காட்சிப் பிழைகள்- 10

இரத்ததானமளித்து நீ மகிழ்ந்திருந்த
உன் பிறந்த நாளில்
உன் விழிகளைக் விழுங்கிய தருணம்
எனக்குள் நிகழ்ந்தது மரணம்...

வனப்புகள் திமிறிக்குலுங்கும்
நீவொரு பூக்காடு...
நினைவுகள் பற்றி எரிகிறதே
ஏதினியெனக்குச் சாக்காடு...

ஊனமுற்ற மனைவியை
முதுகில் சுமந்தபடி வரும்
மனிதரைக் கண்டு
ஓடி ஒளிந்து கொள்கிறது
வாழ்வின் சுமை...

குப்பைத் தொட்டியில் உணவிற்காய்
தெரு நாயோடு சண்டையிடும்
பைத்தியத்தைக் கண்டும்
மிஞ்சிய உணவைக்கூட
அவனுக்களிக்காது
சாக்கடையில் ஊற்றுகிறது
ஒரு தெளிந்த பைத்தியம்...

தெரு ஓவியனொருவன்
மேகத்தை ஓவியமாய்
வரைந்திருந்தான்
மழை பெய்யத் துவங்கியது
மேகத்தை மேகம் அழித்தது
ஓர் இனத்தின் யுத்தம்
இதிலிருந்துதான்
துவங்கியிருக்கக்கூடும்...

கண்பார்வையற்ற வயோதிகர்
பிச்சையாசித்தபடி
அழகிய பாடல் ஒன்றை இசைக்க
அவரை ஆரத்தழுவிய நீ
பிச்சையாக யாசிக்கிறாய்
அவர் கீதத்தை...

எனை முன்நிறுத்தி
நீ வரைந்த ஓவியத்திலும்
நீயேதான் வாழ்கிறாய்...

என் மனமொரு பேழை
நீயதன் கண்ணாடி..
என் பிம்பமாய்
நீயேதான் இருக்கிறாய்...

நீ புல்லாங்குழல் இசைக்கிறாய்
காற்றின்வழி உயிர்கலக்க வருமெனை
ஊதியேன் கலைக்கிறாய்...

பருவத்தில் நீ
கண்ணாடிமுன் நிற்காதே
படபடப்பில் பருவமடையக்கூடும்
கண்ணாடியும் ...

சிட்டுகளுடன் சிலாகிக்காதே
சிறகு முளைத்திடக்கூடும்
எனக்கு...

நீ வராத நாட்களில்
அமாவாசையாகிவிடுகிறது
என் வானம்...

மரணத்தையும்
அனுபவிக்க வைத்துவிடுகிறது
உன் ஊடல்...

சாலையோரத்தில்
சருகாய் உதிர்கிறேன்
சட்டெனமிதி உயிரெழட்டும்...

மெல்ல உரசியும் ..பின் விலகியும்
கடிகார முட்களாய் காதல்செய்யாதே

உயிரை அடித்துத் துவைத்து
காயவைத்து சலவைசெய்யாதே

நீ நீராடிய நதிக்கரையில்
நான் கால்நனைக்க
உனைக் கொஞ்சித் தழுவிய மீன்கள்
எனையேன் குதறுகிறது...?

பூகம்பங்கள் மிகக்கொடியதுதான்
நீ வரும்போது என்னுள் எழும்
பூகம்பத்தை நான் எந்த ரிக்டரில் அளக்க..

நிராயுதபாணி நான்..
எனை வெட்டி வீழ்த்துவதா உன் வீரம்
உன் விழிகளுக்குக் கொஞ்சம் ஓய்வளி...

என் கண்ணீர்ப் பூக்களைச் சேகரித்துவை
என் மரணத்தின் சாசனத்தை எழுத
உனக்கது உதவக்கூடும்...

இனியெனக்கு மரணமில்லை...
உனைப் பார்த்தவுடனே
மரணித்துவிட்டேன்...நான் ..!
-------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (21-Dec-15, 1:09 am)
பார்வை : 715

மேலே