உச்ச கட்டத்தை நெருங்குகிறது தேர்தல்: 8ம் கட்ட ஓட்டுப்பதிவு...
உச்ச கட்டத்தை நெருங்குகிறது தேர்தல்: 8ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது
புதுடில்லி : லோக்சபா தேர்தல் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில் இன்று (மே 7) 7 மாநிலங்களில் உள்ள 64 லோக்சபா தொகுதிகளுக்காக ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரிக்கப்பட்ட ஆந்திராவில் 25 லோக்சபா தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவும், சீமந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவும் நடைபெற்று வருகிறது.
8ம் கட்ட ஓட்டுப்பதிவு : மொத்தம் 9 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த லோக்சபா தேர்தலில் ஏற்கனவே 7 கட்டங்களுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் இன்று 8ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், உத்திர பிரதேசம், பீகார், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 1,07,430 ஓட்டுச்சாவடிகளில் 9,55,22,471 வாக்காளர்கள் ஓட்டளித்து வருகின்றனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஐபி வேட்பாளர்கள் : இன்றைய தேர்தலில் மொத்தம் 897 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், அமைச்சர் பல்லம்ராஜூ,பா.ஜ.,வின் வருண், சாந்தா குமார், ஸ்மிருதி இராணி, புரந்தேஸ்வரி, ஆம் ஆத்மியின் குமார் விஸ்வாஸ், மேஜர் ஜெனரல் பி.சி.கந்தூர், ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி, லோக்ஜன சக்தியின் ராம்விலாஸ் பஸ்வான், ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் விஜயலட்சுமி, திரிணாமுல் காங்கிரசின் மூன்மூன் சென் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். சீமந்திரா சட்டசபை தேர்தலில் ஓய்.எஸ்.காங்கிரஸ் சார்பில் ஜகன்மோகன் ரெட்டியும், தெலுங்குதேசம் கட்சி சார்பில் சந்திரபாபு நாயுடுவும் போட்டியிடுகின்றனர்.
ஹாட்ரிக் அடிப்பாரா ராகுல்?: உத்திர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ஏற்கனவே தொடர்ந்து 2 முறை எம்.பி.,யாக இருந்து வரும் ராகுல், தற்போது 3வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ், பா.ஜ., ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ராகுலை எதிர்த்து பா.ஜ., சார்பில் ஸ்மிருதி இராணியும், ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாசும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 34 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் 3வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் எம்.பி., ஆக வேண்டும் என ராகுல் கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக ராகுல் தனது சகோதரி பிரியங்கா உள்ளிட்ட குடும்பத்தாருடன் அமேதி தொகுதியிலேயே தங்கி பிரசாரம் செய்து வந்தார்.
ஓட்டளித்த விஐபி.,க்கள் : சீமந்திராவின் கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஓட்டளித்தார். அமேதியில் ஓட்டுச்சாவடிகளின் நிலவரம் குறித்து பார்வையிட வந்த ராகுல், ஜாதி அடிப்படையில் மக்கள் ஓட்டளிப்பது குறைவாக இருக்கும் என தெரிவித்தார்.
அமேதியில் பதற்றம் : அமேதி தொகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுச்சாவடி தங்கள் பகுதியில் இருந்து வெகு தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து போராடுவதாக அவர் தெரிவித்தனர். போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அமேதி தொகுதியில் காங்கிரசார் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானங்களை தாராளமாக வழங்கி வருவதாகவும், உள்ளூர் தலைவர்கள் பலரையும் தங்களுக்கு ஓட்டுக்குமாறு காங்கிரசார் மிரட்டி வருவதாகவும் அத்தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டி உள்ளார்.