எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம் கல்லால மரத்தின் அடியில், யோக...

தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்

கல்லால மரத்தின் அடியில், யோக ஆசனத்தில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசிக்கும் முறையில் வீற்றிருப்பவரே தட்சிணாமூர்த்தி. இவர் ஒரு காலில் முயலகனை மிதித்தபடியும், மற்றொரு காலை வீராசனமாக வைத்தபடியும் இருப்பார். நான்கு கரங்களில் வலப்பக்க ஒரு கை சின் முத்திரை தாங்கியும், ஒரு கை ருத்ராட்ச மணிவடம் தாங்கியும் இருக்கும், இடபக்கம் உள்ள ஒரு கையில் அமுத கலசமும், ஒரு கையில் வேதமும் இருக்கும். இவரை தென்முகக் கடவுள் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானின் 64 வடிவங்களில், குரு வடிவாக திகழ்பவர் தட்சிணாமூர்த்தி.

இவருக்கு யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி என்ற பெயர்களும் உண்டு. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோருக்கு யோக முறையை காட்டியதால், யோக தட்சிணாமூர்த்தி என்றும், தும்புரு, நாரதர் ஆகியோருக்கு வீணையின் இலக்கணத்தை உணர்த்தியதால், வீணா தட்சிணாமூர்த்தி என்றும் பெயர் பெற்றார்.

இவர் கையில் காட்டும் சின் முத்திரை, ஞானத்தைக் குறிக்கிறது. சின் முத்திரைப்படி சுட்டுவிரல், பெருவிரலின் அடியோடு சேர்ந்திருக்கும். மற்ற மூன்று விரல்களும் ஒதுங்கிய நிலையில் இருக்கும். பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும் குறிக்கிறது. மற்ற மூன்று விரல்களில் நடுவிரல் ஆணவத்தையும், அணிவிரல் மலத்தையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். ஆணவம், மலம், மாயை ஆகியவற்றை கடந்தால், ஆன்மா இறைவனோடு சேரலாம் என்பதே இந்தத் தத்துவத்தின் விளக்கமாகும்.

தினமும் தட்சிணாமூர்த்தியை துதிபாடல்களால் துதித்து, அர்ச்சனை செய்து வழிபடும்போது, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்

‘ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே

த்யாநஸ்தாய தீமஹி

தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்’

தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை அறிவோம். தியானத்தில் இருக்கும் அவரை தியானம் செய்வோம். குருவாகிய அவர், நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் ஞானம் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். பயம் நீங்கும். வித்தைகளில் மேன்மை அடையலாம்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 5-Jan-18, 4:45 pm

மேலே