எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொடைக்கானல் பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் திண்டுக்கல் மாவட்டம்...

கொடைக்கானல் பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த 2 வருடங்களாக போதிய மழை பெய்யவில்லை. இந்த ஆண்டும் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இதுவரை தொடங்கவில்லை.

இதனால் நகருக்கு குடிநீர் வழங்கும் புதிய அணையின் நீர்மட்டம் முற்றிலும் குறைந்து விட்டது. பழைய அணையில் 2½ அடி மட்டும் தண்ணீர் உள்ளது. அதேபோல் மலைப் பகுதியில் உள்ள பல்வேறு தடுப்பு அணைகளிலும் தண்ணீர் இல்லாத சூழ்நிலையே உள்ளது. இதனால் வன விலங்குகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே பல வனவிலங்குகள் தண்ணீரை தேடி நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய நீர்த்தேக்கத்தினை தேடி வருகின்றன. இதில் குறிப்பாக புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்டு எருமைகள், மான்கள் போன்றவையும் அடங்கும். இதுகுறித்து நகராட்சி நீர்த்தேக்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூறும்போது, கொடைக்கானல் பகுதியில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகள் நகரை ஒட்டியுள்ள நீர்த்தேக்கத் தினை தேடி வருகின்றன.

கடந்த ஆண்டு புலி ஒன்று காட்டு எருமையினை அடித்து சாப்பிட்டது கண்காணிப்பு காமிராவில் பதிவானது. தற்போது கடந்த 2 வாரகாலமாக யானை ஒன்று அடிக்கடி வந்து தண்ணீர் குடிப்பதாகவும் கூறினர்.

அத்துடன் புலி தனது 3 குட்டிகளுடன் நடமாடுவதாகவும் சிறுத்தைப்புலி மற்றும் காட்டு எருமைகள் மான்கள் பகல் நேரத்திலேயே வந்து தண்ணீர் குடிப்பதாகவும் கூறினர். நகருக்கு குடிநீர் விநியோகம் காரணமாகவும் குடிநீர் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து இன்னும் 1 வார காலத்தில் அணை வறண்டு விடும் சூழ்நிலை உள்ளது.

இதனால் வனவிலங்குகள் நகருக்குள் நுழையும் வாய்ப்புகள் உள்ளன. இதனை தடுக்க வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

வனவிலங்குகளின் நடமாட்டத்தினை உறுதிப்படுத்தும் விதமாக குடிநீர் தேக்கத்தில் புலி மற்றும் சிறுதைப்புலிகள் கால் தடங்களை ஊழியர்கள் கண்டுபிடித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நாள் : 25-Jun-14, 7:03 pm

மேலே