பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 4

பெண் மனது ஆழமென்று....

பாகம் 4

சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...

திவாகரின் அனைத்து ஈமச் சடங்குகளும் முடிந்தன. பிரேதத்துக்கு எரியூட்டிய பின் ஒரு நம்பூதிரியை வைத்து சுடுகாட்டிலும், வீட்டிலும் சில விஷேச சடங்குகளைச் செய்தார்கள்..

என் அப்பா கூட்டத்தில் பெருங்குரலெடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்..
“ அய்யா.. நான்தான் சொல்றேனில்ல..! ராத்திரி மாப்பிள்ளைக்கு தூக்கம் பிடிக்கல.. எனக்கும் தூக்கம் வரல்ல.. நாங்க ரெண்டு பேரும் பால்கனிப் பக்கமா ஒதுங்கி பேசிட்டிருந்தோம். மாப்பிள்ளை பால்கனி சுவர் மேலே ரெண்டு பக்கம் கால் போட்டு உட்கார்ந்திருந்தாரு.. மாமா ..., என்னவோ போல இருக்கு.. தண்ணி வேணும்னாரு.. இருங்க மாப்பிள்ளை.. ரூமுக்குப் போயி தண்ணி எடுத்துட்டு வர்றேனுட்டுப் போனேன்.. அப்படியே கொடை சாஞ்ச மாதிரி சாஞ்சிட்டாரு.. ரெண்டு நாள் ஊட்டி போயிட்டு வந்தாரு.. ஊட்டியிலே என்ன காய்ச்சல புடுச்சிட்டு வந்தாரோ.. என்ன கருமமோ.. ! இப்பிடி பண்ணிட்டாரே...! ஏ.. நேத்து ராத்திரி நானும் என் பொண்ணும்தான் அவர ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போனோம்..! ! மருந்துச்சீட்டு இதோ இருக்கு..! ”

கூட்டம் பரிதாபத்தில் முணுமுணுத்தது..

“ ஹூம்.. யாரு கண்ணு பட்டுதோ, இப்படி ஒரு விபத்து நடந்துடுச்சி..! ”

“ இந்த பாழாப் போன பாராசிடமால் மாத்திரையைப் போட்டுட்டா ஒரு வெக்கை வந்து புடுங்கத்தான் செய்யும்.. புள்ள பால்கனிக்கு வந்து தவறி விழுந்துடுச்சே..! ”

“ ஏய்யா.. மாப்புள்ளய படுக்க வச்சிட்டு நீ போயிருக்கக் கூடாது ? ? ”

அப்பாவின் இந்தக் கட்டுக்கதையால் திவாகரின் தற்கொலை விபத்தாகி விட்டது..! போஸ்ட் மார்ட்டம், போலிஸ் விசாரணை ஆகாமல் திவாகரின் இறப்புச் சான்றிதழும் கிடைத்து, அடுத்தடுத்த நிகழ்வுகளை எதிர்கொள்ள வீடு தயாராக இருந்தது..

நான் வழக்கப்படி அறைக்கு வந்து தலையை கட்டிலில் முட்டுக் கொடுத்தேன்.. உள்ளதைச் சொன்னால் போலிஸ் கேஸ் ஆகி விடும்.. போலிஸ் முதல் குற்றவாளியாக என்னைத்தான் சந்தேகிக்கும். சொந்த பந்தங்கள் என்னைத்தான் அவதூறு சொல்வார்கள்.. ஏன், நான்தான் தள்ளி விட்டேன் என்று கூடச் சொல்வார்கள்.. வக்கீல் கோர்ட் என்று மாதக் கணக்கில் அலைய வேண்டியிருக்கும்.. இரண்டு குடும்பங்களின் கௌரவம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்து விடும்..

நீதீ கிடைக்குமோ கிடைக்காதோ.. நீதி கிடைத்தால் மட்டும் திவாகர் திரும்பி வந்து விடுவாரா?? நடந்தது நடந்து விட்டது.. நடுத்தரக் குடும்பம் நாம்.. இனி நடக்க வேண்டியவைகளைப் பார்க்க வேண்டும்.. இருப்பதைக் காப்பாற்ற வேண்டும்..; என்னைக் காப்பாற்ற வேண்டும்..

இப்படித்தான் அப்பா என்னிடம் சொல்லியிருந்தார்.. என்னை வாய் திறக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். எதையும் பேசுகிற நிலையிலும் நானில்லை..!

வெள்ளைப் புடவை கட்டி, காதிலும் கழுத்திலும் ஒன்றும் போடாமல் அமர்ந்திருந்த என்னிடம் வந்தார் என் மாமியார்.

“ போதும்மா.. எல்லோரும் போயாச்சு.. சாதாரணமா புடவை கட்டி ஒரு ஸ்டிக்கர் பொட்டு வச்சிட்டு வா..! ”

நான் மாமியாரைப் பார்த்தேன். அவர் வெள்ளைப் புடவை கட்டவில்லை; நகைநட்டுப் போடமலில்லை.. இருப்பினும் என்னிடமிருந்த சோகத்தை விடவும் அதிகமான சோகத்தில், பத்து வயது அதிக தோற்றத்துடன் பிடுங்கியெறிந்த மரமாகி விட்டிருந்தார். மாமனார் அடிக்கடி நெஞ்சை நீவி விட்டவாறு ஒரு நடமாடும் எந்திரமாகியிருந்தார். மாமனாருக்கு திவாகர் மகன் மட்டுமல்ல; தோள் கொடுக்கும் தோழனும் கூட..! ஆக, அவருக்கு இரட்டை இழப்பு.. கொள்ளி போட வாய்த்த மகனுக்கே கொள்ளி போடுவது எவருக்கும் நேரக்கூடாத ஒன்று..!

திவாகரின் தங்கை கர்ப்பமாக இருக்கிறாள். அவள் வரவில்லை..

நான் கசப்பாகச் சிரித்தேன். கல்லூரிக் காலத்தில் எத்தனை பெண்களை சமூகக் கட்டிலிருந்து வெளிக் கொண்டு வந்து அவர்களுக்கு மறுபடியும் மங்கலம் கொடுத்திருப்பேன் ? ? இப்போது எனக்கே இன்னொருவர் எடுத்துக் கொடுக்கிறாரா?

வெள்ளைப் புடவையோ, வண்ணப் புடவையோ என் சிந்தனை அதுவல்ல..! திவாகருக்கு- என் கணவருக்கு என்னதான் நிகழ்ந்தது ? ?

பரிகாரம் செய்ய வந்த நம்பூதிரி என்னைப் பார்த்து விட்டு சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன.

“ ஆவி இந்தப் பெண்குட்டி உடம்புல வந்து நினைச்சதை சாதிக்கலாம்.. அது சாத்தியமே.. மத்தபடி இவ இவ்விட இருக்கும்போது மீடியமில்லாமல் எதுவும் செய்ய ஏலாது.. எதுக்கும் ஈ பரிகாரம் செய்யண்டே... ”

அதாவது என் மேல் ஆவி இறங்கி திவாகரை அணுக முடியுமே அன்றி ஆவி தானாக எதுவும் செய்ய முடியாது என்கிறார்.

இது ஒரு புறமிருக்க, அன்றிரவு ஒரு பயத்தில் ஜெனிதா ஆவி என்று அலறி விட்டேனே ஒழிய இன்று பட்டப் பகல் புது வெள்ளமாய்ப் பாய்கிற சூரிய ஒளியில் ஆவி பேயெல்லாம் இருக்கிறதா என்று என் சிந்தனை என்னைச் சித்திரவதை செய்கிறது..!

அந்த கரோலின் பங்களாவில்தான் இதற்கு விடை கிடைக்கும்..

திவாகரின் அலுவலகக் கிளை மேட்டுப்பாளையத்திலும் உண்டு. அந்தக் கம்பெனி தன் பங்குக்கு சில விசாரணைகளை நடத்தியது. திவாகருக்கு, அவர் மரணத்தையொட்டி அந்தக் கம்பெனி ஒரு மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்தது. அதைப் பெற்றுக் கொள்ளவும், திவாகர் ஊட்டியில் அலுவலக வேலையைச் செய்யத் தவறியதால் கம்பெனிக்கு நஷ்டமான இருபதாயிரத்து சொச்சம் அளிக்க வேண்டுமென்றும் கடிதம் வந்திருந்தது. இந்தக் காரியங்களை திவாகரின் நாமினி என்ற முறையில் நான் வந்து முடித்துக் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருந்தனர்.

இந்தக் கடிதமும், விசாரணை விவரமும் வீட்டில் புயலைக் கிளப்பியது.

அப்பாதான் ஆரம்பித்தார்..

“ சம்பந்தி, திவாகருக்கு வேற.. வேற ஏதாவது தொடுப்பிருக்கா ? ? ”

“ சே..சே.. என் பையன் அப்படிப்பட்டவன் இல்ல.. ” இது என் மாமனார்..

“ வேற எப்படிபட்டவன்? ” அப்பா சட்டென்று கோபமானார்.. “ நம்பூதிரி சொன்னதைக் கேட்டீங்க இல்ல, இது ஆவி சமாச்சாரமில்லேங்கிறார்.. சிம்பிள் டிம்ப்பிள் ஹோட்டலுக்கு உங்க கம்பெனி ஃபோன் போட்டு கேட்டுருக்கு.. ஏன்யா எங்க ஸ்டாஃபை ராத்திரி நேரம் ரூமை காலி பண்ணச் சொன்னேன்னு.. ஐயைய்யோ,, நாங்க ஏங்க அப்படிச் சொல்லப் போறோம்? டபிள் பெட்ரூம் எங்க கிட்ட நிறையவே காலியா கிடக்கே.. சிங்கிள் பெட்ரூமை விட டபிள் பெட்ரூம் வாடகை மூணு மடங்கு.. டபிள் பெட்ரூம் நிறைஞ்சாத்தானே எங்களுக்கு லாபம்னு கதர்றாங்க.. அப்புறம் யாரு ?? உதய்னு சொன்னா எம்பொண்ணு.. அப்படீன்னு ஒருத்தன் அந்த ஹோட்டல்ல தங்கவே இல்ல.. என்னய்யா இதெல்லாம் ?? கம்பெனி வேலை கூடப் பார்க்காம ரெண்டு நாள் யார் கிட்ட கூத்தடிச்சிட்டிருந்தார் உங்க பையன்?? எவனோ ஒருத்தன் கூப்பிட்டா இவர் போயிடுவாரா ?? கம்பெனிக்கு ஃபோன் பண்ணி கேக்க மாட்டாரா?? வெறும் டேபிளையும் சேரையும் படமெடுத்து வச்சா பேய்னு நாங்க நம்பிடுவோமா?
திவாகரோட மொபைல் ஃபோன்ல யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம்..

சாராய வாடையடிக்க வீட்டுக்கு வந்து இறங்கறாரு.. வாடகைக்கார்ல...! ”

நான் அப்பாவைத் திரும்பிப் பார்த்தேன்..!

“ ஆமாம்மா.. உனக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவேன்னு உன் கிட்ட சொல்லல.. எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கறீங்களா?? உங்க புள்ளை வண்டவாளமெல்லாம் நீங்களா என் கிட்ட சொல்வீங்க?? திவாகரைக் கைத்தாங்கலா புடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பக்கத்து வீட்டு சார்தான் சொன்னார்.. அவர் என்ன கேட்டார் தெரியுமா? புள்ள மனப்பூர்வமா சம்மதிச்சு தானே இந்தக் கல்யாணம் பண்ணீங்கன்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேக்கறார்...

உங்க நன்மைக்கும் எங்க நல்லதுக்கும் ஒட்டுமொத்தமா சேர்த்துத்தான் விபத்துன்னு புரளி கிளப்பி விட்டேன்.. இது தற்கொலைய்யா... தற்கொலை..! தற்கொலை பண்ணிக்கிற அளவு என்ன வந்தது ??? எதுவாயிருந்தாலும் வாயத் திறந்து நம்ம கிட்ட சொல்றதுக்கென்ன? திவாகருக்கு ஒண்ணுன்னதும் பதறிப் போயி ஓடி வந்து பக்கத்திலேயே இருந்தாளே எம்பொண்ணு...! இவ கிட்ட சொல்றதுக்கென்ன ??? கட்டின பொண்டாட்டி கிட்டக்கூட சொல்ல முடியாத கருமாந்திரம்..! யார் எப்படி மிரட்டுனாங்களோ தற்கொலை பண்ணிகிட்டார்.. இப்ப எம் மக கதியென்ன ?? ” அப்பா மடேர் மடேரென்று தலையிலடித்துக் கொண்டார்..!

என் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்ற ஆற்றாமையில் அவர் கடுமையாகச் சாடினாலும் அவர் பக்கம் நியாயமில்லாமல் இல்லை..

மாமனாரால் பதில் சொல்ல முடியவில்லை..

“ ஐயோ, எனக்கு எதுவுமே தெரியலியே ?? திவாகர் இதுக்கு முன்னாடி ஊட்டிக்குப் போனது கூட இல்லையே? நாங்க கோயமுத்தூர் வந்து ரெண்டு வருசம்தானே ஆகுது.. தெய்வ சந்நிதானத்துல முடிவான கல்யாணம்.. நல்லா இருப்பாங்கன்னு நினைச்சேனே..
தெய்வத்தை கும்பிட வந்த இடத்துல லௌகீகம் பேசறியாடா நாயேன்னு தலையில அடிச்சுட்டாரே கடவுள்.. ! ! ”

மாமனார் புலம்பினார்.

மாமியார் சேலையை வரிந்து முடிந்து கொண்டு நடு ஹாலுக்கு வந்தார்.

“ சம்பந்தி..! எம்புள்ள செத்த வருத்தத்தை விட நீங்க பேசறதுதான் ரொம்ப வேதனையாயிருக்கு.. அவன் அப்படிப்பட்டவன் இல்ல..! நீங்க போலிசுக்கே போங்க..! ”

“ ஹூம்.. இத முதலிலேய வலியுறுத்தியிருக்கணும் நீங்க..! காலம் கடந்திருச்சு.. ”

“ சரி, இப்ப சொல்றேன்.. எம்புள்ள போனது போனதுதான்..! இவ நல்லாயிருக்கணும்.. இவளுக்கு நல்ல வரன் அமைஞ்சா வருசம் திரும்பணுமுன்னு காத்திட்டுருக்காம நாளைக்கே மறு கல்யாணம் முடிச்சிடுங்க..! ! ”

இப்படிச் சொல்லி விட்டு மாமியார் உள்ளே சென்றார்.. வருகிறபோது அவர் கையில் நகைப் பெட்டியும் சில பொருள்களும் இருந்தன. நான் கொண்டு வந்த பொருள்கள்..!

மாமனார் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தரையிலமர்ந்தார். நான் அண்ணனிடம் அவரைத் தூக்கச் சொல்லி கண்ஜாடை காட்டினேன். அவன் சரட்டென்று வெளியே போய் விட்டான்.

நானே மாமனாரைத் தாங்கி கட்டிலில் படுக்க வைத்து தண்ணீர் கொடுத்தேன்..

“ அம்மாடி.. உன் புருசன் கெட்டவனில்லேம்மா... ” என் மாமனார் என் கைகளைப் பற்றிக் கொண்டார்..

தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (17-Aug-17, 11:02 am)
பார்வை : 263

மேலே