பிரதமர் மோடி- முதல்வர் ஜெ.,வுக்கு எதிர்ப்பு ; இலங்கையில்...
பிரதமர் மோடி- முதல்வர் ஜெ.,வுக்கு எதிர்ப்பு ; இலங்கையில் ஆர்ப்பாட்டம்- ஆவேசம்
கொழும்பு: இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெ.,வுக்கு எதிராக இலங்கைவாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மோடி, ஜெ., உருவப்படத்தை கொடூரர்கள் போல சித்தரித்த பதாகைகளும் ஏந்தி வந்து கோஷமிட்டனர். போராட்ட இறுதியில் ஜெ,. உருவ பொம்மையை அவர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனால் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன்பு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இலங்கை தமிழர்விவகாரம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஆகியன தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் , தமிழக முதல்வர் ஜெ., பல கடிதங்கள் எழுதி வருகிறார். இன்று கூட அ.தி.மு.க.,தரப்பில் லோக்சபாவில் பேசிய தம்பித்துரை, இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் 13 வது திருத்தப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக மக்களின் உணர்வுக்கு இந்திய அரசும் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். தமிழக மீனவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில் இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி வருவதாக கண்டனம் தெரிவித்து இலங்கை மக்கள் , கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் என்றும், தமிழக முதல்வர் ஜெ.,வுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முதல்வர் ஜெ., வை எமன் போல் சித்தரித்த பதாகைகள் கொண்டு வந்தனர். ஜெ., கட்அவுட் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தையொட்டி இந்திய தூதரக அலுவலகம் முன்பு போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தன.