புறநானூறு பாடல் 31 - சோழன் நலங்கிள்ளி

சோழன் கரிகால் பெருவளத்தானின் இளைய மகனான வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி கரிகாலன் இறந்த பிறகு பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர்.

ஒரு சமயம், இவனுக்கும் இமயவரம்பனுக்கும் (அண்ணன் மருமகன்) இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர். இவன் போரில் இறந்த பிறகு, இவன் மகனான நலங்கிள்ளி தன் தந்தையைப் போல், பூம்புகாரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான்.

இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர். ஒருசமயம், நலங்கிள்ளிக்கும் உறையூரை ஆண்டு வந்த நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வி யடைந்ததால், நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரியதாக்கி, தனது வரையா ஈகையால் புகழ் பெற்றான்.

தொண்டை நாட்டிலுள்ள கோவூர் என்னும் ஊரைச் சேர்ந்த சான்றோர் கோவூர் கிழார் இப்பாட்டில் இச்சோழன் நலங்கிள்ளியைப் பாடுகின்றார். இவர் சிறந்த நல்லிசைப் புலமையுடையவர். இவர் செய்த அரும் செயல்கள் சில குறிப்பிடத் தக்கவை.

ஒரு சமயம் உறையூரை ஆண்டு வந்த சோழன் நெடுங்கிள்ளி இளந்தத்தன் என்னும் புலவனைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்றனெனத் தவறாக எண்ணி கொல்ல நினைத்தான். அதனை உணர்ந்த இக் கோவூர் கிழார் தக்கவாறு உண்மையைச் சொல்லி அப்புலவனை உய்வித்தார்.

கிள்ளிவளவன் என்ற அரசன் மலையமான் மக்களைப் பிடித்து யானைக் காலிலிட்டுக் கொல்ல நினைத்த பொழுது, கோவூர் கிழார் சிறுவர்களின் இயல்பு கூறி அவன் எண்ணத்தை மாற்றி மலையமான் மக்களைக் காப்பாற்றினார்.

இச்சான்றோர் இப்பாட்டில், சோழன் நலங்கிள்ளி யின் வெற்றி நலத்தைச் சிறப்பித்து, ‘வேந்தே! நீ நல்ல புகழை விரும்பி பாசறையில் இருப்பதற்கே விழைகின்றாய்; உன் யானைப்படை, பகைவர் அரண்களைச் சிதைத்தும் அடங்காமல் மதம் கொண்டு நிற்கின்றன; போரெனக் கேட்ட உன் மறவர், பகைவர் நாடு காடுவழிகளைக் கடந்து நெடுந்தூரத்தில் உள்ளதென அறிந்தும், அங்கு செல்வதற்கு அஞ்சார்; இத்தகைய காரணங்களால், கிழக்கு கடற்கரையை உடைய நீ மேற்கு கடல் அடைந்து பின் அங்கிருந்தே வடபுலம் நோக்கி வருவாயென நினைத்து, வடபுலத்து அரசர் இரவெல்லாம் உறக்கமின்றிக் கிடக்கின்றனர்’ என இப்பாட்டில் பாராட்டுகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல
இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை
உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் 5

பாசறை யல்லது நீயொல் லாயே
நுதிமுக மழுங்க மண்டி யொன்னார்
கடிமதில் பாயுநின் களிறடங் கலவே
போரெனிற் புகலும் புனைகழன் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய 10

செல்வே மல்லே மென்னார் கல்லென்
விழவுடை யாங்கண் வேற்றுபுலத் திறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப
வலமுறை வருதலு முண்டென் றலமந்து 15
நெஞ்சுநடுங் கவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே.

பதவுரை:

சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் – உலக வாழ்க்கையில் மக்களால் நெறியறிந்து எய்துதற் குரிய சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும்

அறத்து வழிப் படூஉம் தோற்றம் போல – அறத்தின் பின்னே வரும் காட்சி போல

இருகுடை பின்பட – சேர பாண்டியர் ஆகிய இருவரது குடையும் பின் வர

ஓங்கிய ஒருகுடை உருகெழு மதியின் நிவந்து சேண் விளங்க – மேலான புகழுடைய உனது ஒரே வெண்கொற்றக்குடை நிறமும் அழகும் உடைய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்க

நல்லிசை வேட்டம் வேண்டி – நல்ல தணியாத புகழை விருப்புடன் நினைந்து

வெல் போர்ப் பாசறை யல்லது ஒல்லாயே நீ – வெல்லும் போரினைச் செய்யும் பாசறையில் இருப்பதல்லாது உனது நகரின் அரண்மனையில் இருப்பதற்கு உடன்படமாட்டாய் நீ!

நுதி முகம் மழுங்க மண்டி – யானைக் கொம்பி லுள்ள முனைப்பூண் மழுங்கி, முகம் தேய மண்டியிட்டு

ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே – பகைவரின் காவலையுடைய கோட்டை மதிற் சுவரைக் குத்தும் உனது யானைகள் அடங்காது இருக்கின்றன.

போரெனில் புகலும் புனை கழன் மறவர் – போரென்று அறிந்து விரும்பி அணிந்த வீரக் கழலையுடைய உனது மறவர்களும்

காடு இடைக் கிடந்த நாடு – காட்டின் நடுவில் அமைந்திருந்த பகைவர் நாடு

நனி சேய – மிகத் தொலைவில் இருப்பதால்

செல்வேம் அல்லேம் என்னார் – நாங்கள் செல்ல மாட்டோம் எனச் சொல்ல மாட்டார்கள்

கல்லென் விழவுடை ஆங்கண் – பகைவர் நாட்டில் ஆரவாரத்துடன் வெற்றிவிழாக் கொண்டாடி அங்கேயே

வேற்றுப் புலத்திறுத்து – பகைப்புலத்தில் தங்கியும்

குணகடல் பின்னதாக – கிழக்குக் கடற்கரையைப் பின்னால் விட்டு நீங்கியும்

குடகடல் வெண்டலைப் புணரி – மேற்குக் கடல் பகுதியை அடைந்து அக்கடலின் வெண்ணிறத் தலை போன்ற அலைகள்

நின் மான் குளம்பு அலைப்ப – உனது குதிரைகளின் குளம்புகளைத் தழுவ

வலம் முறை வருதலும் உண்டென்று – நீ வலமாக ஒவ்வொரு நாடாக வரலாமென எண்ணி

அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாய – மனம் அலைபாயக் கலக்கமுற்று நெஞ்சம் நடுங்கித் துன்பம் மேலிட

துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே – உறக்கத்தைத் துறந்த கண்களை உடையனவாயின வடநாட்டி லுள்ள அரசுகள்.

பொருளுரை:

உலக வாழ்க்கையில் மக்களால் நெறியறிந்து எய்துதற்குரிய சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே வரும் காட்சி போல சேர பாண்டியர் ஆகிய இருவரது குடையும் பின் வர மேலான புகழுடைய உனது ஒரே வெண் கொற்றக்குடை நிறமும் அழகும் உடைய திங்களைப்போல் வெகு தொலைவில் உயர்ந்து விளங்க நல்ல தணியாத புகழை விருப்புடன் நினைந்து வெல்லும் போரினைச் செய்யும் பாசறையில் இருப்பதல்லாது உனது நகரின் அரண்மனையில் இருப்பதற்கு உடன்படமாட்டாய் நீ!

யானைக் கொம்பிலுள்ள முனைப்பூண் மழுங்கி, முகம் தேய மண்டியிட்டு பகைவரின் காவலை யுடைய கோட்டை மதிற் சுவரைக் குத்தும் உனது யானைகள் அடங்காது இருக்கின்றன. போரென்று அறிந்து விரும்பி அணிந்த வீரக் கழலையுடைய உனது மறவர்களும் காட்டின் நடுவில் அமைந் திருந்த பகைவர் நாடு மிகத் தொலைவில் இருப்பதால் நாங்கள் செல்ல மாட்டோம் எனச் சொல்ல மாட்டார்கள்.

பகைவர் நாட்டில் ஆரவாரத்துடன் வெற்றிவிழாக் கொண்டாடி அங்கேயே பகைப்புலத்தில் தங்கியும், கிழக்குக் கடற்கரையைப் பின்னால் விட்டு நீங்கியும், மேற்குக் கடல் பகுதியை அடைந்து அக்கடலின் வெண்ணிறத் தலை போன்ற அலைகள் உனது குதிரைகளின் குளம்புகளைத் தழுவ, நீ வலமாக ஒவ்வொரு நாடாக வரலாமென எண்ணி மனம் அலைபாயக் கலக்கமுற்று நெஞ்சம் நடுங்கித் துன்பம் மேலிட வடநாட்டிலுள்ள அரசுகள் உறக்கத்தைத் துறந்த கண்களை உடையனவாயின.

வாகைத்திணை: வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றி இப்பாடல் கூறுவதால் இப்பாடல் வாகைத்திணை ஆகும்.

துறை: அரசவாகை. 1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

‘நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே’ எனப் போரை விரும்பிப் பாசறையில் இருப்பதாகக் கூறியது அவனது இயல்பைக் கூறியதாகும். ஆகவே, இப்பாடல் அரசவாகைத் துறையைச் சார்ந்தது.

மழபுல வஞ்சி: பகைவர் நாட்டைக் கொள்ளை யிடுதல், எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப் பற்றிக் கூறுதல். ’கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுபுலத் திறுத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண்டலைப் புணரிநின் மான் குளம் பலைப்ப வலமுறை வருதலு முண்டென் றலமந்து நெஞ்சுநடுங் கவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசு’ என்பதற்கிணங்க, பகைவர் நாட்டில் ஆரவாரத்துடன் வெற்றிவிழாக் கொண்டாடி, குணகடல் விட்டு குடகடல் சென்று வடக்கு நோக்கி வலம் வந்து தம் நாட்டை அழித்து விடலாம் என்று வடபுலத்தரசர் அஞ்சுவதைக் குறிப்பதால், இப்பாடல் மழபுல வஞ்சித் துறையும் ஆகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-13, 9:05 am)
பார்வை : 478

சிறந்த கட்டுரைகள்

மேலே