புறநானூறு பாடல் 10 - சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி

இச் சோழமன்னன் இளஞ்சேட்சென்னி பிறந்த ஊர் நெய்தலங்கானல் ஆகும். இவன் தென்னாட்டு பரதவரையும், வடநாட்டு வடுகரையும் வென்று புகழ் பெற்றவன். இரப்போர்க்கு வரையாது வழங்கும் வள்ளன்மை உடையவன். இவன் பாமுளூர், செருப்பாழி என்னுமிடங்களில் பகைவரை வென்று முறையே பாமுளூரெறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். பாமுளூர் சேரர்களுக்கு உரிய ஊராகும்.

இவன் நெய்தலங்கானலில் இருந்தபோதும், பாமுளூரெறிந்த போதும், செருப்பாழி யெறிந்த போதும் ’ஊண்பொதி பசுங்குடையார்’ இவனைப் பாடி பரிசுகள் பெற்றிருக்கின்றார். ஊண்பொதி பசுங்குடையாரின் இயற்பெயர் தெரியவில்லை.

பனையின் பச்சோலையால் உட்குடைவுடையதாகச் செய்யப்படுவது பனங்குடை ஆகும். இதை உணவு உண்பதற்கும், பூப்பறித்தற்கும் மக்கள் பயன்படுத்துவர். இதில் சோறு பொதிந்து கொண்டு போவதும் உண்டு. இதனில் ஊண் பொதிந்து கொண்டு செல்வதை வியந்து, இந்த பாடலாசிரியர் ‘ஊண்பொதி பசுங்குடை’ என்று பாடிய சிறப்பால் ‘ஊண்பொதி பசுங்குடையார்’ எனப்படுகிறார். இவர் பாட்டில் நகைச்சுவையும், இயற்கை நவிற்சியும், அறவுணர்வும் நிறைந்து இவரது பெருமாண்புலமை தெரிய வருகிறது.

இனி பாடலைப் பார்ப்போம்.

வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி யத்தக வொறுத்தி
வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற் 5

றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே
அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்த லல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப 10

செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கான னெடியோய்
எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே.

பதவுரை:

வழிபடுவோரை வல் அறிதி – உன்னை வழிபட்டு ஒழுகுபவர்களை அவர்கள் சொல்லிக் கண்டறிவதற்கு முன்பே அவர்தம் முகக்குறிப்பால் மனநிலையை அறிந்து அவர்க்கு உதவி செய்வாய்

பிறர்பழி கூறுவோர் மொழி தேறலை – பிறர்மீது குற்றம் சொல்பவரின் சொற்களையும் ஆராய்ந்து தெளிவு கொள்வாய்

நீ மெய் கண்ட தீமை காணின் – நீ மனத்தால் ஆராய்ந்து உண்மை எதுவென அறிந்து அறுதியிடப்பட்ட கொடுமையை ஒருவனிடம் கண்டால்

ஒப்ப நாடி – அதனை நீதி நூற்களில் சொல்லியபடிஆராய்ந்து

அத்தக ஒறுத்தி – அத்தீமைக்குத் தக்கபடி தண்டனை தருவாய்

வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் – மனம் திருந்தி வந்து உன் பாதத்தை அடைந்து உன் முன்னால் நிற்பார்களென்றால்

பண்டையிற் பெரிது நீ தண்டமும் தணிதி – அவர் பிழை செய்வதற்கு முன் இயற்கையாகவே அருள் செய்யும் நீ, அதனினும் பெரிதாக அருள் செய்து அவருக்குத் தண்டனையையும் குறைப்பாய்

அமிழ்து அட்டு ஆனா – அமிழ்தத்தினும் மேலான சுவையுடன் உண்ண உண்ண அருமையான

கமழ்குய் அடிசில் – மணம் கமழும் தாளிப்பை யுடைய உணவை

வருநர்க்கு வரையா – உன்னை நாடி வரும் விருந்தினர்க்கு குறைவில்லாமல் வழங்கி

வசையில் வாழ்க்கை – பிறரால் குறை சொல்லப்படாத வாழ்க்கையை

மகளிர் மலைத்தல் அல்லது – உன் மகளிர் ஊடல் செய்வதன்றி

மள்ளர் மலைத்தல் போகிய – பகை வேந்தர் உன்னோடு போர் செய்யாத

சிலைத்தார் மார்ப – வானவில் போன்ற மாலையை அணிந்த மார்ப!

செய்து இரங்காவினை – முன் ஒரு தவறைச் செய்து, பின் பிழைக்கச் செய்தேன் என்று கருதாத செய்கையையும்

சேண் விளங்கும் புகழ் – நெடுங்காலம் விளங்கும் புகழுடன்

நெய்தலங்கானல் நெடியோய் – நெய்தலங்கானல் என்ற ஊரை ஆளும் மிகுபுகழ் உடையவனே!

எய்த வந்தனம் யாம் – உன்னை அடைந்து காண வந்த நான்

ஏத்துகம் பலவே – உன் பல நற்குணங்களைப் புகழ்வேன்!

பொருளுரை:

உன்னை வழிபட்டு ஒழுகுபவர்களை அவர்கள் சொல்லிக் கண்டறிவதற்கு முன்பே அவர்தம் முகக்குறிப்பால் மனநிலையை அறிந்து அவர்க்கு உதவி செய்வாய்! பிறர்மீது குற்றம் சொல்பவரின் சொற்களையும் ஆராய்ந்து தெளிவு கொள்வாய்! நீ மனத்தால் ஆராய்ந்து உண்மை எதுவென அறிந்து அறுதியிடப்பட்ட கொடுமையை ஒருவனிடம் கண்டால் அதனை நீதி நூற்களில் சொல்லிய படிஆராய்ந்து அத்தீமைக்குத் தக்கபடி தண்டனை தருவாய்!

மனம் திருந்தி வந்து உன் பாதத்தை அடைந்து உன் முன்னால் நிற்பார்களென்றால் அவர் பிழை செய்வதற்கு முன் இயற்கையாகவே அருள் செய்யும் நீ, அதனினும் பெரிதாக அருள் செய்து அவருக்குத் தந்த தண்டனையையும் குறைப்பாய்! அமிழ்தத்தினும் மேலான சுவையுடன் கூடிய உண்ண உண்ண அருமையான மணம் கமழும் தாளிப்பையுடைய உணவை உன்னை நாடி வரும் விருந்தினர்க்கு குறைவில்லாமல் வழங்கி பிறரால் குறை சொல்லப்படாத வாழ்க்கையையும், உன் மகளிர் ஊடல் செய்வதன்றி, பகை வேந்தர் உன்னோடு போர் செய்யாத வானவில் போன்ற மாலையை அணிந்த மார்ப!

முன் ஒரு தவறைச் செய்து, பின் பிழைக்கச் செய்தேன் என்று கருதாத செய்கையையும், நெடுங்காலம் விளங்கும் புகழுடன் நெய்தலங்கானல் என்ற ஊரை ஆளும் மிகுபுகழ் உடையவனே! உன் பல நற்குணங்களை அறிந்து உன்னைக் கண்டு புகழவே வந்தேன் நான்!

விளக்கம்:

’நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத் தக ஒறுத்தி’ என்பதனால், குற்ற வகைகளும், அவற்றை ஆராய்ந்து ஒறுக்கும் திறங்களும் உணர்த்தும் நீதி நூல்கள் தமிழகத்திலே இருந்தது புலனாகிறது. விருந்தோம்பாமை மனை வாழ்க்கைக்கு வசையாதலால், விருந்து வரையாத வாழ்க்கை ’வசையில் வாழ்க்கை’ எனப்பட்டது.

இப்பாட்டில், இளஞ்சேட்சென்னி நெய்தலங் கானத்தில் இருந்து தன்னை வழிபடுவோரைத் தழுவி ஆதரித்தும், பிறர்பழி கூறுவதை எடுத்துக் கொள்ளாமலும், குற்றம் செய்தாரை நன்கு ஆராய்ந்து ஒறுத்தலும், வந்து அடி பொருந்தி முன் நிற்பவரை ஏற்றலும், மனை வாழ்வில் இன்புறுதலும் உடையவனாய், முன் செய்து பின்னிரங்கா செய்கையுடனும் சிறப்பது கண்டு மகிழ்ந்து புகழ்கின்றார்.

இப்பாடல் பாடாண்திணை ஆகும். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை.

துறை: இயன் மொழி. மன்னனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும். இவர் எமக்கு இது கொடுத்தார். அதுபோல நீயும் கொடு என வள்ளலை வேண்டுவது இயன்மொழி துறை ஆகும்.

வழிபடுவோரை வல்லறிதி, அடி பொருந்தி முந்தை நிற்பின் தண்டமும் தணிதி, அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை, செய்து இரங்காவினைச் சேண்விளங்கும் புகழ் நெடியோய் என்று இளஞ்சேட்சென்னியின் அருளையும், புகழையும், அவனின் குணநலன்களையும் இயல்பையும் ஊண்பொதி பசுங்குடையார் போற்றிப் பாடுவதால் இப்பாடல் பாடாண் திணையும், இயன்மொழித் துறையுமாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-May-13, 11:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 889

மேலே