதாக இருக்கவில்லை. அதனால் தான் இவ் இரவு நேர சந்தை அத்தேவைகளை நிறைவேற்ற காத்துக்கொண்டிருகின்றது.

பாதை நெடுகிலும் அடுக்கடுக்காய், சின்ன சின்னதாய் கடைத்தெருக்கள். ஆடைகளிருந்து பாதணிகள், வெடிப்பொருட்கள், பழங்கள், மரக்கறிகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். வண்ண வண்ண அலங்காரங்களால், மின் விளக்குகளால் ஜொலித்த வண்ணம் மக்களை வரவேற்கின்றன. ஆண்கள், பெண்கள் அனைவரும் இரவு நேர சந்தையில் சங்கமிக்கின்றனர்.

குறைவு – விலை – குறைவு, நான்கு எடுத்தால் ஒன்று இலவசம் என கூவி கூவி வியாபாரம் நடக்கின்றது. விடிந்தால் பெருநாள் என்ற நிலையில் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க வியாபாரம் சூடுப்பிடிக்கத் தொடங்குகின்றது. இன்றைய நாகரிக வளர்ச்சியின், மற்றும் வேக வேகமாக சுழலும் நேரத்தை கருத்திற்கொண்டு இப்பொழுது உணவுப்பொருட்களும் கூடவே காட்சிப் படுத்தப்படுகின்றன. மறுபுறம் வானவேடிக்கை வானத்தை அலங்கரிக்க இராப்பொழுது ரம்மியமாக காட்சியளிக்கின்றது. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் இரவு நேர சந்தையில் தமது சிறு நிலையங்களுடன்.

இரவு நேர சந்தை அது நடு நிசியையும் தாண்டி மூன்று மணி, நான்கு மணி என செல்கின்றது. அது சில போது விடியும் வரையும் செல்வதுண்டு. என்னதான் தேவைகள் இருந்தாலும் அவைகள் முடிவுக்கு வருவதில்லை. அது நீண்டுக் கொண்டே போகும். அது மனித இயல்வுதானே. தேவைகள் நிறைவுக்கு விருப்பங்களும் ஒரு காரணம். ஆனால் விருப்பங்கள் அரிதுஅரிதாக, புதிது புதிதாக உருவாகுவதன் காரணமாக தேவைகள் நிறைவுக்கு வருவதில்லை. குடும்பம் குடும்பமாக , வாலிபர் குழுக்களாக சென்று தமது இன்னோரன்ன தேவைகளை நிறைவு செய்யும் போது ஒரு விதமான சந்தோஷத்தை உணரக் கூடியதாக உள்ளது. எது எப்படியோ பெருநாளைக்கு முந்திய நாள் இரவு நேர சந்தை மனித தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்யும் குதுகலமான ஓர் ஏற்பாடுதான்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 30-Nov-17, 10:57 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே