தண்ணீர் சிக்கனமும் பாதுகாப்பும் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு...
தண்ணீர் சிக்கனமும் பாதுகாப்பும்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.
உண்பவர்களுக்குச் சிறந்த உணவுகளை உருவாக்கிக் கொடுத்து அவற்றை உணபவர்களுக்குத் தானும் உணவாக இருப்பது மழையாகும்.
மழை நீர் அமிழ்தமாக உயிர்களை வாழவைக்கிறது.இத்தகைய நீரை மாசு படுத்துவதை மக்கள் உணரவில்லை. குளங்கள் எல்லாம் தாமரையும்,அல்லியும் மலர்ந்துகாணப்படவில்லை. பாலீதீன் கவர்களும், மற்றும் வீட்டுக் கழிவு குப்பைகளும் தான் நிறைந்து காணப்படுகிறது துர் வாடை வீசி சுற்றுப்புறத்தை நாசமாக்கிக் கொண்டு இருக்கிறது.
சில குளங்களில் ஆகாசத் தாமரை படர்ந்து குளத்து நீரையே மறைத்துள்ளது. ஏரி, குளங்கள் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுத்து அவற்றைத் தூர்வாரி, மழைக் காலத்தில் மழை நீரை சேகரித்து கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாகுறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் சுத்தமாய் இல்லை என்று காய்ச்சி வடிகட்டிய தண்ணீருடன் பயணம் செய்கிறோம். குடி தண்ணீர் மூலம் தான் நோயகள் பரவுகின்றன. பஞ்சபூதத்தையும்கெடுத்து விட்டோம். சுற்றுச் சூழலைமாசு படுத்துபவர்களைத் தண்டிக்க வேண்டும் தொழிற்சாலைக் கழிவுகளைஆறு,குளங்களில் கலக்காமல் பார்த்துக்கொள்ள தீவிர கண்காணிப்புத் தேவை.நீர் மேலாண்மை பற்றிய விழிப்புண்ர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
7 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை.இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்.இயற்கை வளத்தை பாதுகாக்கா விட்டால் உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாமல் போய்விடும் இந்த உலகம்.
சிலர் தண்ணீரை வீணடிப்பதை பார்த்தால் பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே பாடல் நினைவுக்கு வருகிறது.சிக்கனத்துக்கு பெயர் பெற்ற பெரியார் அவர்கள் தங்கை வீட்டுக்கு சாப்பிடப் போயிருந்தாராம் சாப்பிட்டு முடிந்தவுடன் தங்கச்சி மகன்(ஈரோடு சாமி)மாமாவுக்கு கை கழுவ தண்ணீரை நிறைய ஊற்றிக்கொண்டே இருந்தாராம் பெரியார் பொட்டுன்று ஒர் அடி அடித்து ஏன் அடித்தேன்னு கேளு அப்படின்னாராம் “ஏன் அடிச்சிங்க?”ன்னு கேட்டார் தங்கச்சி மகன். அதுக்கு பெரியார்”இது தண்ணியா இருக்கிறதுனாலே தானே இப்படி தாராளமாக ஊத்தறே. நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா? தண்ணியா இருந்தாலும் அதை அளவோடதான் செலவு பண்ணனும் வீணக்கப்புடாது” என்று சொன்னாராம். இந்தக்காலத்துக்கும் எந்தக் காலத்துக்கும் தேவையான் ஒர் அறிவுரை.
பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார்கள் என்பார்கள். அதை மாற்றி தண்ணீரை பணம் மாதிரி செலவு செய் என்று சொல்ல வேண்டும். நிலத்தடிநீர் என்பது உலகமக்களின் சொத்து. ஆறுகள் வரண்டு போனால் நிலத்தடி நீர் எங்கு இருக்கும்.குழாய்ப் போட்டு உறிஞ்சி எடுத்து கொண்டே இருந்தால் ’சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ நிலத்தடி நீர் வளத்தை பெறுக்க மரங்கள் வளர்ப்போம்.மரம் வளர்த்து மழை பெறுவோம்.மழை நீரைச் சேமிப்போம்.நீர் இல்லாத ஏரி குளங்களில் வீடு கட்டுவதைத் தவிர்ப்போம்.
இரசாயன் உரத்தைக் கொட்டி, உயிர்க்கொல்லிகளைக் கொட்டி நிலத்தை நஞ்சாக்கி விட்டோம் இயற்கை உரங்களைப் போட்டு நிலத்தை நல்ல நிலமாக மீட்டால் நந்நீர் பெறலாம்.
நல்ல மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும்,மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும்.மழை பொழிந்தால் தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.
விவசாயத்திற்குச் சொட்டு நீர்ப் பாசனம் இருந்தால் நீர் தேவையின்றி ஆவியாவது தடுக்கப் படும். வேருக்குச் சொட்டு நீர்ப் பாசனம், நீர் சிக்கனத்தைத் தருவது போல இலைகளுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனம் நன்மை தரும். நீர்ப் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்,நகர் ஆக்கம்,காலநிலை மாறுபாடு,மாசுபாடு,வணிகம் ஆகியவை காரண்ம்.
நீர்ப் பற்றாக் குறை காரணமாக அண்டை வீடுகளுக்கும், அண்டை வயல்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படுகினறன. கி.மு 2500ல் சுமேரியாவில் இருந்த லகாஷ்,உம்மா ஆகிய நாடுகளுக்கு இடையே நதி நீரைப் பிரித்துக் கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதே நிலமை இப்படி இருந்தால் இப்போது கேட்கவா வேண்டும்?
ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைப்பிடிக்கபப்டுகிறது. இந்த வருடம் சுத்தமான் நீரின் அவசியம் பற்றி மக்களிடையே”சுத்தமான் நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்”’ என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தர உள்ளனர்.
” ஏரி, குளம்,கிணறு,ஆறு எல்லாம் நிரம்பி வழிய,
மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க”
வாழ்க வளமுடன்!!