புறநானூறு பாடல் 12 - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னனைப் பாடிய சான்றோர் நெட்டிமையார், ‘உன் பகைவர்க்குத் தீமையாக அவர் வருந்தும்படி அவர்தம் நாட்டை வென்று அங்கிருந்து பெற்ற பொருட்களையெல்லாம், தன்னை வந்து அன்பால் இரக்கும் பரிசிலராகிய பாணர் பொற்றாமரைப் பூச்சூடவும், புலவர் யானையும் தேரும் பெற்றுச் செல்லவும் இனியவற்றைச் செய்கின்றாயே! இது அறமோ! என்று மன்னனைப் பழிப்பது போலப் புகழ்கிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண்கொண்
டினிய செய்திநின் னார்வலர் முகத்தே. 5

பதவுரை:

விறன்மாண் குடுமி – வெற்றிப் பெருமிதம் உடைய குடுமி அரசே!

பிறர்மண் இன்னா வாக கொண்டு – வேற்றரசருடைய நாட்டைப் போரிட்டு அவர் வருந்தும்படி அபகரித்துக் கொண்டு

பாணர் தாமரை மலையவும் – அங்கிருந்து பெற்ற செல்வத்தால் பொன்னால் தாமரைப்பூ செய்து வெள்ளியாற் செய்த நாரிடைத் தொடுத்த பொன்னரிப்பூ மாலையைப் பாணர் பெற்றுச் சூடவும்

புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் – புலவர்க்கு பட்டம் அணிந்த மத்தகத்தையுடைய யானையுடன், ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட தேரினை நல்கியும்

நின் ஆர்வலர் முகத்தே இனிய செய்தி – உன்னை அன்பு செய்து பரவிப் புகழ்வாரின் முகத்தில் இன்பமான மகிழ்ச்சியைத் தருகிறாய்

அறனோ மற்றிது – இது உனக்கு அறனோ சொல்வாயாக!

பொருளுரை:

வெற்றிப் பெருமிதம் உடைய குடுமி அரசே!

வேற்றரசருடைய நாட்டைப் போரிட்டு அவர் வருந்தும்படி அபகரித்துக் கொண்டு, அங்கிருந்து பெற்ற செல்வத்தால் பொன்னால் தாமரைப்பூ செய்து வெள்ளியாற் செய்த நாரிடைத் தொடுத்த பொன்னரிப்பூ மாலையைப் பாணர் பெற்றுச் சூடவும், புலவர்க்குப் பட்டம் அணிந்த மத்தகத்தையுடைய யானையுடன், ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட தேரினை நல்கியும் உன்னை அன்பு செய்து பரவிப் புகழ்வாரின் முகத்தில் இன்பமான மகிழ்ச்சியைத் தருகிறாய். இது உனக்கு அறனோ சொல்வாயாக! என்று வஞ்சப்புகழ்ச்சியாகப் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் வாழ்த்துகிறார்.

விளக்கம்:

பொன்னால் தாமரைப்பூச் செய்து அதனை வெள்ளியால் செய்த நாரினால் தொடுப்பது பொன்னரிமாலை ஆகும். இதனைப் பாணர்க்கு அரசர் வழங்குவதும், பாணர்கள் அதைச் சூடுவதும் மரபாதலால் ’பாணர் தாமரை மலையவும்’ என்றார் புலவர். புலவர்க்குக் களிறும் தேரும் நல்குதலும் பண்டையோர் மரபு. அன்பு கொள்ளாது பகைமை கொண்டதனால், பகைவேந்தரைப் பிறர் என்றும், அன்பு செய்து பரவிப் புகழ்வாரை ஆர்வலர் என்றும் நெட்டிமையார் இப்பாட்டின்கண் கூறினார்.

வேந்தே! நீ ஒருவரிடம் இனிமையும், மற்றொருவரிடம் இன்னாமையும் செய்தல் அறனோ என்று கேட்பது பழிப்புரை ஆகும். ஆனால் ஆர்வலர்க்கு இன்பம் செய்தலும், பகைவர்க்கு இன்னாமை செய்தலும் வெற்றி கொள்ளும் வேந்தர்க்குப் புகழாதலால், அதனைக் கூறுதல் புகழாயிற்று.

இப்பாடல் பாடாண்திணை ஆகும். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை. ’பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும், நின் ஆர்வலர் முகத்தே இனிய செய்கிறாய்’ என்று முதுகுடுமிப் பெருவழுதியின் நல்லியல்புகளை இப்பாடல் சிறப்பித்துக் கூறுகிறது. பாண்டியன் பெருவழுதியின் இயல்பைக் கூறுவதால் இப்பாடல் இயன்மொழித் துறை ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-13, 10:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 638

மேலே