புறநானூறு பாடல் 26 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இப்பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் ஆகும். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் முடிவேந்தர்கள் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மற்றும் வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரை தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று இவன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.

இப்பாடலசிரியர் மாங்குடி கிழாராகிய மருதனார் இப்பாண்டியன் நெடுஞ்செழியனது உயர்வு கண்டு, ’அடுபோர்ச் செழிய! நான்மறை முதல்வரும், துணை வேந்தரும் சுற்றியிருக்க வேள்வி பல செய்த வேந்தே! உன் பகைவர் இவ்வுலகத்தே உன்னிடம் பகையுற்றுப் போரிட்டுத் துன்புற்று வீழ்ந்தாராயினும் சொர்க்கவுலகம் புகுந்து இன்புறுகின்றாராதலால், அவர்கள் புண்ணியம் செய்தவர்களே ஆவர்’ என்று பாடிப் பாண்டியன் சிறப்பைப் பாராட்டுகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

நளிகட லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
ஒளிறிலைய வெஃகேந்தி 5

அரைசுபட வமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை யடுப்பாகப்
புனற்குருதி யுலைக்கொளீஇத்
தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் 10

அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே 15
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்றா ரென்னும் பெயர்பெற்
றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே.

பதவுரை:

நளிகடல் இருங் குட்டத்து வளி புடைத்த கலம் போல - மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு நீரைக் கிழித்து ஓடும் மரக்கலம் போல

களிறு சென்று களன் அகற்றவும் – யானைகள் சென்று போர்க்களத்தில் வீரர்களை விலக்கி இடம் அகலச் செய்ய

களன் அகற்றிய வியலாங்கண் – அவ்வாறு களம் அகலச்செய்த பரந்த இடத்தில்

ஒளிறு இலைய எஃகேந்தி – ஒளிர்கின்ற இலையை யுடைய வேலை ஏந்தி

அரைசு பட அமர் உழக்கி உரை செல – உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து போர்க்களத்தைக் கலக்கி புகழ் பரவ

முரசு வௌவி – பகையரசரின் முரசுகளைக் கைப்பற்றி

முடித்தலை அடுப்பாக – கிரீடம் அணிந்த அவர் களின் தலைகளை அடுப்பாகக் கொண்டு

புனல் குருதி உலைக் கொளீஇ – புனலாகப் பெருகும் குருதியை அடுப்பை எரிக்கும் உலையில் பெய்து

தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின் - வீரவளை அணிந்த அவர்களின் தோள்களைத் துடுப்பாக ஆக்கித் துழாவி சமைக்கப்பட்ட உணவால்

அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய – போர்க் களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போர் புரியும் செழிய!

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றமாக - தகுந்த கல்வி கற்று ஐம்புலன் களை அடக்கிய மனவலிமையோடு, நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க

மன்னர் ஏவல் செய்ய – பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய

மன்னிய வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே – நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினையுடைய வேந்தே!

மன்ற நோற்றோர் நின் பகைவர் – யாவரும் அறியும்படித் தவம் செய்த உன் பகைவர்கள்

நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று – உன்னோடு வேறுபட்டு பகைவரானவர் என்னும் பெயரைப் பெற்று

ஆற்றா ராயினும் – உன்னோடு போர் செய்தற்கு மாட்டாராயினும்

ஆண்டுவாழ் வோரே – அவர்களும் சொர்க்கத்தில் வாழ்வார்கள்

பொருளுரை:

மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு நீரைக் கிழித்து ஓடும் மரக்கலம் போல, யானைகள் சென்று போர்க்களத்தில் வீரர்களை விலக்கி இடம் அகலச் செய்ய அவ்வாறு களம் அகலச்செய்த பரந்த இடத்தில் ஒளிர்கின்ற இலையையுடைய வேலை ஏந்தி, உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து போர்க்களத்தைக் கலக்கி புகழ் பரவ பகையரசரின் முரசுகளைக் கைப்பற்றினாய்.

கிரீடம் அணிந்த அவர்களின் தலைகளை அடுப்பாகக் கொண்டு புனலாகப் பெருகும் குருதியை அடுப்பை எரிக்கும் உலையில் பெய்து வீரவளை அணிந்த அவர்களின் தோள்களைத் துடுப்பாக ஆக்கித் துழாவி சமைக்கப்பட்ட உணவால் போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போர் புரியும் செழிய!

தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு, நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய, நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை யுடைய வேந்தே!

உன்னோடு வேறுபட்டவர் என்னும் பெயரைப் பெற்று உன்னை எதிர்த்த உன் பகைவர்களும் யாவரும் அறியும்படித் தவம் செய்தவர்களாகவே கருதப்படுவர். அவர்கள் உன்னோடு போர் செய்தற்கு மாட்டாராயினும், அவர்களும் சொர்க்கத்தில் வாழ்பவர்கள் ஆவார்கள்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும். ‘களனகற்றிய வியலாங்கண் ஒளிறு இலைய எஃகேந்தி அரைசு பட அமர் உழக்கி முரசு வௌவி முடித்தலை அடுப்பாகப் புனற்குருதி உலைக் கொளீஇத் தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின் அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!’ என்று பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தையும், வெற்றியையும் பாடப்படுதலால் இது வாகைத் திணை ஆயிற்று.

துறை: அரசவாகை.

1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

இப்பாண்டியனை வீரரைக் கொண்டு கள வேள்வியும், ஆன்ற கேள்வியடங்கிய நான்மறை முதல்வரைக் கொண்டு ஏனைய தீ வேள்வியும் செய்த வேந்தே என்று பாராட்டப்படுவதால், அவனுடைய போர்த்திறம் மட்டுமல்லாது வேள்விகள் பலவும் செய்யும் நல்லியல்பு உடையவன் என்பது தெளிவு. எனவே இப்பாடல் அரசவாகைத் துறை ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-13, 12:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 392

மேலே