எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிஞர் குட்டி ரேவதியின் முகநூல் பதிவு : *******************************************************...


கவிஞர் குட்டி ரேவதியின் முகநூல் பதிவு :
*******************************************************

நம் கவிதைகள் ஏன் விலைபோவதில்லை?

கவிதைகள் விற்பதில்லையே என்பது கவிஞர்களையும் பதிப்பாளர்களையும் காலங்காலமாய் ஆதங்கம் கொள்ளவைத்த விடயம்.

உண்மையில், கவிதையை விற்று அதில் வாழ்வை நடத்துவது என்பதோ, கவிதையை ஒரு வாழ்வாதாரமாகக் கொள்வோம் என்பதோ சுவையான ஒரு கற்பனை அல்லது நகைச்சுவையே.

விற்பனை என்பதற்கு ஒவ்வாதவை கவிதைகள் என்பதை உணர எனக்கும் பல நூல்கள் பிடித்தன.

கவிதையில் வேரூன்றவும், திளைக்கவும் அதை ஓர் ஊதிய ஊற்றாகக் கொள்ளாமல் இருப்பது அவசியம்.

கவிதையைக் கூவிக்கூவி விற்கும்பொழுதும், தம் கவிதைகளை இன்னொரு கவிஞனின் கவிதைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் இடத்திலும், கவிதையைப் போற்றும் இடத்தில் அகங்காரம் கொள்ளும்பொழுதும், கவிதைக்கு அங்கீகாரம் தேடி அலையும் பொழுதும், கவிதை தற்கொலை செய்து கொள்கிறது.

கவிதையை எழுதும் பணியுடன் கவிஞனின் வேலை முடிந்தது என்பதை அக்கவிஞன் அறிந்திருக்கிறானா என்பதை அவன் கவிதை பரிசோதித்துப் பார்க்கிறது.
அதையே விரும்புகிறது.

தனக்குத்தானே தன் கவிதையை வாசித்துப் புளகாங்கிதம் கொள்வதைவிட, மற்ற கவிஞனின் கவிதையை உரக்கவாசிக்கிறானா என்று உற்றுநோக்குகிறது.

கவிதைகள், காய்கறிகளைப் போல கூடையில் தூக்கிச் சுமக்கும் விற்பனைப் பொருள் இல்லை.

கவிதை சமூகத்தைச் சென்று சேர, கவிதை நடந்து செல்லவேண்டியை பாதையைத்தான் செப்பனிட வேண்டியிருக்கிறதே தவிர, கவிதைகள் குறித்து ஏதும் செய்யாதீர்கள் என்று கவிதை மன்றாடுகிறது.

ஆனால், ஒரு பக்கம் கவிதையை எழுதிக்கொண்டு இன்னொரு பக்கம் காய்கறிகளை விற்கலாம்.

இதை ஒரு சிலரே, காலத்தில் முன்னும் பின்னும் செய்திருக்கின்றனர். செய்யமுடிந்திருக்கிறது.

நாவல், சிறுகதை போல கவிதை ஓர் இலக்கிய வகை இல்லை என்பதையும் கவிஞனுக்கு விசிறிகள் அவசியம் இல்லை என்பதையும் உணர்ந்த கவிஞனின் மிடுக்கும், கம்பீரமும், சமரசமின்மையும் அவன் கவிதைகளுக்கும் அவசியப்படுகிறது.

ஒரு சமூகத்தைச் சேர்ந்த கவிஞன், சமூகத்தின் முன் இரந்து நிற்கும் போதும், மிடுக்கு குலையும் போதும் அவன் சமகால கவிஞர்கள் எல்லோரும் கூட அவனுடன் தோற்றுப்போகின்றனர்.

ஏன் நம் கவிதைகள் விலைபோவதில்லை? ஏனெனில், அவை விற்பனைக்குரியவை இல்லை.

வைரங்கள் என்று நாம் மதிக்கவிரும்புவதைத் தெருவில் கூவி விற்போமா.

நாள் : 30-Aug-15, 4:07 pm

மேலே