எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓணம் வந்தல்லோ ........!!!! தமிழர்களின் அறுவடை திருநாள் பொங்கல்...

ஓணம் வந்தல்லோ ........!!!!

தமிழர்களின் அறுவடை திருநாள் பொங்கல் என்பது போல் மலையாள மக்களின் அறுவடை திருநாளே ஓணம். ஆன்மீக வரலாற்றின் அடிப்படையில் மக்களை காணவரும் மன்னன் மகாபலியை மக்கள் வரவேற்று உபசரித்து அனுப்புவர் என்பது ஐதீகம்.

ஓணம் மொத்தம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.இந்நாட்களில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். சுத்தமான வெண்ணிற ஆடைகளை அணிந்து,திருவாதிரைக் களி செய்து உண்டு வீட்டு பெண்கள் தொடர்ந்து பத்து நாட்களும் வீட்டின் முற்றத்தில் பூக்கோலமிட்டு ஆடி மகிழ்வர்.

மலையாள ஆண்டின் சிங்கம் என்னும் முதல் மாதத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ஓணப் பண்டிகையின் முதல் நாள் அதம் என்றும், இரண்டாம் நாள் சித்திரா என்றும் மூன்றாம் நாள் ச்சோடி என்றும் அழைக்கப்படுகிறது. மூன்றாம் நாள் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்கி இன்புறுவர். நான்காம் நாளான விசாகம் அன்று ஒன்பது சுவைகளில் உணவு தயாரிக்கப்படுகிறது. இதில் அரிசி சோறு முக்கியமான உணவு வகையாகும்,குறைந்தபட்சம் 64 வகையான உணவுகள் இந்த பட்டியலில் இடம் பெறுகின்றன.

ஐந்தாம் நாளான அனிளம் அன்று புகழ்பெற்ற நீண்ட படகுகள் பங்கேற்கும் படகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. படகு செலுத்துபவர்கள் வஞ்சிப்பாட்டு என்னும் பாடலைப் பாடியவாறே போட்டியில் கலந்து கொள்வர்.

ஆறாம் நாள் திரிகெட்டா என்றும் ஏழாம் நாள் மூலம் என்றும் எட்டாம், ஒன்பதாம் நாட்கள் பூரடம், உத்ராடம் என்றும் அழைக்கப்படுகின்றன.

பத்தாவது நாள் திருவோணம். அதுவே ஓணம் பண்டிகையின் கடைசி நாள்.திருவோணம் பண்டிகையே பெரும் சிறப்பாக வெகு விமர்சையாக கொண்டாடுகிறது.

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சங்களுள் ஒன்று யானைகள் ஊர்வலம் ஆகும். யானைகள் தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றன.


மன்னன் மகாபலி ஆண்ட காலமே கேரளத்தின் வசந்த காலம் என்று கருதபடுவதால்,மக்கள் தங்கள் மன்னனை நினைவுகூறும் விதமாக ஓணம் திருநாளன்று மகாபலி மன்னன் பற்றிய பாடலை பாடி மகிழ்கின்றனர்.பாடல் பின்வருமாறு

"எங்கள் மகாபலி மன்னனே

நம் மண்ணை ஆளும் போது

யாவரும் சமம், கருணையுடன்-

இன்புற்று வாழ்ந்தனரே மக்கள்,

நோயில்லை நொடியில்லை

எண்ணத்திலோ தீங்கில்லை

உற்றாரை ஏய்க்கும் குணமில்லை.

எங்கள் மகாபலி மன்னன் ஆளுகையில்

யாவரும் ஓர் குடி மக்களே ! " என்பதே அப்பாடல்.

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 7-Sep-14, 9:44 pm

மேலே