வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடல்: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடல்: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சீசன் முடிந்த காரணத்தால், செவ்வாய்கிழமை முதல் மூடப்படுகிறது. இதனால் பார்வையாளர்கள், பறவைகளை பார்க்க அனுமதிக்க முடியாது என வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாயங்களுள் ஒன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான மைல்களை தாண்டி, பறவைகள் வந்து குறிப்பிட்ட காலம் வரை இருந்து, தனது வம்சத்தை பெருக்க, முட்டையிட்டு குஞ்சு பொறித்து, சீசனை அனுபவிக்க வந்த வெளிநாட்டு விருந்தாளிகளாய், பறவைகள் வந்து செல்வதுண்டு. இங்கு சிங்கப்பூர், வங்காளதேசம், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளாய் பறவைகள் ஆண்டுதோறும் வருவதுண்டு. வக்கா, நாரை, மஞ்சள் நாரை, முக்குளிப்பான், கிவி, நாம்கோழி, சாம்பல் கூழைக்கடா, நத்திக்கொத்தி நாரை, கூழைகடா, பாம்புதாரா, ஊசிவால்வாத்து, கரண்டிவாயன், வெளிநிற அரிவாள்மூக்கன், வர்ணநாரை, நீர்காகம் போன்ற பல்வகை பறவைகள் வந்து வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் துவங்குவதுண்டு. வேடந்தாங்கல ஏரியில் உள்ள கடம்ப மரங்களில், கருவேல மரங்களில், இப்பறவைகள் கூடு கட்டி, தங்கி செல்லும். கடந்த ஆண்டு அக்டோபர் 23ல் சீசன் துவங்கியது. இந்த சீசனில் பறவைகளை காண 1,45,217 பேர்கள் பார்வையாளர்களாக வந்துள்ளனர். இவர்கள் பார்வையாளர் கட்டணமாக ரூ 7,92,628 வனத்துறையினருக்கு செலுத்தி உள்ளனர். இந்நிலையில், தற்சமயம் ஏரியில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தாலும், போதிய பறவைகள் இல்லாத காரணத்தாலும், பறவைகளை காண்பதற்கு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வனத்துறையினர் பார்வையாளர்களுக்கு தடைவித்துள்ளது. இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செவ்வாய்கிழமை முதல் மூடப்படுகிறது.
இதுபற்றி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வனத்துறை அலுவலர் டி.முருகேசன் கூறுகையில், இந்த பறவைகள் சரணாலயம் நேற்று (செவ்வாய்கிழமை) முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்த போதிய மழை பெய்து இருந்தால் இந்த மாதம் வரை சீசன் காலமாக இருந்து இருக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில், ஏரியில் போதுமான தண்ணீர் தங்க ஏரியில் ஆழப்படுத்தவும், அதிக அளவில் கருவேலமரங்களை ஏரியின் நடுவில் நடவும், பார்வையாளர்களுக்கு தேவையான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற பணிகள் நடைபெற உள்ளது. தற்சமயம் பார்வையாளர்கள் கொண்டு வரும் கைப்பைகளை வைக்க கிலாக் ரூம் கட்டப்பட்டுள்ளது. இனி வரும் சீசன் துவங்குவதற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றார்.